சென்னை, ஜன.26- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முடி திருத்தும் தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
6 அம்ச கோரிக்கைகள்
முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் தமிழ் நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் 24.1.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்ட களத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒலி முழக்கங்களை எழுப்பினர். பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
துப்பாக்கி வேண்டாம்
ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:- உங்கள் கோரிக்கைகளை நான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மருத்துவர் சமுதாயத்தை எஸ்.சி. பட்டியலுக்கு மாற்றுவது ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ளது. மற்ற கோரிக்கைகள் அனைத்தும் மாநில அரசால் செய்ய முடியும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நமக்கான உரிமைகளை பெற முடியவில்லை என்றால் நம்மால் முன்னேற முடியாது.
உங்கள் போராட்டம் வெற்றி பெற துப்பாக்கிகள் வேண்டாம். சீப்பும், கத்திரிக்கோலும் போதும். தற்போது இருக்கும் அரசு பெரியார் வழியில் இயங்கும் அரசு. இன்று ஒரு சிலர் அதன் அடிமடியிலேயே கை வைக்க துணிந்து விட்டனர். பெரியாரை இழிவுப்படுத்துபவர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரானவர்கள்.
சலூன் கடைகளில் பெரியார்
நாம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக போராடுகிறோம் என்றால் நமக்கு பெரியார் தேவை. நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனி உங்கள் முடிதிருத்தும் கடைகளில் பெரியார் படத்தை நீங்கள் வைக்க வேண்டும். பெரியாரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். பிரபாகரனால் மதிக்கப்பட்டவர் பெரியார். பெரியாரின் கருத்தியல் வாரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.