கன்னியாகுமரி,ஜன.26- மாணவ, மாணவிகள் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம், ஆளூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் 23.1.2025 அன்று சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினார்.
மாணவ, மாணவிகளிடம் அவா் கூறியதாவது:
பள்ளி இறுதித் தோ்வை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முழு நம்பிக்கையுடன் தொடா்ந்து பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும்.
பள்ளிக்கு தவறாமல் வந்தால் மட்டுமே உயா்நிலையை அடைய முடியும். இணையதள விளையாட்டுகளுக்கு அடிமை யாகாமல் கற்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் அவா்.
இதைத் தொடா்ந்து, பார்வதிபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு, உணவின் சுவை குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தார்.
குறைதீா் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் 24.1.2025 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை அருகில் சென்று பெற்றுக் கொண்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்ட அவா், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சேக்அப்துல்காதா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி, மாற்றுத்திறனாளிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.