கோவை, ஜூலை 16 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இணையதள வழி கலந் தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளை (17.7.2023) நடைபெற உள்ளது.தொழில் முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு சான் றிதழ் சரிபார்ப்பு நாளை மறுநாள் (18.7.2023) நடக்கிறது.
பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடக்கிறது. பொதுப்பிரிவில் இணையதள வழி 2-ஆம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28 மற்றும் 29-ந்தேதி நடக்கிறது. கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.