தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை
சென்னை,ஜன.30- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
“சிதம்பரத்தில் நடைபெற்ற சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது, ‘சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு தீய சக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
சமூகநீதி
தமிழ்நாட்டை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதி பெற்றுத் தருவதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
அரசமைப்புச் சட்டம் 1950இல் அமலுக்கு வந்தவுடனே கம்யூனல் ஜி.ஒ. செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய போது, அதற்கு எதிராக திருச்சியில் போராட்டம் நடத்தியவர் பெரியார்.
அந்த போராட்ட உணர்வை பண்டித நேருவிடம் காமராஜர் எடுத்துக் கூறி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.
இன்றைக்கு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த பெருமை தமிழ் நாட்டையே சாரும்.
அப்படிப்பட்ட வரலாறு படைத்த தமிழ்நாட்டை ஒரு தீயசக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்று ஆளுநர் யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.
பெரியார் பெயர்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாராயண குருவைப் பற்றி பேசுகிற ஆளுநர், திருவள்ளுவர், வள்ளலார், தந்தை பெரியார் பெயரை உச்சரிக்க மறுக்கிறார். ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சராக வர வேண்டுமென்று கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பு வகித்து வருகிறார்.
அகில இந்திய பா.ஜ.க. தலைமையையோ, தமிழ்நாடு பா.ஜ.க. தலைமையையோ ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு வழங்க
ஆர்.என்.ரவி பரிந்துரை செய்வாரா? அல்லது குறைந்தபட்சம் தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விலகி அந்த பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரை நியமிக்க பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்வாரா?
முற்றுகைப் போராட்டம்
தமிழ்நாடு ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி பதவி வகிப்பவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அல்ல. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அமைச்சர வையின் அறிவுரை இல்லாமல் எந்த செயலையும் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
அப்படியிருக்கும் போது தமிழ்நாடு அரசுக்கு எதிராக நாள்தோறும் ஒரு எதிர்கட்சித் தலைவரைப் போல கருத்து தெரிவித்து வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை என்பது, தமிழ்நாடு பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாறி வருவதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
பொது மேடைகளில் சராசரி அரசியல்வாதி யைப் போல தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு எதிர்கட்சியைச் சார்ந்தவரைப் போல அவர் தொடர்ந்து பேசுவாரேயானால், அவர் சுற்றுப் பயணம் செய்கிற இடங்களிலெல்லாம் தமிழ்நாடு மக்கள் திரண்டெழுந்து முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு ஆளுநரை எச்சரிக்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.