சையத் மோஜிஸ் இமாம்
அயோத்தியில் இருந்த ராமன் கோவில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அயோத்தி நகரம் மாறத் தொடங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை ஆன்மீக சுற்றுலா மய்யமாக மாற்றும் யோகி ஆதித்யநாத் அரசின் லட்சிய திட்டத்தில் அயோத்தி மிகவும் முக்கியமானது. இதனால் நகரில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
அயோத்திக்கு நாள்தோறும் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் பக்தர்கள் வருகின்றனர் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத் தும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
பேசப்படாத மறுபக்கம்
அயோத்தியில் ராமன் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆன்மீகம், சுற்றுலாவுக்கு நடுவே அந்த நகரின் பேசப்படாத மறுபக்கத்தை பார்க்கலாம்.
அயோத்தியில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அப்பகுதி மக்கள் சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளனர்
ராமன் கோவில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு ஆன நிலையில் நகரில் இன்னும் பணிகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் சாலைகளை தோண்டி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ராமர் கோவில் வளாகத்திலும் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை தனியாக 12.41 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
‘ராமன் பாதை’க்குப் பிறகு, ‘பக்தி பாதை’யின் கட்டுமானமும் நடந்து வருகிறது. ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அயோத்தி வழியாக சுமார் 15 புதிய ரயில்கள் செல்கின்றன.
அயோத்தியில் இருந்து நாள்தோறும் 12 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் டில்லி, ஆமதாபாத், மும்பை மற்றும் பெங்களூருக்கு தினசரி விமானங்கள் உள்ளன. வாரத்தில் நான்கு நாட்கள் அய்தராபாத் நகருக்கு விமானங்கள் உள்ளன என்று விமான நிலைய முனையப் பொறுப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர், தர்பங்கா மற்றும் பாட்னாவிலிருந்து வரும் விமானங்களும் அவற்றில் அடங்கும். இந்து பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 11 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது.
மற்றொரு பக்கம்
மனீஷ் குமார் கனடாவில் இருந்து ராமர் ஆலய தரிசனத்திற்கு வந்துள்ளார். அனுபவம் நன்றாக இருந்தது, ஆனால் விமானம் தாமதமாக வந்தது என்று அவர் கூறுகிறார்.
இங்குள்ள வளர்ச்சியைப் பார்க்க அம்பாலாவில் இருந்து ருச்சி ஷர்மா வந்துள்ளார். எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்க நான் இங்கு வந்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.
‘வந்த வழியை மறந்துவிடும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது’ என்கிறார் அயோத்தியில் வசிக்கும் சுனிதா ஷர்மா.
இதை ஒட்டி ஒரு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “இப்போது இந்த நகரம் ராமரின் ‘அயோத்தி’ போல இருப்பதாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
வளர்ச்சிக்கான குறியீடுகளில் அயோத்தி மேலே வந்து கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது.
தங்கள் நிலம் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதாக அயோத்தியில் சிலர் புகார் கூறுகின்றனர். கோவிலை ஒட்டிய மூன்று கிலோமீட்டர் சுற்றளவில்தான் வளர்ச்சி நடந்துள்ளது என்கிறார் பத்திரிகையாளர் இந்து பூஷண் பாண்டே. அயோத்தி நகருக்கு வெளியே ஃபைசா பாத்தின் பழைய நகரத்தில் எந்த மாற்றமும் தெரிய வில்லை,” என்றார் அவர். இதுதவிர நிலம் கையகப் படுத்துதல் மற்றும் இழப்பீடு தொடர்பாக உள்ளூர் மக்களின் புகார் பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது.
எதிர்ப்பு
அயோத்தியில் வளர்ச்சிப் பணிகள் குறித்த வாதத்தை முன்வைத்து அரசு, மேலும் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசின் கையகப்படுத்துதல் கொள்கையை பலரும் எதிர்க்கின்றனர். பல உள்ளூர் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அயோத்தியின் வளர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.
தங்களது நிலம் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு வருவதாகவும், உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் சிலர் புகார் கூறுகின்றனர்.
“பா.ஜ.க அரசு விவசாயிகளின் நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி தனது முதலாளித்துவ நண்பர்களுக்கு கொடுக்கிறது” என்று சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் தலைவரும், மேனாள் அமைச்சருமான பவன் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார். “அரசின் இந்த அணுகுமுறையால் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை எப்படி நடக்கும்? விவசாயிகளின் நிலத்திற்கு சந்தை விலை அடிப்படையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், கையகப்படுத்துதல் செயல்முறை, விதிமுறைகளின்படியே செய்யப்படுகிறது என்றும் அதன் நன்மை உள்ளூர் மக்களை மட்டுமே சென்றடைவதாகவும் நிர்வாகம் வாதிடுகிறது. அயோத்தியில் நிலம் கையகப்படுத்தல் செயல்முறை விதிமுறைகளின்படியே செய்யப்படுகிறது என்று நிர்வாகம் கூறுகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் கூற்று வேறாக இருக்கிறது.
குற்றச்சாட்டு
செய்திக் குழுவினர் அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களுக்குச் சென்று நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்தை சேகரிக்க முயன்றனர். இதுகுறித்து கேள்விகளை கேட்ட உடனேயே மக்களின் கோபத்தை பார்க்க முடிந்தது. இந்த வளர்ச்சியில் அயோத்தி மக்கள் பின்னுக்கு தள்ளப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
அயோத்தியில் உள்ள சாதத்கஞ்சில் வசிக்கும் பூஜா வர்மாவை சந்தித்தோம். தனக்கு நேர்ந்த அவலத்தை விவரிக்கும் போது அவர் பலமுறை அழுதுவிட்டார். பூஜா வர்மா தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் அவரது கணவர் இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு அவர், ஷாநவாஸ்பூரில் ஒரு நிலத்தை வாங்கினார். ஆனால் தற்போது அந்த இடத்தை கையகப்படுத்த வீட்டு வசதி மேம்பாட்டுத்துறை தயா ராகி வருகிறது. சந்தை விலையில் வாங்கிய இடத்தை வீட்டு வசதி மேம்பாட்டு சபை அதை சர்க்கிள் ரேட்டில் வாங்க முயற்சிப்பதாகவும் பூஜா கூறுகிறார்.
சந்தை நிலவரம்
“என் நிலத்தின் விலை ரூ.6 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சந்தை விலை பிஸ்வா (நில அளவு) ஒன்றுக்கு 48 லட்சம் ரூபாய் ஆகும். சந்தை விலையில் எனக்கு பணம் வழங்கப்பட வேண்டும் அல்லது நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. நான் ஆர்.டி.அய்-யையும் தாக்கல் செய்தேன். இந்த நிலம் கையகப்படுத்தப்படுவது உறுதி என்று வீட்டு வசதி மேம்பாட்டு சபை பதில் கூறியது,” என்று பூஜா வர்மா தெரிவித்தார்.
அயோத்தியில் சமய சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத் துறை தனியாக 12.41 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது. ‘நிலம் பெரும் தொழிலதிபர்களுக்கு விற்கப்படு கிறது’ உண்மையை அறிய செய்திக் குழு அயோத்தியின் மாஜா ஷாநவாஸ்பூருக்கு சென்றது.
கிராமத்தில் இருந்து 1,450 ஏக்கர் நிலத்தை சபை ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இப்போது கூடுதலாக 450 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
ஆனால் கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை விலையில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த கிராமத்தில் வசிக்கும் ராஜீவ், அமெரிக்காவில் மென் பொறியாளராக இருந்தார். இவர் 2004இல் அயோத்தியில் உள்ள ஷாநவாஸ்பூரில் 84 பிஸ்வா நிலத்தை வாங்கினார். ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிய போது ராஜீவ் அமெரிக்காவில் இருந்த வேலையை விட்டுவிட்டு இந்தியா வந்தார்.
“நான் ஓட்டல் கட்ட நினைத்தேன். எனக்கு என்ஓசியும் கிடைத்துள்ளது. நில உபயோக மாற்றமும் கிடைத்துவிட்டது. ஆனால் இப்போது வீட்டு வசதி மேம்பாட்டு சபை, என்ஓசி கொடுக்க மறுக்கிறது. இது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறுவதாகும்” என்றார் ராஜீவ் திவாரி.
“முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களைக் கூட சபை இன்னும் பயன்படுத்தவில்லை. அப்படி இருந்தும் கூட அதிக நிலம் கையகப்படுத்தப்பட்டு பெரும் தொழி லதிபர்களுக்கு விற்கப்படுகிறது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
பின் தள்ளப்படும் மக்கள்
அயோத்தியின் வளர்ச்சியில் அந்த நகர மக்கள் பின்னுக்கு தள்ளப்படுவதாகவும், வீட்டு வசதி மேம்பாட்டு அமைப்பு விவசாயிகளின் நிலத்தை குறைந்த விலையில் கையகப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் மாஜா ஷாநவாஸ்பூரைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
ககன் ஜெய்ஸ்வாலும் இதேபோன்ற சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். “ஒரு சின்ன ஓட்டல் அல்லது உணவு விடுதி திறக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது நடக்கும் என்று தோன்றவில்லை,” என்றார் அவர். “இந்தப் பகுதியில் நிலத்தின் விலை ஒரு பிஸ்வாவுக்கு 48 லட்சம் ரூபாய். ஆனால் வீட்டு வசதி மேம்பாட்டுச் சபை ஒரு பிஸ்வாவுக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே தருகிறது. பிறகு இந்த நிலம் ஒரு பிஸ்வாவுக்கு ஒரு கோடி ரூபாய் விலையில் பெரிய தொழிலதிபர்களுக்கு விற்கப்படுகிறது,” என்று ககன் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
கிராம மக்கள் நிலத்தில் நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று உள்ளூர் விவசாயி மன்ஜீத் யாதவ் கூறுகிறார். நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மீறப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு குறித்து உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேத் குப்தாவிடம் பேசிய போது, சட்டப்படி இழப்பீடு வழங்கப்படுவதாகவும், சர்க்கிள் விலையை விட மூன்று மடங்கு வரை அதிகமாக இழப்பீடு வழங்கப்படுவதாகவும் கூறினார். ‘ராமர் பாதை’ அமைக்கும் போது உடைக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளுக்கும் அரசு இழப்பீடு வழங்கியுள்ளதாக உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
அயோத்தியில் தற்போதைய அரசு செய்துள்ள வளர்ச்சியைப் போல, இதுவரை யாரும் செய்ததில்லை என்று பா.ஜக சட்டமன்ற உறுப்பினர் வேத் குப்தா கூறுகிறார். 1974ஆம் ஆண்டு முதல் தானும் இங்கு வசித்து வருவதாகவும், முந்தைய அரசுகள் அனைத்தும் அயோத்தியை புறக்கணித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
மாநில அரசு கட்டடங்கள் மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்காக மாநில அரசுகளும் நிலத்தை வாங்கி வருகின்றன என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அயோத்தியில் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளன என்று உத்தரப்பிரதேச வீட்டு வசதி மேம்பாட்டு சபையின் வீட்டு வசதி ஆணையர் டாக்டர் பல்கார் சிங், தெரிவித்தார்.
“ஓட்டல்கள் மற்றும் வீட்டு வசதிக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீட்டு வசதி மேம்பாட்டு சபை மாஜா ஷாநவாஸ்பூரில் இரண்டு கட்டங்களாக 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துகிறது.” “இது தவிர, மாநில அரசு கட்டடங்கள் மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்காக நிலம் வாங்கப்படுகிறது” என்று வீட்டு வசதி ஆணையர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் பசுமைக் களத் திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தி யுள்ளன. அதே நேரத்தில் ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் நிலம் கையகப்படுத்த முன்மொழிவுகளை அனுப்பியுள்ளன.
விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக உத்தப்பிரதேச வீட்டு வசதி மேம்பாட்டு சபையின் வீட்டு வசதி ஆணையர் டாக்டர் பல்கார் சிங் கூறினார்.
வீட்டு வசதி மேம்பாட்டு சபை சர்க்கிள் விலையைக் காட்டிலும் நான்கு மடங்கு வரை அதிகமாக இழப்பீடு வழங்குவதாக பல்கார் சிங் கூறினார். ஆனால், நிலத்தின் விலையை நிர்ணயிப்பது வீட்டு வசதி மேம்பாட்டு சபையின் பணி அல்ல. இந்த பொறுப்பு மாவட்ட நிலம் கையகப்படுத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் உள்ளது.
தவறான வழிநடத்தல்
கிராம மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக கூறினார்.
“முன்புறமாக இருக்கும் நிலத்திற்கான விலை தங்களின் பங்கு நிலத்திற்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் அரசு அமைப்பாக இருப்பதால் நாங்கள் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் செயல்படுகிறோம்,” என்றார் அவர்.
