அவதூறுகளால் அழிக்க முடியாதவர் பெரியார்!

3 Min Read

தந்தை பெரியார் தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்கச் சிந்தனையாளர். உலகளவில் ஒப்பிடத்தக்க பெண்ணியக் கருத்துகளை முன்வைத்தவர். ‘பெண்ணியவாதிகளின் பைபிள்’ என்று போற்றத்தக்க, சீமோன் தி பொவார் எழுதிய ‘தி செகண்ட் செக்ஸ் The Second Sex நூல் வெளிவருவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற மாபெரும் கருத்துக் களஞ்சியத்தைத் தந்தவர்.

அவர் ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், ஏழை, எளிய மக்களுக்காகச் சிந்தித்தவர். ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததுடன் சமதர்மப் பிரச்சாரம் செய்தவர். அவர் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர் அல்ல.

ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாக நின்றவர். ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற அம்பேத்கரின் நூலை மொழிபெயர்த்ததுடன், ‘தாழ்த்தப்பட்டோருக்கான இரட்டை வாக்குரிமை’, ‘மதமாற்றம்’ போன்ற அம்பேத்கரின் நிலைப்பாடுகளை ஆதரித்து ‘அம்பேத்கர் எனக்குத் தலைவர், உங்களுக்கும் அவர்தான் தலைவர்’ என்றவர். பெரியார் ஆணாகப் பிறந்தவர். ஆனால், பெண்களின் உரிமைகளுக்காகச் சிந்தித்தவர்.

இறக்கும்வரை மூத்திரச்சட்டியை ஏந்தியபடி, ஜாதிய இழிவு ஒழிக்க உழைத்தவர். ஆனால், அந்தப் பெரியாரைத்தான் இழிவு செய்ய, அரசியல் நேர்மையும் அறிவுநாணயமும் இல்லாத ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.

தந்தை பெரியார் எப்போதும் விமர்சனங்களைச் சந்திக்கத் தயங்கியவர் அல்ல. அவர் வாழும் காலத்திலேயே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஆனால், அவர் பேசும் கூட்டங்களில் எல்லாம் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் இடமளித்தவர்.கல், முட்டையோடு, மலம் என அவர்மீது பல பொருள்களை வீசி எறிந்திருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான். எந்த மக்கள் இதையெல்லாம் அவர்மீது எறிந்தார்களோ, அந்த மக்களின் உரிமைகளுக்காகவே அவர் பேசினார். அவர் இறந்து, 50 ஆண்டுகள் ஆனபின்னும் அவரை அவதூறு செய்ய ஜாதிய, மதவாதச் சக்திகளும் அவர்களிடம் கூலிவாங்கிக்கொண்டு குரைக்கும் கும்பலும் கிளம்புகிறது என்றால், அதுதான் தந்தை பெரியாரின் வெற்றி.

அவர் எப்போதும், தான் சொன்னதை எல்லோரும் அப்படியே கண்மூடித்தனமாக நம்பவேண்டும் என்று சொன்னவரில்லை. ‘நானே சொன்னாலும் நம்பாதே. பகுத்தறிவு கொண்டு சிந்தி உன் அறிவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், என் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை’ என்றவர் பெரியார். ஆனால், இன்று அவரை அவதூறு செய்யக் கிளம்பியிருக்கும் பொய்யனோ ஆமைக்கறி, அரிசிக்கப்பல் கதை சொல்லி, மூளையற்ற மூடர் கூட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பவர். தந்தை பெரியார். தான் பேசும் கூட்டங்களில் புத்தகங்களைக் கொண்டுவந்து ஆதாரங்களை அடுக்கிப் பேசியவர். ஆனால், பெரியார் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு கிளப்பி, ஆதாரம் கேட்டால் ஓடி ஒளியும் கோழைகள்தான் அவர் சிந்தனைகளை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். எச்சில் துப்பி சூரிய நெருப்பை அழிக்க முடியாது என்பதை அறியாத மடையர்கள் அவர்கள். ஆனால், அறியாமை மட்டுமே இதற்குக் காரணமில்லை. அரசியல் சூழ்ச்சிதான் முக்கியமான காரணம்.

இன்று பெரியாரின் மானுடச் சிந்தனைகளை உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள் ஏற்று உரையாடுகிறார்கள். பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் இன்று இந்திய அரசியலின் மய்யமாகியிருக்கிறது. பெரியாரின் நவீனப் பார்வைகள் இன்று அறிவியல் சாத்தியங்கள் ஆகியிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் முதல் நாடாளுமன்றம் வரை பெரியார் நிளைவுகூரப்படுகிறார். உரிமைப்போராட்டங்களில் உச்சரிக்கப்படும் உதடுகளாய் பெரியார் இருக்கிறார். தமிழ்நாட்டில் மதவாதச் சக்திகள் நுழைய முடியாத தன்மான தடுப்புச்சுவராகப் பெரியார் இருக்கிறார். அவரின் சமூகநீதிச் சிந்தளைகளை ஏந்தி, திராவிட முன்னேற்றக்கழகம், கழகத்தலைவர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

இதைச் சீர்குலைக்க வேண்டும், மதவாதச் சக்திகள் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அடிவருடி ஆதாயக் கும்பல் பெரியாரை, திராவிடத்தை ஒழிப்பதுதான் என் முழுநேர வேலை’ என்று கிளம்பியிருக்கிறது. அவர் தாடி முடிக்குக்கூட சேதாரம் ஏற்படாமல், தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
நன்றி: ‘முரசொலி பாசறை’ 24.1.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *