மே.து. ராசுகுமார்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையினைப் புறக் கணிப்பதில் தொடங்கி, உரையின் உள்ளடக்கத்தினை மறைப்பது, பேரவை நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது அல்லது கிடப்பில் போடுவது, ஆளுநர் ஒப்பளிக்கவேண்டிய கோப்புகளை நிறுத்தி வைப்பது, மாநில அரசை வெளிப்படையாகக் கண்டிப்பது, மாநில மக்களின் உணர்வுகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தங்கள் பிடியில் உள்ள நிறுவனங்களாக மாற்றுவது, துணைவேந்தர்களையும் பிற பல்கலைக்கழக அலுவலர்களையும் தம் விருப்பப்படி அமர்த்தி ஆட்டுவிப்பது போன்றவை உள்ளிட்ட அனைத்து வகையான ஆளுநரின் செயல்பாடுகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவையினைச் சிறிதும் பொருட்படுத்தாதனவாகவே மாறிவருகின்றன.
(தமிழ்நாட்டின் ஆளுநராகத் தற்போது அமர்ந் திருக்கும் ஆர்.என். ரவி அனைத்து எல்லைகளையும் மீறிக்கொண்டிருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசுவது, வள்ளலாரைச் ஸநாதனச் சிமிழுக்குள் அடைப்பது, தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கொள்கையான திரா விடக் கருத்தமைவை மறுப்பது, பெரியார் கொள்கைகளை இழிவு செய்வது, மாநில அரசின் திட்டங் களைக் குறை கூறுவது, விடுதலைக்கு எதிராக இருந்த, தமிழ்நாடு ஏற்காத பா.ஜ.க. முன்னோடிகளை முன்னிறுத்துவது என மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காது செயல்படுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டார்).
அவர் ஆளுநராகப் பொறுப்பேற்று முதன்முறையாக 2023இல் சட்டப்பேரவையில் உரையாற்றியபோது, பெரியார், அண்ணா, கலைஞர், திராவிடம் போன்ற பெயர்களைக் குறிப்பிட மனமின்றி மறுத்தார். அடுத்த ஆண்டு 2024இல் ஆளுநர் உரையின் முதல் பத்தியையும் இறுதிப் பத்தியையும் மட்டும் படித்துவிட்டு நிகழ்வை நிறைவுசெய்யாமலேயே வெளியேறினார். இந்த ஆண்டு உரையை முழுமையாகப் புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர் போல வெளிநடப்புச் செய்திருக்கிறார்.
இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ள ஆளுநர் என்ற முறையில் தனக்கு உரிமை இருப்பதாகவே அவர் கருதுவதாகத் தெரிகிறது. ஆளுநரின் போக்குகள் பல்வேறு பகுதியினரால் கண்டிக்கப்பட்டாலும், அவரு டைய செயல்பாடுகள் யாவும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானவை என்ற புரிதல் அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஊடகங்களுக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை.
ஆளுநர் என்ற முறையில் அவர் கலந்துகொள்ளும் சட்டப்பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் தேசியப் பாடல் இசைக்கப்படவில்லை என்பதுதான் அவருடைய தற்போதைய குறைபாடாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் அரசு விழாக்களிலும் நிகழ்வுகளிலும் சில முறைமைகள் நடைமுறையில் உள்ளன. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதும், நிறைவில் தேசியப் பாடல் இசைப்பதும் மரபாக இருந்து வருகிறது. இது அரசாணையாகவும் அறிவிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2023, 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டங்களின் தொடக்கத்தில் இதே ஆளுநர் உரையாற்ற வந்த போது, பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது வாய்மூடியிருந்த ஆளுநர், இப்போது குற்றமாக்குகிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருக்கும் இதனை முன்னிருந்த எந்த ஆளுநரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதா அரசோடு முற்றிலும் முரண்பட்டிருந்த சென்னா ரெட்டி தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோதும் சட்டப்பேரவையின் மாண்புகளுக்கு மதிப்பளிக்க அவர் தயங்கவில்லை.
இந்த வழமைதான் புதுச்சேரிச் சட்டப்பேரவையிலும் அம்மாநில அரசு நிகழ்வுகளிலும் நடைமுறையில் உள்ளது. அங்கு பணியாற்றிய துணைநிலை ஆளுநர் எவரும் இதனை வேறுபட்டு நோக்கவில்லை. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பில் இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழிசை சவுந்திரராசனும் இதற்கு விலக்காக இருக்கவில்லை.
உண்மையிலேயே சட்டப்பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற வரும்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னர் தேசியப் பாடல் இசைக்கவேண்டும் என்ற நிலைப்பாடு அவருக்கு இருந்திருக்குமென்றால், கடந்த ஆண்டுகளிலேயே அவர் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல், அப்போதெல்லாம் அந்த முறைமையினை அவர் ஏற்றுக்கொண்டுதான் செயல்பட்டார். தனது புறக்கணிக்கும் தற்போதைய முடிவுக்கு ஆளுநர் ரவிக்கு ஏதேனுமொரு சாக்கு வேண்டப்பட்டது. அதனாலேயே, புதிய கண்டுபிடிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னர் தேசியப் பாடல் இசைக்கவில்லை என்பதை முன்னிறுத்தித் தப்பிக்க முனைகிறார்.
முன்னர் தோன்றாமல் இப்போதுதான் தோற்றியது என்று எடுத்துக்கொண்டாலும், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஆளுநருக்கு வேறு வழிகள் இல்லாமல் இல்லை.
பேரவைத் தலைவருக்கு இது குறித்து ஆளுநர் மடல் எழுதியதாகவும், அதற்கு தக்கதொரு மறுமடலினைப் பேரவைத் தலைவர் தந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பேரவையின் நிகழ்வுச் செயல்முறைகளையும் விதிகளையும் பேரவைத் தலைவர் உருவாக்குவதில்லை. இவற்றைப் பேரவைதான் வகுத்துத் தந்துள்ளது. இதனைத் தன்விருப்பில் பேரவைத் தலைவர்கூட மாற்றிவிட முடியாது.
ஆயினும், இது குறித்துத் தனது நிலை பாடுகளை எடுத்துக் கூற ஆளுநருக்கு வேறு வாய்ப்புகளை அரசமைப்புச் சட்டம் தந்திருக்கிறது.
வெளிநடப்பு என்பதோடு நிலைமை நின்றுவிடவில்லை. நிகழ்வின் தொடக்கத்தில் தேசியப் பாடலை இசைக்கவேண்டும் என்று எதிர்பார்த்த ஆளுநர், நிகழ்வின் நிறைவிலும் அது ஒலிக்கப்படவேண்டும் என்பதைப் பொருட்படுத்தாமல், அதனை மீறி, அதற்கு முன்னரே வெளியேறியிருக்கிறார். இதுவும் தேசியப் பாடலை மதிக்காத போக்கு தான் என்பதை ஆளுநர் மறந்துவிட்டார். தமிழர்களை மட்டும் அவர் மதிக்காமல் இருக்கவில்லை; ஒன்றியத்தின் வழிகாட்டுதல் களையும் அவர் தூக்கி எறிந்துவிட்டார்.
பலரும் கருதுவது போன்று, ஆளுநருக்கு எந்த வகையான தனித் தேர்வும் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்படவில்லை. சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்டங்களுக்கான ஒப்புதல் தருதல், சில கோப்புகளில் ஒப்பமிடல் என்பன போன்ற நடைமுறைகளில் மட்டுமல்லாது, ஆளுநரின் அனைத்து அசைவுகளும் மாநில அமைச்சரவையில் அறிவுறுத்தலின் அடிப்படையில் மட்டுமே இருந்தாகவேண்டும்.
அதாவது, அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுறுத்தல் அடிப்படையில் மட்டுமே ஆளுநரின் அனைத்துச் செயல்பாடுகளும் இருந்தாகவேண்டும் என்பதுதான் அரசமைப்பின் பிரிவு 163 தரும் தெளிவான – வெளிப்படையான கட்டளையாகும் (There shall be a Council of Ministers with the Chief Minister at the head to aid and advise the Governor in the exercise of his function….). இதில் குழப்பமோ அய்யமோ ஏற்பட வாய்ப்புகள் ஏதுமில்லை.
நன்றி: ‘ஜனசக்தி’ 26.1.2025
தமிழ்நாட்டின் ஆளுநராகத் தற்போது அமர்ந்திருக்கும்
ஆர்.என். ரவி அனைத்து எல்லைகளையும் மீறிக்கொண்டிருக் கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசுவது, வள்ளலாரைச் ஸநாதனச் சிமிழுக்குள் அடைப்பது, தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கொள்கையான திராவிடக் கருத்தமைவை மறுப்பது, பெரியார் கொள்கைகளை இழிவு செய்வது, மாநில அரசின் திட்டங்களைக் குறை கூறுவது, விடுதலைக்கு எதிராக இருந்த, தமிழ்நாடு ஏற்காத பா.ஜ.க. முன்னோடிகளை முன்னி றுத்துவது என மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காது செயல்படுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டார்.