‘‘நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாக உள்ளது’’ என ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார்.
கருநாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர், குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒன்றிய பெண் அமைச்சராக இருக்கும் ஷோபா கரந்த்லாஜே ஷிமோகாவில் செய்தியாளர் சந்திப்பின்போது “வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம், அதிகமானோர் கல்வி கற்கிறார்கள்.
பெண்கள் ஆண்கள் எனப் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் ‘‘அவசியமானவர்கள் மட்டுமே படித்தனர். ஆகையால் எளிதாக வேலை கிடைத்தது. ஆனால் இன்று அப்படி அல்ல எல்லோரும் பட்டப் படிப்பு படித்து விடுகின்றனர். ஆகையால் நாடு சிக்கலை எதிர்கொள்கிறது’’ என்றார்.
தமிழர்கள் கருநாடகத்தில் குண்டுவைக்க பயிற்சி கொடுக்கின்றனர் என்று கூறி, பின்னர் மன்னிப்புக் கேட்டவர் இவர் தான்.
ஏற்ெகனவே பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் நடிகையுமான ஹேமா மாலினி மறைமுகமாக தேவையானவற்றைக் கற்றுக்கொண்டால் எளிதில் வேலை கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
தற்போது எல்லோரும் படித்தால் வேலை எப்படிக் கிடைக்கும் என்று ஒன்றிய அமைச்சரே கேள்வி எழுப்புகிறார்.
ஒரு பெண் அமைச்சராக இருந்து கொண்டு இப்படிக் கூறுகிறார் என்றால், எத்தகைய வெட்கக் கேடு!
ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொன்னவர்தான், இவர் ஒன்றிய அமைச்சராக இருக்கும் அரசின் பிரதமர் நரேந்திர மோடி!
சொன்னதை சாதிக்க முடியவில்லை என்பதால், இப்படிக் குறுக்குச்சால் ஓட்டுகிறாரா?
எல்லோருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஓர் அரசின் கொள்கையாகவும், திட்டமாகவும் இருக்க வேண்டும். ஆனால் பிஜேபி அமைச்சரவையில் இருக்கும் ஓர் அமைச்சரோ தலைகீழாகப் புரட்டிச் சொல்லுகிறார்.
இவர்மீது குற்றம் இல்லை; இவர் சார்ந்திருக்கும் பிஜேபி என்பது ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்வாவை அடிப்படையாகக் கொண்ட தாய் அமைப்பின் சேயாகும்.
ஹிந்துத்துவா என்பது எல்லோரும் படிக்கக் கூடாது; குறிப்பாகப் பெண்கள் அறவே படிக்கக் கூடாது என்னும் மனுதர்மத்தை வழி காட்டியாகக் கொண்டதாகும்.
அதனால் இவர்களின் சிந்தனை எல்லாம் அதனை ஒட்டியதாகத்தானே இருக்க முடியும்!
பால்யத்தில் தகப்பனாரின் ஆக்ஞையிலும், யெளவனத்தில் கணவரின் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். (அத்தியாயம் 5 – சுலோகம் 148).
இந்த சாஸ்திரத்தை மதிக்கும், கட்சியைச் சேர்ந்த பெண்மணி அமைச்சராகவே இருக்க முடியாது என்பதை மறந்து பேசலாமா?
மக்கள் தொகையில் 50 விழுக்காடு இருக்கும் பெண்கள் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பலின் பிற்போக்குத்தனத்தை அடையாளம் காண வேண்டும்.