புனைவாகவும் வரலாறு திரிவற்றும்… இரா.எட்வின்

3 Min Read

“கலை கலைக்காக” என்பதை உறுதி யாக ஏற்க மறுப்பவர் தோழர் தளபதிராஜ். இன்னும் சரியாகச் சொல்வதெனில் “கலை மக்களுக்காக” என்பதில்கூட போதாமை இருப்பதாக உணர்பவர் அவர்.

“சகலமும் பெரியாருக்கு” என்று கருதும் நானறிந்த தீவிர பெரியார் தொண்டர்களில் தளபதிராஜ் ஒருவர்.
அவரிடமிருந்து வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு விழா நேரத்தில் “நாலு தெருக் கத” என்கிற நாவல் ‘திராவிடன் குரல்’ வெளியீடாக வந்திருக்கிறது.

“சரி! தூக்கம் வரலைன்னா அந்த வைக்கம் கதையைச் சொல்லுங்களேன்!” என்று இனியவனிடம் தேன்மொழி கேட்பதாக இந்த நாவலின் இருபத்தி ஆறாவது பகுதி முடியும்.

தூக்கம் வருகிறவரைக்கும் சொல்கிற மாதிரி யாகவும் கேட்கிற மாதிரியாகவும் வைக்கம் போராட்டத்தை கதையாகச் சொல்ல முடியுமா? ‘முடியும்’ என்று முயற்சித்து நிறுவி இருக்கிறார் தளபதிராஜ்.

இந்த நாவலில் வரும் அறிவுக்கரசு, பார்வதி, வடிவேலு, முத்தம்மா, இனியவன், தேன்மொழி, எழிலரசி, இளமாறன், மல்லிகா உள்ளிட்ட அனைத்துக் கதாபாத்திரங்களும் அவர்கள் வழி யாக ஏதோவொரு வகையில் பெரியாரையும் அவரது சித்தாந்தத்தையும் வாசகர்களிடம் கொண்டுசெல்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள்.
அதிலும் குறிப்பாக தேன்மொழி மற்றும் இனியவன் ஆகியோரை அவர்கள் வழியாக வைக்கம் போராட்டத்தை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்காக வென்றே படைத்திருக்கிறார் ஆசிரியர்.

கதைகளை, புராணங்களை வர லாறாகத் திரித்துக்கொண்டிருக்கும் இன்றைய போக்கு குறித்து இந்த நாவலின் முன்னுரையில் பழ. அதியமான் மிக அழகாகச் சொல்கிறார். அவர் சுட்டும் அந்தப் போக்கை முன்னெடுப்ப தற்காக எத்தனை லட்சம் கோடிகளை வேண்டு மானாலும் வாரிக் கொட்டுவதற்கு இன்றைய பாஜக அரசு தயாராக இருக்கிறது.

அவர்களுக் கென்ன இருக்கவே இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா மேடம். ஏதோ ஒரு வரியைப் போட்டு மக்களைச் சுரண்டி அதை இந்தப் பக்கமாக மடைமாற்றி விடுவார்.

கதைகளை வரலாறாகத் திரிப்பதற்கு மெனக்கெடத் தேவை இல்லை. ஆனால் வர லாறு ஒன்றினை கதையாக்குவதற்குத் தரவுகள் வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டும். தரவுகளைத் திரட்டிவிட்டால் மட்டும் போதாது. அதைக் கதைப்படுத்த வேண்டும்.

புனைவாகவும் இருக்க வேண்டும். வர லாறும் திரிவற்று இருக்க வேண்டும்.

இத்தனையையும் அய்ந்தாம் பக்கம் தொடங்கி 196 ஆம் பக்கத்திற்குள், அதாவது 192 பக்கங்களுக்குள் தருவ தென்பது சாதாரண விஷயமல்ல. மெனக்கெட்டிருக்கிறார் தளபதிராஜ்.

பிரச்சாரம் கலை ஆகுமா? ஆகும் என்று நிரூபித்திருக்கிறார் தோழர்.

ஒரு போராட்ட வரலாற்றினை ஒரு நாவ லாகத் தரமுடியும் என்று “நாலு தெருக் கத” மூலம் நிறுவியிருக்கிறார் தளபதிராஜ்.

போராட்டத்தைக் கதைப்படுத்து வதற்காக இவர் உருவாக்கிய கதையையும் இவர் சல்லிசாக விட்டுவிடவில்லை.
இந்தக் கதையில் இரண்டு பெண் பார்க்கும் படலங்கள், இரண்டு இணை யேற்புகள், இரண்டு பிள்ளைப் பேறுகள், ஒரு கார் வாங்கு தல், ஒரு மரணம், ஒரு படத்திறப்பு என்று நிகழ்வுகள் உள்ளன.

அந்த நிகழ்வுகளுக்கான தயாரிப்பு களையும், நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் எழுதும் போது எனக்கு நான் இன்றைக்கும் வியந்து பார்க்கும் எனது பதினாறு வயதில் வாசித்த வாசந்தி அம்மாவின் எழுத்து வசீகரத்தைக் காண முடிகிறது. ஒரு போராட்டத்தை வால்யூம் வால்யூமாக வாசித்து, குறிப்பெடுத்து, திரும்பத் திரும்ப அதை வாசித்தாலும் கொஞ்சம் மறந்து போவதை அனுபவித்திருக்கிறோம்.

கதை வழி வரும்பொழுது அந்த மறத்தலின் அளவு வெகுவாகக் குறையும்.

அதற்குக் கேட்கிற மாதிரி கதை சொல்ல வேண்டும். இதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார்.
அதுவும் முதலில் திறக்கப்படாத கிழக்குத் தெரு குளத்தில் இனியவன் கால் நனைக்கும் போது நம்மிடம் சிலிர்ப்பைக் கொண்டு வருவதன் மூலம் இரண்டு பகுதிகளையும் நேர்த்தியாக இணைக்கிறார்.

வைக்கம் போராட்டத்தைக் காமிக்சாகக் கொண்டுவர இருப்பவர் யாராக இருப்பினும் அவருக்கு இப்போதே வாழ்த்துகள்.

“நாலு தெருக் கத”
நூலாசிரியர் : கி.தளபதிராஜ்
வெளியீடு : திராவிடன் குரல்
விலை: ரூ.200

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *