மனித உடல்களின் இறுதிப் பயணங்கள் (1)

2 Min Read

மனித வாழ்வில் உறவுகள் என்பவை மிக முக்கியம். காரணம், மனிதர்கள், சமூகத்தில் வாழும் கூட்டுப் பிராணிகள் அல்லவா?
சமூகம் என்பது ஒரு கூட்டுக் குழுவாகி, தங்களது பகுத்தறிவு, பட்டறிவு, படிப்பறிவு மூலம் காலங்காலமாக இயற்கையோடு எதிர்நீச்சல் போட்டு, வென்று புதியதோர் வழி முறைகளை – வாழ்வை ‘லகுவாக்கிட’ குறைந்த உழைப்பில் நிறைந்த பலன்களைத் தரும் பயன்பாட்டுக்குரிய புதுமைகளை அனுபவித்து மகிழும் மனிதர்களாக வாழுகிறார்கள்.
அதனால் தான் ‘கல்விக்குக்கூட ஒரு புத்தம் புதிய பெயரை – சொல்லாக்கத்தை சிலகாலம் முன்புகூட ‘மனிதவளம்’ (Human Resources) என்ற தலைப்பிட்ட சொல் புழக்கத்திற்கு வந்தது போலும்!

பிறக்கும் மனிதனுக்கு அவன் இறக்கும் வரையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எத்தனை எத்தனை சோதனைகள் – துன்பங்கள், துயரங்கள்!! நோயும், இல்லாமை, போதாமை, கல்லாமை, வறுமை போன்றவற்றினை மனித சமூகம் சந்திப்பதும் அதனை வென்று காட்டுவதும்தான் முடியாத ஓர் தொடர் போராட்டமாகவே இருக்கிறது!
ஆங்காங்கே அது பல ரூபங்களில் வெடித்து வெளிவரவும் – கலவரமாகவும் உண்டு!
ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் உலகம் உருவான காலந்தொட்டே ஒன்றுக்கு மற்றொன்று கண்ணா மூச்சி விளையாட்டு விளையாடி வருவதும் இயல்பாகவே ஆகிவிட்டது. பிறந்து, வாழ்ந்த மனிதர் பிறகு தனது ஓய்வு ஊதிய பருவம் – பிறகு இறப்பு என்று ஏற்படுவதுதான் மனித வாழ்வுக்குரிய பல்வேறு கூறுகள்.

ஆனால் அடக்கம் – அல்லது எரியூட்டல் அல்லது வேறு சில முறைகள் என்பவை, மதங்கள், கொள்கைகள், நம்பிக்கைகள், கலாச்சாரங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், ஏன் ஒரே பிரிவினருக்குள்ளும் பல பண்பாட்டு பாரம்பரியம் காரணமாக மனிதர்கள் இறுதிப் பயணம் வெவ்வேறு பரிமாண வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது!
புதைப்பது (Burial) என்பது ஒரு வகை; எரியூட்டல் (Cremation) என்பது மற்றொரு வகை, மதங்கள் – சடங்குகள் – நம்பிக்கைகளே பெரிதும் இம்முறைகளைப் பின்பற்றுதலுக்கு அடிப்படைகளாக அமைகின்றன!
பார்சி மதத்தினர், புதைப்பதோ, எரியூட்டலோ செய்யாமல் இரண்டிற்கும் அப்பாற்பட்டு வேறு ஒரு முறையை இறந்து போன உடல்களுக்குச் செய்வதும் பலருக்கு விசித்திரமாக இருக்கும் – இறந்தவர் உடல்களை குன்றின் மேலே சவப் பெட்டிக்கு வெளியே வானவெளியில் தெரியும்படி வைப்பது – அவரது இறுதிச் செயல்முறை. கழுகுகள் வட்டமடித்து அதைக் கொத்தி கொத்தி தங்களுக்கு உணவாக்கிக் கொள்வது என்பது!

பகுத்தறிவாளர்களோ, மருத்துவக் கல்லூரிகளுக்கு உடலை – உறுப்புகளைக் கொடையாகக் கொடுத்து, அதன் மூலம் மருத்துவப் படிப்பிற்கு தேவையான பாடம் சொல்லிக் கொடுக்கப் பயன்படட்டும் என்ற முறையை செய்கிறார்கள்.
சடங்குகள், சம்பிரதாய செலவுகள், அவதிகளிலிருந்து உறவுகள் நிம்மதி பெறுகின்றன.
மனித குலம் வாழ்வதற்கு, பயிர் வளர உரம் போடுவதுபோல் நோய்களை வெல்ல மருத்துவரை நாடுவது – சிகிச்சை முறைகளுக்குப் பாடம் போதித்தல் போன்ற பலவற்றிற்கு பயன்படும் அருமையான வழிமுறை – சமூகப்பார்வை –
ஆத்மா மூடத்தனத்திற்கும்கூட இது விடை கொடுத்து, விவரமறிந்து பக்குவப்பட்ட அறிவு பளிச்சிட்டுக் காட்டி புதுமையைப் பாய்ச்சுகிறது என்பது உண்மைதானே! சிக்கனத் தத்துவமும் இதன் மூலம் வாழ்க்கை நெறியாகிறது.
(வளரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *