காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று (ஜன.30)! தீண்டாமையை எதிர்த்தாலும், வருணாசிரமத்தில் நம்பிக்கை உடைய காந்தி!

Viduthalai
4 Min Read

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்று காந்தியார் சொன்ன பிறகுதான் படுகொலை செய்யப்பட்டார்!
தமிழ்நாட்டில் மதக்கலவரம் அப்பொழுது ஏற்படாமல் தடுத்தவர் தந்தை பெரியார்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தீண்டாமை ஒழிப்பில் காந்தியார் நம்பிக்கை உடையவராக இருந்தாலும், வருணாசிரமத்தில் நம்பிக்கை உடையவராகவே இருந்தார். சுதந்திர இந்தியா மதச்சார்பின்மைக் கொள்கை உடையதாக இருக்கும் என்று காந்தியார் சொன்ன நிலையில், ஒரு மாத காலத்திற்குள் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மதக் கலவரம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தியவர் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

மதவெறியும், மூடநம்பிக்கையும் மனித குலத்தின் கொடிய விரோதிகள்; அவை தம் கோரப்பசிக்கு மனிதர்களின் உயிரையே விலை கேட்டு விழுங்கும்!
அனைத்து மக்களாலும் மதிக்கப்படுபவர் அண்ணல் காந்தியார்!
இன்று ‘நாட்டுத் தந்தை’ என்று அனைத்து மக்களாலும் மதிக்கப்படுபவர் அண்ணல் காந்தியார்.
அவரை ஹிந்து மதவெறி– ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே என்ற புனேவைச் சேர்ந்த – உயர்ஜாதி என்று அழைக்கப்படும் சித்பவன் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர் சுட்டுக் கொன்ற துயர நாள் இந்நாள் (ஜன.30, 1948).
நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், காந்தியின் பரவும் செல்வாக்கும், அவரது பிரச்சாரமும் ஹிந்து மதத்தின் செல்வாக்குக்கு எதிராக அமையும் என்று கூறி, தான் இக்காரியத்தைச் செய்ததற்குத் தனக்கு ஊக்கச் சக்தியாக அமைந்தது ‘பகவத் கீதை’ என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
‘‘May It Please Your Honor’’ என்ற தலைப்பில், நீதிமன்றத்தில் அவரது நீண்ட வாக்குமூலம் நூலாகவே வெளிவந்துள்ளது.

காந்தியாரின் படுகொலைபற்றி, தந்தை பெரியார் டைரியில் பதிவு
தந்தை பெரியார் அவர்கள், அவருடைய டைரியிலேயே காந்தியாரின் படுகொலைபற்றி பதிவு செய்த குறிப்புகளில், 1.வகுப்புரிமை 2. மதத்தை அரசியலில் கலக்கக் கூடாது என்பன போன்ற கருத்துகளை வெளியிட்ட காந்தியாரை ஒரே மாதத்தில் மதவெறி கொன்றது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்து மதத்தின் முக்கிய அம்சமான வருணாசிரம தர்மத்தை முழுமையாக ஆதரித்து வந்தார் காந்தியார் – தீண்டாமை ஒழிப்புப்பற்றி பிரச்சாரம் செய்தவர்தான்! (இது ஒரு சுய முரண்பாடு).
வருணாசிரமம் என்பதுதான் ஹிந்து மதத்தின் முக்கிய கூறுபாடு.
தந்தை பெரியாரும், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரும் காந்தியாரை கடுமையாக எதிர்த்ததற்கும், விமர்சித்ததற்கும் காரணம், காந்தியாரின் வருணாசிரமக் கொள்கைக்காகவே!
இறுதிக் காலத்தில் காந்தியார் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கொடுமை, தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழ்நாட்டுப் பார்ப்பன ஆதிக்க வன்கொடுமையைப் புள்ளி விவர ரீதியாக – ஓமாந்தூரார் ஆட்சிக் காலத்தில் அவர் உணர்ந்ததின் விளைவாகவே மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது!

பார்ப்பனர் ஆதிக்கத்தைக் கண்டித்த காந்தியார்!
அத்துடன் ஹிந்து மதவெறி சக்திகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற நாட்டை, ஒரு சார்பு மதச் சார்பு நாடாக மாற்ற செய்த முயற்சிகள்பற்றி அறிந்த நிலையிலேதான் இறுதியாக அவர் பார்ப்பனர் ஆதிக்கத்திற்காக அவர்களைக் கண்டித்தார்.

தமிழ்நாடு கலவர பூமியாகாமல் தடுத்தார் பெரியார்
பிறகு அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில், தொடக்கத்தில் காந்தியைக் கொன்றவர்பற்றி மற்ற மதத்தவர்மீது பழிபோடப்பட்டு, மதக் கலவரங்கள் திருவண்ணாமலை, ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு போன்ற ஊர்களில் பரவிடும் நிலையில், தந்தை பெரியாரிடம், தமிழ்நாட்டு காங்கிரஸ் முதலமைச்சர் ஓமாந்தூர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் வானொலிமூலம் வேண்டுகோள் விடுக்கக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமைதி காக்க மக்களுக்கு அறிவுரை, அறவுரை வழங்கி, தமிழ்நாடு கலவர பூமியாகாமல் தடுத்தார் பெரியார்.
மராத்தியத்தில் பல ஊர்களில் அக்கிரகாரங்கள் தாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு எதிரான தாக்குதல்கள் – விரும்பத்தகாத நிலைகள் ஏற்பட்டன. (‘‘மொரார்ஜிதேசாய் சுயசரிதை’’ – ஆதாரம்).

அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ செயல்பட்டார்!
தமிழ்நாட்டில், கோட்சேபற்றி செய்தி வெளியான பின்பும், தந்தை பெரியார் தனிப்பட்ட முறையில் பார்ப்பன சமூகத்தினருக்கு எதிராக எதிர்வினையில் இறங்கக்கூடாது என்று பல பொதுக்கூட்டங்களில் விளக்கிக் கூறி, அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ செயல்பட்டார்!
அதுதான் இன்றும் ‘திராவிட மாடல்‘ ஆட்சியில் தொடர்ந்து வரும் சிறப்பு நிலை.

மண்ணாங்கட்டிகளைத் தவிர,
மற்ற எல்லா மக்களுக்கும் புரியும்!
‘வடபுலத்தில் ஹிந்து சாயா, முஸ்லீம் சாயா’ என்று புகை வண்டி நிலையங்களில் கூவி விற்ற கொடுமை போல, இங்கு என்றும் ஏற்பட்டதே இல்லை; காரணம், ‘திராவிடம்’ என்ற சமத்துவத் தத்துவத்தின் அடிப்படையில், தந்தை பெரியாரின் மண்ணாக இன்றும் தமிழ்நாடு விளங்குகிறது என்பது சில மண்ணாங்கட்டிகளைத் தவிர, மற்ற எல்லா மக்களுக்கும் புரியும்.
நம் நாட்டில் மதவெறி மீண்டும் மத விழாக்கள் மூலமாக மறைமுகமாக விசிறி விடப்படுகின்றது.
‘மதச்சார்பற்ற அரசு’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமே சிதறும், ‘‘ஹிந்து ராஜ்ஜியமாகவே’’ ஆக்கப்படும் என்பதை, தங்களிடம் ஆட்சி வசப்பட்டுள்ளது என்பதை வைத்து, பல முயற்சிகள் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன.
இல்லாவிட்டால், ‘‘இந்தியாவின் சுதந்திர நாள் எனக்கு உண்மையில் சுதந்திர நாளில்லை; இராமர் கோவிலை – பாபர் மசூதி இடித்த இடத்தில் கட்டி முடித்த நாள்தான் எனக்கு சுதந்திர நாள்’’ என்று மதவெறியை பச்சையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுகிறார். அதற்கு ‘‘தேச பக்த திலகங்கள்’’ ‘‘பாரத மாதா புத்திரர்கள்’’ எவரும் இன்றுவரை மறுப்பேதும் சொல்லவில்லையே!

மாண்டவர்களுக்கு நமது ஆழ்ந்து இரங்கல்!
மவுனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே! அதனால்தான், கோவில்கள், பண்டிகைகள், ‘மேளாக்கள்’ என்பவை பக்திக்காக என்பது பாமர மக்களுக்கு மட்டும்; மதவெறி பரப்பி, அந்த போதையிலிருந்து மக்களை மீளாமல் வைத்திருக்கவே கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகள் – பல உயிர்கள் நெரிசலில் மாண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
மாண்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நமது ஆழ்ந்த இரங்கல்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 
30.1.2025 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *