சென்னை,ஜன.25- தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 22.1.2025 அன்று சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து தடுப்புகளை மீறி செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
வழக்குப் பதிவு
இதனிடையே, சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட வந்த பெரியாரிய ஆதரவாளர்களை தாக்குவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சீமான் வீட்டு முன்பு உருட்டுக்கட்டையுடன் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமானுக்கு ஆதரவாக அவரது வீட்டில் உருட்டுக்கட்டையுடன் திரண்ட 150 ஆண்கள், 30 பெண்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீண்டும் வர்த்தகப் போர்?
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வரவில்லையேல், அதிக வரி விதிக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கெனவே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோதுதான், சீனா, ரஷ்யா தயாரிப்புகளுக்கு அதிக வரி விதித்தார். அதற்கு பதிலடியாக அந்நாடுகளும் அதிக வரி விதித்தன. இந்நிலையில் டிரம்ப், அதே தொனியில் பேசியிருப்பது மீண்டும் வர்த்தகப் போரை உருவாக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.