இருதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் பல சாதனைகளைப் படைத்த கே.எம். செரியன் காலமானார். அவருக்கு வயது 82. இந்தியாவில் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தவர் இவர்.
இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர்
இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அப்போது உறுப்பு மாற்று சிகிச்சைக்கான சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சிறப்பு அனுமதிகளைப் பெற்று அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 1994இல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கென சட்டம் வந்த பிறகு, முதல் இருதய
மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் டாக்டர் கே.எம். செரியன்தான்.
1995ஆம் ஆண்டில் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் ஹேமா என்ற பெண் சாலை விபத்தால் உயிரிழந்தபோது, அவரது இதயம் மைமூன் பீவி என்ற பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது.
“இந்த அறுவை சிகிச்சையில் இருதயத்தைப் பெற்றவர் ஒரு இசுலாமியப் பெண். அவருக்கு இருதயம் கொடுத்தவர் ஒரு இந்து. இதைப் பற்றி என்னிடம் பேசும்போது, ஒரு இசுலாமியப் பெண்ணுக்கு, இந்துவின் இதயத்தை எடுத்து கிறிஸ்தவரான நான் பொருத்தியிருக்கிறேன் என்று சொல்லிச் சிரிப்பார். இருதயத்தைப் பெற்ற அந்தப் பெண் அதற்குப் பிறகு நீண்ட காலம் உயிரோடு இருந்தார்” என நினைவுகூர்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் அமலோற்பவநாதன் ஜோசப்.