சென்னை, ஜன. 29- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100ஆவது செயற்கை கோள் இன்று (29.1.2025) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங் களில் துல்லியமாக தகவல்களை தெரிவிக்கும். இஸ்ரோவின் ராக்கெட், என்.வி.எஸ். 02 செயற் கைக்கோளை சுமந்து சென்றது.
100ஆவது ராக்கெட்
இஸ்ரோவின் புதிய தலைவ ராக அண்மையில் பொறுப் பேற்றுக் கொண்ட நாராயணன் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கை கோள் இது ஆகும். இஸ்ரோவின் 100ஆவது செயற்கை கோள் மற்றும் 2025ஆம் ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்திய முதல் செயற்கை கோள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டு இஸ்ரோவின் முதல் திட்டம் வெற்றி பெற்றதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்த ராக்கெட் சுமந்து சென்ற என்.எஸ்.வி.-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இது 100ஆவது திட்டம் என்பதால் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி அனைத்து சிஸ்டம் களும் திட்டமிட்டப்படி இயங்கி வருகிறது,” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
வெற்றிகரமாக நிலைநிறுத்தியது
முன்னதாக, 27.30 மணி நேர கவுண்ட்டவுன் முடிவுற்ற நிலையில், 50.9 அடி உயரமான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், இன்று (29.1.2025) காலை 6.23 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
மேகமூட்டமான வானத்தில் சுமார் 19 நிமிடங்கள் பயணித்த பிறகு, ராக்கெட் அது சுமந்து சென்ற என்.வி.எஸ்.-02 (NVS-02) வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. என்.வி.எஸ்.-02 செயற்கைக்கோளின் முக்கிய பயன்பாடுகளாக நிலப்பரப்பு, வான்வழி மற்றும் கடல்சார் வழிசெலுத்தல், விவசாயம், கடற்படை மேலாண்மை, மொபைல் சாதனங்களில் இருப்பிட அடிப்படையிலான சேவைகள், செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயம், இண்டர்நெட் ஆஃப்-திங்ஸ் (IoT) அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் அவசர கால சேவைகள் உள்ளிட்டவை அடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.