யுவால் நோவா ஒரு வரலாற்றியலாளர் மற்றும் தத்துவவியலாளரும்கூட.
பன்னாட்டு அளவில் இவரது நூல்கள் குறிப்பாக ‘சேப்பியன்ஸ்; மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’, ‘ேஹாமோடியல்; வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’; ‘21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ ஆகிய நூல்களை எழுதி உலகப் புகழ் பெறும் கருத்தாளர்.
இவருடைய புத்தகங்கள் 65 மொழிகளில் 4.5 கோடி பிரதிகள் இதுவரை விற்பனையாகி உள்ளன!
கல்வி மற்றும் கதை சொல்லுதல்மீது கவனம் செலுத்துகின்ற – சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ‘சேப்பியன்ஷிப்’ என்ற ஒரு பன்னாட்டு அமைப்பை இவர் தனது வாழ்விணையரான இட்சின்யாஹாவுடன் இணைந்து நிறுவியுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் ஒரு முனைவர் பட்டம் பெற்றுள்ள ஹராரி, தற்போது ஜெருசலம் ஹீப்ரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஒரு விரிவுரையாளராகவும், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு மய்யத்தில் (இருத்தல் சார் ஆய்வு மய்யத்தில்) மேன்மைமிகு ஆய்வாளராகவும் உள்ளார்.
இவரது புதிய அண்மை நூல் ‘NEXUS’ என்ற 492 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூல். சமூக வளர்ச்சி தற்காலத்தில் எப்படியெல்லாம் பல்வேறு உருவாக்கங்களையும், தாக்கங்களையும் பிணைத்து நடைபெறுகிறது என்பதை மய்யப்படுத்தி ‘பிணைப்பு (Nexus)’ என்ற தலைப்பில் சென்ற ஆண்டு (2024) இறுதியில் வெளி வந்தது. டோக்கியோவிலிருந்து சிங்கப்பூர் வழியே திரும்பிய நான் அதனைப் பெற்று படித்தேன்.
முற்றிலும் புதிய கோணம்; அரிய தகவல்கள். அண்மைக் கால அறிவியல் தொழில் நுட்பவியல் வளர்ச்சியில் நாம் உண்மை எது, பொய் எது என்று சலித்து, புடைத்து, ‘கற்களை’ப் பொறுக்கி, நமது சொந்த அறிவுக்கு சோதனைகளை ஏற்படுத்தித் தீர வேண்டிய யுகம் இது என்கிறார் சிறப்பாக யுவால்நோவா ஹராரி அவர்கள்!
அதை இவ்வளவு விரைவில் தனது 100ஆவது மொழிபெயர்ப்பு நூலாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொடையாகத் தந்துள்ளார் – அற்புதமான அறிவுத் தொண்டறம் புரிந்துள்ள மொழி பெயர்ப்புக் கலையின் உச்சத்து ராணிபோல் உயர்ந்து நிற்கும் சகோதரி திருமிகு நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.
மலையேறுபவர்கள் சலிக்காது, சறுக்காது, பாதுகாப்பாக ஏறி இறங்கி சாதனை புரிவதுபோல், இந்நூல் வெற்றியின் முகட்டை இந்த 100ஆவது நூல் மூலம் முத்தமிட்டு மகிழ்கிறார்.
அவருக்கு நமது ஆயிரம் (10 மடங்கு) பாராட்டும் வாழ்த்தும்!
ஆங்கில நூலின் தலைப்பை (யுவால் நோவா ஹாரரி) எப்படி தந்தாரோ அப்படியே தமிழில் ‘நெக்சஸ்’ என்றே கொடுத்ததுதான் சற்று வியப்பாக உள்ளது.
கடினமான கருத்தியல் மொழியாக்கம், நல்ல முறையில் பற்பல விடயங்களிலும் அதனை லாவகமாகக் கையாண்டு படிக்கும் வாசகர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தத் தவறவில்லை.
எடுத்துக்காட்டாக,
நான் ஆங்கில Nexus நூலைப் படித்தபோது அதில் Disinformation – Misinformation என தற்போதைய காலத்தில் மிகுதியும் நடைமுறையில் உள்ள இவ்இரண்டையும் பற்றி நூலாசிரியர் எப்படி விளக்கினார்?
தவறான தகவலைத் தெரியாமலே தருவதுதான் Misinformation,
தெரிந்தும் விஷமத்திற்காகவே தகவலை மாற்றி பரப்புரைத் தகவல் தருவதே Disinformation
இதனை மொழிபெயர்ப்பாளரான திருமிகு நாகலட்சுமி அவர்கள் எப்படி தரப் போகிறார் என்று ஆவலுடன் ஒப்பீடு நோக்கில் படித்துப் பார்த்தேன்.
மிக அருமையாகத் தந்துள்ளார்! தவறான தகவல்கள் அல்லது ‘பொய்யான தகவல்கள்’ என்பனவற்றின் தன்மைகளை பாகுபடுத்தி விளக்கியுள்ளார்.
தமிழ்நூல் பக்கம் 48–இல் –
‘தவறான தகவல் – Misinformation என்பது ஒரு நேர்மையான தவறு; ஒருவர் யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிக்கும்போது, அவர் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதால் ஏற்படுகின்ற தவறு அது;
பொய்யான தகவல் – Disinformation என்பது வேண்டுமென்றே திரிக்க முற்படும்போது அது நிகழ்கிறது என்று நன்கு விளக்குகிறார்!
ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு போதுமே!
இப்புத்தகம் ஓர் அற்புதமான நவீன யுகம் பற்றிய தகவல்களின் களஞ்சியம்!
புராணங்களுக்கும், அதிகார வர்க்கத்திற்குமான பிணைப்பு எப்படிப்பட்டது என்பதை விலா வாரியாக விளக்கும் சுவையான தகவல்கள் நம்மை சொக்க வைக்கின்றன – வாங்கிப் படியுங்கள்.
புறா எப்படி முன்பு போர்க்கால தகவலாளியாகப் பயன்பட்டது என்பதில் தொடங்கி எத்தனையோ சுவையான தகவல்கள்.
நல்ல ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் ‘மஞ்சுள் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள நல்ல நூல். வாங்கி படித்துப் பயன் பெறுங்கள். இந்நூல் தமிழ் வாசகர்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசு!
‘பிணைப்புகள்’ – ஒரு வரலாற்றுப் பிணைப்பு என்றும் கூட தமிழில் தலைப்புடன் ‘நெக்சஸ்’ என்பதற்குப் பதிலாக இருக்கலாமே!
பலவற்றை தமிழ்ப்படுத்தியுள்ளபோது தலைப்பு மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்பது நியாயமான கேள்வி!