நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – சுப்பிரமணியன் சாமி மோதல்

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.28 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிடி கூட தெரியாது என பாஜக மூத்த தலைவர் களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி விமர்சித்துள்ளார்.

சென்னையில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் ‘கல்வி சிந்தனை அரங்கு 2025’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ், மணிப்பூர் எம்பி அங்கோம்சா அகோய்ஜாம், பாஜக எம்பி ரவீந்திர நாராயண், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன், பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்எஸ்எஸ் துணை பொதுச்செயலாளர், காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணுவ கொள்கை

இதில் சுப்பிரமணியன் சுவாமி ‘விஸ்வகுரு அல்லது விஸ்வபந்து: இந்தியாவுக்கான சரியான வழி’ என்கிற தலைப்பில் பேசியதாவது: “இந்தியா விஸ்வகுரு, விஸ்வபந்து எனும் அந்தஸ்தை அடைய வேண்டும் எனில், அடுத்த 15 ஆண்டுக்குள் நாம் பொருளாதார, வெளியுறவு மற்றும் ராணுவக் கொள்கைகளை சரி செய்ய வேண்டும்.

விஸ்வகுரு எனில், போதிய கல்வி அறிவை பெற்றிருக்க வேண்டும். மட்டுமல்லாது நமது நட்பு நாடுகளுடன் நமது அறிவை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். விஸ்வபந்து என்றால், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு நண்பராக இருப்பது என்று அர்த்தம். இப்போது நாம் யோகா துறையிலும், நவீன தொழில்நுட்ப துறையிலும் விஸ்வகுரு என்கிற அந்தஸ்தை அடைந்திருக்கிறோம். ஆனால், நாடு பல அம்சங்களில் பொருளாதார சமநிலையற்றதாக இருக்கிறது. பல துறைகளில் நாம் இப்போது இறக்குமதியைதான் நம்பி இருக்கிறோம்.

நாம் விஸ்வகுருவாக மாறுவதற்கு ராணுவ பலம் மிகவும் முக்கியம். ஆனால் இந்தியா, சீனாவிடம் 4,064 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்துவிட்டது. மட்டுமல்லாது பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அவமானப்பட்டு வருகிறது. குறிப்பாக டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் மோடி அழைக்கப்படவில்லை.
மறுபுறம் மோடியின் ஆட்சியில், கடந்த 2 ஆண்டுகளில் வளர்ச்சி விகி தம் குறையத் தொடங்கியுள்ளது. 4 – 4.5 சதவீதம் வரை மட்டுமே நாடு வளர்ந்து வருகிறது. ஆனால் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில், வளர்ச்சி 7-8 சதவீதமாக இருந்தது.

நிர்மலா சீதாராமன்

இந்த காலத்தில் நமது வெளியுறவுத் துறை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் அமைச்சராக உள்ள ஜெய்சங்கர், அலு வலகத்தில் எழுத்தாளராக இருக்கக்கூட தகுதியற்றவர். அவர் மிகப்பெரிய கோமாளி. மறுபுறம் பொருளாதாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு ஏபிசிடிகூட தெரியாது” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். அதனை தொடர்ந்து, பிப்.1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இது. இந்த ஆண்டு வருமான வரி குறித்த எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடையே அதிகரித்திருக்கிறது. வரியை குறைக்க வேண்டும் அல்லது, வருமான வரிக்கான உச்சவரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் அடிப்படை கூட தெரியாது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *