பருவகால மாற்றங்களுக்கேற்ப சில உடல் உபாதைகள் உண்டாவது இயல்பு. குறிப்பாக மழை மற்றும் பனிக்காலங்களில் சளிக்காய்ச்சல், சோர்வு போன்ற குறிகுணங்கள் ஏற்படுவது இயல்பு என்றாலும், கொரோனா தொற்றுக்குப் பிறகு சளிக்காய்ச்சல் வந்தாலே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய தட்பவெப்பநிலையில் சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் கிருமிகள் செழித்து வளர்வதுடன் அதிக வீரியம் பெறுகின்றன. இதனால் ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாக ஏதுவாக அமைகிறது. ஆக, இந்த குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்ட காலமாக அமைந்துவிடுகிறது.
பனிக்கால நோய்கள்
பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டை வலி, ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசைகட்டி வந்து பாடாய்ப்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எளிதாக நோய்கள் தொற்றிக்கொள்ளும். சைனஸ் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ‘பனிக்காலம்’ மிகுந்த தொல்லைகளைத் தரும். எனவே, இதுபோன்ற காலங்களில் உடல்நலனில் தனிக் கவனம் செலுத்துவதுடன் முன்னெச்சரிக்கையாக இருந்தால், பனிக்கால தொந்தரவுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
சளி, காய்ச்சல்…
இரவு, பகல் பாராமல் வீசும் பனிக்காற்றினால் பலருக்கு மூக்கடைப்பில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சூழலில் அச்சப்படாமல் சூழலுக்கு ஏற்ற சத்தான உணவுகளை உண்பதுடன் துளசி, இஞ்சி, புதினா மற்றும் சுக்கு மல்லி போன்றவற்றைக் கொண்டு தேநீர் தயாரித்து அருந்தலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சீரகம், வெற்றிலை போன்றவற்றை குடிநீரிட்டு தேன் கலந்து குடிக்கலாம். வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நிலவேம்புக் குடிநீரை பருகினால் மிகஎளிதாக காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
கபத்தை கரைக்கும் கற்பூரவள்ளி :
கற்பூரவல்லி இலைகளை பச்சையாக மென்று சாப்பிடுவது அல்லது அவற்றைக்கொண்டு சட்னி தயாரித்து இட்லி, தோசைக்கு இணை உணவாக எடுத்துக்கொள்ளலாம். கற்பூரவல்லி இலைகளை மாலைவேளையில் பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கல்யாணமுருங்கை இலைகளை வடை மாவுடன் கலந்து வடை செய்து சாப்பிடலாம். தூதுவளைத் துவையல் நல்லது. இரவில் பூண்டுப்பால் அருந்துவது நல்ல பலன் தரும். பத்து பூண்டுப்பற்களை 50 மில்லி பால், அதே அளவு நீர் சேர்த்து நன்றாக வேக வைத்து, பாதி வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இறக்கி நன்றாகக் கடைந்து குடிக்க வேண்டும். இவை அல்லாமல் நிறைய நீர் அருந்த வேண்டும்.
துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இலைகளுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து கசாயமாக்கி தேவைப்பட்டால் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு, ஜலதோஷம், சளித்தொல்லை விலகும்.
சைனஸ், ஆஸ்துமா…
பனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகே உள்ள காற்றறைகளில் தொற்றுகள் படியும்போது சளிப்படலம் அதிகம் சுரந்து சைனஸ் பிரச்சினை ஏற்படும். இதனால் கண்களைச் சுற்றி வலி, தலைவலியுடன், மூக்கடைத்து இயல்பாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும்.
நாசியை நெறிப்படுத்தும் நொச்சி :
நொச்சி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால் சைனஸ், மூக்கடைப்பு சரியாகும்.
மேலும் தாளிசாதி வடகம், கற்பூராதி சூரணம் போன்ற மருந்துகளை தேனில் சேர்த்து சாப்பிட பிரச்சினைகள் எளிதில் தீரும். வெளிப்பிரயோகமாக நீர்க்கோவை மாத்திரை பற்று போடலாம், அணுத்தைலத்தை நாசியில் விடலாம்.
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவி (வேது) பிடிக்கலாம். இரவில் தூங்கும்போது தலையணை உறைக்குள் நொச்சி இலைகளை வைத்தால் நிம்மதியான உறக்கம் வரும். தலையணை அருகே இரண்டு பூண்டுப்பற்களை உரித்து வைத்தாலும் சுவாசம் சீர்பட்டு நிம்மதியான உறக்கம் வரும்.
ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொற்றுள்ளவர்கள்
சிறிது கவனமாக இருப்பது நல்லது.
