சென்னை, ஜன.29- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.1,635 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை செயற்படுத்துவதில் எப்போதும் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் ஆண்டில் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஊதியத்திற்கான நிதியினை உடனடியாக விடுவிக்கக் கோரி கடந்த 13ஆம் தேதி கடிதம் வாயிலாக இந்திய பிரதமரை கேட்டுக்கொண்டார்.
ஒன்றிய நிதி அமைச்சருடன் சந்திப்பு
இன்றைய தேதி வரை நிதி விடுவிக்கப்படாத நிலையில் 27.1.2025 அன்று டில்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவை தொகையான ரூ.1,635 கோடியினை உடனடியாக விடுவிக்கக் கோரியும், 2024-2025ஆம் ஆண்டிற்கு கூடுதல் மனித சக்தி நாள்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டுமெனவும் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கடிதம் அளித்துக் கேட்டுக்கொண்டனர். அப்போது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.எஸ்.யாதவ் உடன் இருந்தார்.
ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த பீகார் முதலமைச்சர்
பாட்னா, ஜன. 29- பீகார் தலைநகர் பாட்னாவில் குடியரசு தின விழா நடந்தது. இதில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி மாலையில் நடந்தது. தேநீர் விருந்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
முதலமைச்சரின் வீட்டுக்கு அருகேதான் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் பங்கேற்காதது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தாழ்த்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கும் அவர் செல்வார். இந்த ஆண்டு அந்தப் பகுதிக்கும் அவர் செல்லவில்லை.
இதுகுறித்து முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தபோதிலும் காலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றன.