“சபை, ஒரு எக்டேர் நிலத்திற்கு சுமார் 4.5 கோடி ரூபாய் இழப்பீடு தருகிறது. இழப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு ஆட்சேபம் இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.
அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசின் குத்தகை நிலம் மற்றும் இழப்பீடு தொடர்பாக தகராறு நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் சுமார் 25 ஆயிரம் எக்டேர் நிலம் குத்தகையில் வழங்கப்பட் டுள்ளது. இந்த நிலம் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் பல ஆண்டு களாக மக்கள் வசித்து வருகின்றனர். ஒருநாள் அது தங்களுக்கு சொந்தமாகிவிடும் (Free hold) என்ற நம்பிக்கையில் இந்த மக்கள் உள்ளனர்.
சுதந்திரத்துக்கு முன் அரசர் முதல் சாதாரண மக்கள் வரை யாருடைய நிலமாக இருந்தாலும் அதை ஆங்கிலேய அரசு கைப்பற்றி வந்தது.
சுதந்திரத்துக்குப் பின் தங்கள் உரிமை தொடர்பான ஆவணங்களைக் காட்ட முடியாதவர்களின் நிலங்கள் அரசுக்கு சொந்த மாகிவிட்டன. ராமர் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாஜா ஜம்தாராவை செய்திக் குழுவினர் அடைந்தனர். அங்கு சென்றபோது அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை அளக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த வயலில் கோதுமை பயிர் விளைந்து நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தனர். அதேநேரம் கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
உரிமை இல்லையா?
அளக்கப்படும் நிலம் கெவட் அதாவது உரிமை யாளரின் நிலம் என்றும் முன்னோர் காலத்திலிருந்தே இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும் கிராம மக்கள் வாதிட்டனர். ஆயினும் இது குத்தகை நிலம் என்று அரசு கூறியது.
“பல தலைமுறைகளாக நாங்கள் இதை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு அதில் உரிமை இல்லை என்று நிர்வாகம் கூறுகிறது. இதில் உரிமை இல்லை என்றால் நில ஆவணத்தில் இந்த விவரம் ஏன் இல்லை?,” என்று உள்ளூர் விவசாயி மணிராம் யாதவ் வினவினார்.
அளக்கப்படும் நிலத்தில் விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சம்பவ இடத்தில் இருந்த எஸ்.டி.எம் கூறினார்.
“கிராம நில எண் 57இல் உள்ள நிலத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. அதில் 517 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவர்கள் குத்தகைதாரர்களாக இருந்தனர். ஆனால் 2014இல் குத்தகை ரத்து செய்யப்பட்டது. இவர்களுக்கு முன்பே இது கூறப்பட்டது. தங்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ ஆவணங்களை இவர்கள் யாருமே காட்டவில்லை,” எஸ்டிஎம் விகாஸ்தர் துபே தெரிவித்தார்.
இழப்பீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “இது அரசு நிலம் என்பதால் நிலத்திற்கு ஈடாக நிலம் என்பது இங்கு பொருந்தாது,” என்று கூறினார்.
மக்கள் தங்கள் முன்னோர் காலத்திலிருந்தே இங்கு விவசாயம் செய்து வருகின்றனர் என்று சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் கவுன்சிலர் ராம் அஞ்சோர் யாதவ் குறிப்பிட்டார்.
எதேச்சதிகாரம்
வெளியேற்றம் செய்வதற்கான பதிவுகள் அரசிடம் இல்லை என்றும் எதேச்சதிகாரம்தான் நடக்கிறது என்றும் அவர் கூறினார்.
“பழைய நகரில் உள்ள சாலைகளில் இப்போதும் சாக்கடை நீர் ஓடுகிறது. தெருக்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன,” என்கிறார் உள்ளூர் செய்தியாளர் இந்துபூஷண் பாண்டே.
“முன்பு அயோத்தி ஒரு புனித தலமாக இருந்தது. இப்போது வணிகர்கள் மட்டுமே இங்கு வருகிறார்கள். பெரிய ஓட்டல்கள் மட்டுமே கட்டப்படுவதால் இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. பெரிய வணிகர்கள் பலன்களைப் பெறுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். பழைய நகரின் தெருக்களில் இன்னும் சாக்கடை நீர் ஓடுகிறது.
அயோத்தி கோவிலை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வளர்ச்சி நடக்கிறது என்கிறார் அவர்.
நன்றி: பிபிசி. தமிழ்