உணவு டெலிவரி நபர்களை
கண்காணிக்க விதிகள்
உணவு மற்றும் மளிகைப் பொருள்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆள்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் மற்றும் சுவிகி, சுமோட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சிற்றுந்துகள்
புற நகரில் இயக்க அனுமதி
மக்களின் கருத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
ரூ.237.47 கோடி வருவாய்
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாக்காலத்தில் பேருந்து இயக்கத்தின் வழியாக அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் சுமார் ரூ.237.47 கோடி அளவில் இயக்கி வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.44.69 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை செயல் திட்டத்தை
உருவாக்க வேண்டும்
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்டுகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவித் தொகை போன் அழைப்பை
நம்ப வேண்டாம்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற குறிப்பிட்ட சில மாணவ, மாணவியரின் பெற்றோரின் அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளும் சிலர் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகவும், வங்கிக் கணக்கு மற்றும் ஒடிபி உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் கேட்கின்றனர். இதனால் மாணவ – மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் வந்தன. அதனால் போன்பே, ஜிபேயில் உதவித் தொகை அனுப்புவோம் என்று கூறும் அலைபேசி அழைப்புகள் மோசடியானவை. அவற்றை மாணவ – மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் நம்ப வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயரும்
அடுத்த ஆண்டு 8ஆவது ஊதிய கமிஷன் அமல்படுத்தப்பட்டால் ஒன்றிய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.25,740 கிடைக்கும். அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,25,000 பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,57,500 கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரிக்கை
‘மின்னணு தீர்வு’ இணைய தளம் மூலம் கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளில் 4,255 புகார்கள் பெறப்பட்டதாகவும், ரூ.25.46 கோடி ஒப்படைக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு செயல்முறை விளக்கம்
ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகளுடன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தலைமையில் அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு எந்திரத்தை உருவாக்கிய நிறுவனம் செயல்முறை விளக்கம் அளித்தது.
ஆதிதிராவிடர் மாணவர்கள் முனைவர் படிப்பு பயில ஊக்கத் தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப் படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் புதிய மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் (‘www.tn.gov.in/formdeptlist.php’) என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுக்கு இடஒதுக்கீடு சான்றிதழ் கட்டாயம்
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி நடத்தி வரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விதிமுறைகள் கடந்த 22ஆம் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகளின்படி சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான ஆபணங்களைச் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.