திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டத்தான்!
விழுப்புரம்: அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
விழுப்புரம், ஜன. 29 திராவிட இயக்கம் பிறந்ததே சமூக நீதிக்காகத்தான்! திராவிடம் இருப்பதால்தான், ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால் தமிழ்நாட்டில் தலை தூக்க முடியவில்லை என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.1.2025) விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை வருமாறு:.
ஏ.கோவிந்தசாமி மணிமண்டபம், சிலை திறப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழா, கொள்கைக் குன்றம் ஏஜி என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய ஏ.கோவிந்தசாமி அவர்களின் மணிமண்டபம், சிலை திறப்பு விழா, இட ஒதுக்கீட்டிற்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்திருக்கக்கூடிய 21 தியாகச் செம்மல்களுக்கு மணிமண்டபமும், சிலையினை திறக்கக்கூடிய விழாவையும் இணைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரி ஆட்சி செய்த மலையமான் நாடும், வீரத்தின் விளைநிலமான ராஜா தேசிங்கு ஆட்சி செய்த பகுதியும் கொண்டது இந்த விழுப்புரம் மாவட்டம்! இந்த விழுப்புரத்திற்கு எத்தனையோ இலக்கியப் புகழும் வரலாற்றுப்
பெருமையும் இருக்கிறது…
கல்வெட்டுகளுக்கு கல்தொண்டூர்!
குடவரைக் கோயில்களுக்கு மண்டகப்பட்டு!
பழைய கோயில்களுக்கு பனைமலை!
பாறை ஓவியங்களுக்கு கீழ்வாலை!
வரலாற்றுப் பெருமைக்கு திருவக்கரை!
இலக்கியத்துக்கு தண்டபாணி சுவாமிகள்!
நல்லாட்சியின் இலக்கணத்துக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!
திராவிட அரசியலுக்கு மதிப்பிற்குரிய ஏ.ஜி என அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்கள்.
இப்படி விழுப்புரம் மண்ணின் பெருமைகளைப் பட்டியலிட்டால் நாளும் பொழுதும் போதாது! அப்படிப்பட்ட இந்த மண்ணில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்!
இந்த விழா, திராவிட இயக்க தீரர் `ஏ.ஜி.’ என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய ஏ.கோவிந்தசாமி அவர்களின் சிலையுடன் கூடிய நினைவரங்கம் கட்டப்பட்டு அவருடைய திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது.
35,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கான திறப்பு விழா. 35,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல். 425 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா. 133 கோடி மதிப்பிலான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா. இந்த சிறப்புமிகு விழாவை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கின்ற என்னுடைய ஆருயிர் சகோதரர், ஒருங்கிணைந்த இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, உள்ளிட்ட மாவட்டத்தின் அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள்.
அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி அவர்கள் மாணவராக திராவிட இயக்கப் பாதையில் நடக்கத் தொடங்கி, இன்றைக்கும் துடிப்புமிக்க போராளியாக செயலாற்றக்கூடியவர். அவரைப் பற்றி தலைவர் கலைஞர் சொன்னதைத் தான் நான் நினைவுப்படுத்துகிறேன்.
“ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி!”
“ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி!” அப்படிப்பட்ட நம்முடைய பொன்முடி அவர்களோடு இந்த விழுப்புரம் மாவட்ட முன்னேற்றத்திற்காக பணியாற்றி வரக்கூடிய மாவட்ட ஆட்சியர் பழனி, மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வாழ்நாள் முழுக்க நான் எண்ணி எண்ணி பெருமைப்படக் கூடிய நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது! ஏனென்றால், மரியாதைக்குரிய ஏ.ஜி அவர்களின் மணிமண்டபத்தை திறக்கும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். திராவிட இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவராக ஏ.கோவிந்தசாமி அவர்கள் இருந்திருக்கிறார்! 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரைக்கு நான் வந்தபோது நம்முடைய ‘திராவிட ஆழ்வார்’ ஜெகத்ரட்சகன் அவர்களும், இன்றைக்கு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தம்பி அன்னியூர் சிவா அவர்களும் என்னை சந்தித்து, ஏ.ஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்கள். அப்போது தி.மு.க. எதிர்க்கட்சி. கழக ஆட்சி அமைந்ததும் நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று நான் சொன்னேன். உறுதி அளித்தேன். இதோ… இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறேன்!
ஏ.ஜி. அவர்களுக்கும், தி.மு.க.வுக்குமான கொள்கை உறவு ஏற்பட்டதை நினைத்துப் பார்க்கிறேன்…
தொடக்க காலத்தில் தேர்தல் அரசியலுக்கு நாம் வரவில்லை!
1949-இல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும், தொடக்க காலத்தில் தேர்தல் அரசியலுக்கு நாம் வரவில்லை… கழக கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களை தேர்தலில் ஆதரித்தோம். அப்போது, தி.மு.க. கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக கையெழுத்து போட்டுத் தந்து வெற்றி பெற்று, கழகக் கொள்கைகளுக்காகவும், தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொல்லியும் சட்டமன்றத்தில் தொடர்ந்து முழங்கியவர்தான் ஏ.ஜி. அவர்கள். இன்றைக்கு தமிழ்நாட்டிற்கே ஒளி தரும் உதயசூரியன் சின்னத்தில் முதலில் நின்று வென்றவர் நம்முடைய ஏ.ஜி. அவர்கள்!
‘கொள்கைக் குன்றம்’ ஏ.ஜி. அவர்களைப் பற்றி நம்முடைய தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால்… “மாற்றார் கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு மிக நேர்மையோடு, ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு நடந்து கொண்டவர்” என்று சொன்னார். “அடக்கமும் அன்பும் நிறைந்த என் ஆருயிர் தோழர்” என்று தலைவர் கலைஞர் சொன்னார். பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம் வகித்தவர். திடீரென்று அவர் மறைவுற்றபோது தலைவர் கலைஞர் துடித்து போய்விட்டார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்துக்கு நிதி திரட்டித் தரும் முயற்சியை தி.மு.க. தலைமைக் கழகம் எடுத்தது. அப்படி நிதி திரட்டித் தந்தவர்களில் நானும் ஒருவன்.
எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, சிறுவனாக இருந்தபோது, மாணவப் பருவதத்தில் இருந்தபோது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில், சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற ராம் தியேட்டரில் நாடோடி மன்னன் படத்தை காலைக் காட்சியாக திரையிட்டு, அதன் மூலமாக கிடைத்த நிதியை நான் கொண்டு சென்று தலைவர் கலைஞரிடத்தில் கொடுத்தேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இட்ட பணியை தட்டாமல் செய்து முடிப்பதுதான் தன்னுடைய ஒரே வேலை என்று வாழ்ந்த ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு கழக அரசு மணிமண்டபம் அமைப்பதும், அதை நான் திறந்து வைப்பதும்
எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!
திமுக ஆட்சியின் வரலாறு!
அடுத்து, 21 சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்கள் தங்களின் சமூகநீதி உரிமையைக் கேட்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போராடியபோது, காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 1987-ஆம் ஆண்டு இது நடந்தது. வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைக்கு அன்றைக்கு அ.தி.மு.க. அரசு செவிமடுக்கவில்லை. 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர், “திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்தார்.
சொன்னதுபோல், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த 43-ஆவது நாளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாறுதான் கலைஞருடைய வரலாறு! திமுக ஆட்சியின் வரலாறு!
13.3.1989 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற முடிவாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர்மரபினருக்கும் 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து, வேலைக்கு சென்று முன்னேற கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடு தான் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இது மட்டுமா… உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் கருணைத் தொகையும் மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதிப் போராளிகள் பட்டமும் வழங்கப்பட்டது.
சமூகநீதிப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு…
2021-இல் ஆறாவது முறையாக தி.மு.க. அரசு அமைந்ததும், 1987-இல் சமூகநீதிப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். சொன்னபடியே, இதோ… மணிமண்டபம் கட்டித் திறக்கப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரைக்கும், பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட சமூகநீதிக்கான இயக்கம். திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டத்தான்!
1921 ஆம் ஆண்டே எல்லா சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டு வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது, கடுமையாக போராடி 1950-ஆம் ஆண்டு முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்!
இஸ்லாமியர்களுக்கு, அருந்ததியினருக்கு…
அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தினோம். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து, 18 விழுக்காடாக உயர்த்தினோம். பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனியாக இடஒதுக்கீடு வழங்கினோம். பின்னர், பிற்படுத்தப்பட்டோரில் 20 விழுக்காட்டைப் பிரித்து வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்து, தனி ஒதுக்கீடு கொடுத்தோம். இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடும் வழங்கினோம்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு சமூகநீதி உரிமைகளை அகில இந்திய அளவிலும் கிடைக்க போராடி வருவது திமுக தான். நூற்றாண்டை கடந்த பிறகும், சமூகநீதிக்கான நம்முடைய பயணம் தொடர்கிறது. அதன் அடையாளமாகத்தான் 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபமும், ஏ.ஜி. அவர்களுக்கு நினைவு மண்டமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திறப்பு விழாக்களுடன் நிறைய அரசு திட்டப்பணிகளும் திறக்கப்பட்டிருக்கிறது. அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
இப்படி இந்த மாவட்டத்தை முன்னேற்ற நாம் ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். நேற்றிரவு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளோடு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பணிகள், நடைபெறக்கூடிய பணிகள், இன்னும் நிறைவேற்றப்படக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். இந்த மாவட்டத்திற்கான தேவைகளையும் நான் கேட்டுக் தெரிந்து கொண்டேன். அதையொட்டி இந்த மாவட்டத்திற்கான 11 புதிய அறிவிப்புகளை நான்
இங்கே வெளியிட விரும்புகிறேன்…
முதலமைச்சரின் அறிவிப்புகள்
முதல் அறிவிப்பு – சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் அமைக்கவேண்டும் என்று செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதி உழவர் பெருமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 304 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – விழுப்புரம் வட்டத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, வெள்ளத்தால் சேதம் அடைந்த, தளவானூர் அணைக்கட்டு 84 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு – காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் இருக்கும் 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
அய்ந்தாவது அறிவிப்பு – விக்கிரவாண்டி பேரூராட்சியில் இருக்கும் கக்கன் நகரில், ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில், பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு – செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு – திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் இடத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம், சமையற்கூடம் மற்றும் உணவருந்தும் இடம் ஆகியவை அமைக்கப்படும்.
எட்டாவது அறிவிப்பு – விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலாமேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் வழங்கப்படும்.
ஒன்பதாவது அறிவிப்பு – விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம் 2 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், டவுன் ஹால்-ஆக மாற்றப்படும்.
பத்தாவது அறிவிப்பு – தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
பதினோறாவது அறிவிப்பு – வீடூர் அணையிலிருந்து மயிலம், பாதிரப்புலியூர் வழியாகச் செல்லும் 15 கிலோ மீட்டர் சாலை 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சமீப காலமாக நான் சுற்றுப்பயணம் செய்த மாவட்டங்களில், அதிக அறிவிப்புக்களை பெற்ற மாவட்டம் எந்த மாவட்டம் என்று கேட்டால் இந்த விழுப்புரம் மாவட்டம் தான்.
நமக்கு நிதி ஒன்றுதான் தடையே தவிர,
வேறு எந்தத் தடையும் கிடையாது!
நமக்கு நிதி ஒன்றுதான் தடையே தவிர, வேறு எந்தத் தடையும் கிடையாது. நிதி இல்லை, நிதி இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்காமல், மக்கள் குறைகளை நீக்கிட, அதை நீக்கி, நிறைவேற்றுகின்ற அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு! அவர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. அதைப் பற்றி கவலைப்படாமல் நாம் நம்முடைய கடமையை தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வருகிறோம்.
‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு!
இதே விழுப்புரத்தில், பொன்முடிய சொன்னாரே மாநாட்டைப் பற்றி…. நான் அரசியல் அதிகம் பேச விரும்பவில்லை. ஒன்றை மாத்திரம் சுட்டிக்காட்டுகிறேன். இதே விழுப்புரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் 2004-ஆம் ஆண்டு சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை… விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு முதன்முதலாக நான் தலைமை வகித்தேன். பொன்முடி சொன்னது உண்மைதான். அப்போது தலைவர் கலைஞர் பேசும்போது, எனக்கு ஒரு அறிவுரையைச் சொன்னார்! “நான் என்னுடைய 26 ஆவது வயதில் ஒரு மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு 50 ஆவது வயதில்தான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாக கிடைக்கக் காரணம், எதுவும் அவசரமாக, விரைவாக கிடைப்பதைவிட தாமதமாக கிடைத்தால்தான் அதற்கு வலு அதிகம்.
அந்த வலு உனக்கு சேர்ந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார் தலைவர் கலைஞர். சொல்லிவிட்டு, மற்றொன்றையும் கூறினார். “எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக நினைத்து நீ நடைபோடக்கூடாது. எங்கிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ அதை தெரிந்துகொண்டு எல்லோரிடமும் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அணுகுமுறையை நீ கற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னார். அந்த அறிவுரையை என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிமுறையாக கொண்டு செயல்படத் தொடங்கினேன். அதனால்தான் வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எந்தப் பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! அதற்காக தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை செய்கிறோம்.
கட்சி – அரசியல் பாகுபாடுகள் பார்க்காமல் உழைத்தால் கட்சி அரசியல் எல்லைகளை கடந்து மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை ஒவ்வொரு ஊருக்கும் நான் போகும்போது மக்கள் தரும் வரவேற்பும் – அப்போது அவர்கள் முகங்களில் தெரியும் மலர்ச்சியும் எனக்கு எடுத்துக் காட்டுகிறது.
அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியை நாம் வழி நடத்திக்கொண்டிருக்கிறோம். மக்களாகிய உங்களின் வாழ்த்துகளோடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம். யாருக்கும் யாரும் அடிமை இல்லை! எல்லார்க்கும் எல்லாம்! இந்த திராவிடக் கருத்தியலை, எந்த சூழலிலும் சமரசம் செய்யாமல் செயல்படுத்திக் காட்டுவதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய வாழ்க்கைப் பயணம்! என்னைப் பொறுத்தவரை, என்னை முன்னிலைப்படுத்தி நான் எதையும் செய்வதில்லை, தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தி தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால்தான், நம்முடைய ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்கிறேன். இதை “ஸ்டாலின் ஆட்சி” என்று சொல்லி, தற்பெருமை தேடிக்கொள்வதை விட, தற்பெருமை தேடிக்கொள்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும், ஆனால் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அந்த குறுகிய சிந்தனை எனக்கு எப்போதும் வந்ததில்லை! வரவும் வராது! ஏன் பல்வேறு விமர்சனம் வந்தாலும், மீண்டும் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தான் நான் சொல்வேன்.
திராவிடம்தான், திராவிடம்தான்!
திராவிடம்தான், நமது தாய் நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம்தான், நம்முடைய அன்னைத் தமிழ்மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்றுத் தந்தது! திராவிடம்தான், பட்டியலின – பழங்குடியின பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை பெற்றுத் தந்தது. திராவிடம்தான், பெண் விடுதலைக்காக போராடியது! பெண்களை படிக்க வைத்தது! திராவிடம்தான் – ஏராளமான கல்லூரிகளை, – பல்கலைக் கழகங்களை, –மருத்துவமனைகளை, – நூலகங்களை உருவாக்கியிருக்கிறது…
மொத்தத்தில் திராவிடம்தான், இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கியது! அது இனியும் தொடரும்! தொடரும்! திராவிடம் இருப்பதால்தான், நாட்டின் பிற பகுதிகளில் இருப்பது போன்று, ஆதிக்க சக்திகளால் – பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை! அதனால்தான், போலிகள் – துரோகிகள் துணைகொண்டு எதிரிகள் பலமுனை தாக்குதல் நடத்தி, நடத்தி சோர்ந்து போகிறார்கள்.
இன்றைக்கு நாம் பார்க்கின்ற இந்த நவீன தமிழ்நாடு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் – பேரறிஞர் அண்ணாவால் – தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது! தமிழ்நாடு இன்றைக்கு எல்லா துறைகளிலும் உன்னதமான இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம், திராவிட மாடல்! இந்த கொள்கை ஆட்சிக்கு – உற்ற தோள் கொடுத்து – உறுதுணையாக இருக்கக்கூடிய, உறவாக இருக்கக்கூடியவர்கள் என்றும் தொடரவேண்டும், தொடரவேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
–இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.