சுவாசத்தை முறையாக்கும் முசுமுசுக்கை :
இவர்கள் முசுமுசுக்கை கஷாயமிட்டு குடிக்கலாம். பகல் வேளையில் முசுமுசுக்கை இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். காய்ந்த முருங்கை விதைகளை உடைத்து அதன் உள்ளே யிருக்கும் பருப்புகளை காலை, மதியம், மாலை, இரவு வேளைகளில் தலா ஒன்று சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். திப்பிலி, மிளகு போன்றவற்றை தேனில் குழைத்து சாப்பிடலாம். ஆடுதொடா இலை கசாயம் அருந்துவதும் நல்ல பலனளிக்கும்.
பூண்டுப்பால் அருந்துவது சளித்தொல்லையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும். பத்து பூண்டுப்பற்களை 50 மில்லி பால், அதே அளவு நீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பாதி வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு தேவையான அளவு பனங்கல்கண்டு சேர்த்து இறக்கி நன்றாகக் கடைந்து இரவில் குடித்து வந்தால் நெஞ்சுச்சளி விலகும்.
செரிமானக் கோளாறு…
குளிர்காலத்தில் குறைந்த வெப்பத்தினால் பசி அதிகம் எடுக்காது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் செரிக்காமல் வயிற்றுக்கோளாறு மற்றும் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தலாம். வயிறு ஊதிக்கொண்டு மந்தநிலைக்கு சென்றுவிடும். இதைத் தவிர்க்க, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், கீரை வகைகளை அளவாகச் சாப்பிடலாம். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை உனவில் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் கைப்பிடி புதினா இலைகளுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து நீர்விட்டு வடிகட்டி அரை எலுமிச்சம்பழத்தின் சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இத்துடன் தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுத்துவையலும் சிறப்பான தீர்வைத் தரும்.
வயதானவர்களுக்கு மூட்டுவலி…
வயதானவர்களை பாதிக்கும் மூட்டுவலி ஏற்பட வயது, உடல் எடை அதிகரிப்பது, கால்சியம் குறைபாடு, பெண்களுக்கு மெனோபாஸ் என பல காரணங்கள் இருந்தாலும், குளிர்காலத்தில் வலி அதிகரிக்கும், காரணம் குறைந்த வெப்பநிலையால் சீரற்ற ரத்த ஓட்டம் காணப்படும். எனவே, குளிர்காலத்தில் மூட்டுகளில் அழற்சி ஏற்பட்டு அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். இத்தகைய சூழலில் பிரண்டை, முடக்கத்தான் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும்.
முடத்தை அகற்றும் முடக்கத்தான் :
முடக்கத்தான் கீரையுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, வெள்ளைப்பூண்டு, இஞ்சி சேர்த்து நீர் விட்டு கசாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலி மற்றும் வலிகள் சரியாகும். குறிப்பாக பிரண்டைத்துவையல். முடக்கத்தான் கீரை ரசம், சூப் அருந்துவதுடன் லெச்சக்கொட்டைக்கீரை, வாதநாராயணன் கீரை பொரியல் செய்து சாப்பிடுவதும் நல்லது.
இதயநோயாளிகள்…
இதயநோய் உள்ளவர்களுக்கு அதிக குளிர் காரணமாக இதயத்தின் செயல்திறன் குறையும். எனவே இதயத்திலிருந்து வெளிப்படும் ரத்தத்தின் அளவு (Cardiac output) குறைவதுடன் இதயத்துடிப்பும் சீராக செயல்படாமல் போகும். எனவே, இதயப் பிரச்சினை உள்ளவர்கள் குளிர்பிரதேசங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலையில் நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள்
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே வசம்பு, கற்பூரவல்லி, உரைமாத்திரைகளை உடன் வைத்திருப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்தால் வசம்பினை தீயில் சுட்டு கல்லில் உரசி (இழைத்து) தொப்புள் பகுதியில் பற்று போடலாம் அல்லது வசம்பினை தாய்ப்பாலில் உரசி நாக்கில் சிறிதளவு தடவினால் பலன் கிடைக்கும்.
தூதுவளை இலைகளுடன் சிறிது சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நசுக்கி சாறு எடுத்து சிறு குழந்தைகளுக்குக்கூட கொடுக்கலாம். இது மூக்கு வடிதல், நெஞ்சுச்சளி விலக உதவும்.
கற்பூரவல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்து லேசாக சூடாக்கி தேன் கலந்து சாப்பிட கொடுத்தாலும் சளி பிரச்சினைகளில் இருந்து காத்துக்கொள்ள முடியும். தலைக்கு குளிப்பாட்டியதும் உரைமருந்து கொடுப்பது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைத் தரும்.
இதுபோன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே மழை மற்றும் பனிக்காலங்களில் வரக்கூடிய சளித்தொல்லை, காய்ச்சல், செரிமானக்கோளாறு, வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.