சென்னை, ஜன.24 குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
தேநீர் விருந்து
ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறும். வழக்கமாக இந்த விருந்தில் பங்கேற்க முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், வரும் 26ஆம் தேதி இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆளுநர் மாளிகையில் மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டு, குடியரசு தின விழா தேநீர் விருந்தில் , முதலமைச்சர் பங்கேற்காவிட்டாலும் அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை
100 கோடியை தொடுகிறது
புதுடில்லி, ஜன.24 இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நாளை வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒன்றிய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலின்போது 96.88 கோடியாக இருந்தது. இது இப்போது 99.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 21.7 கோடி ஆகும். வாக்காளர்களில் பாலின விகிதம் கடந்த ஆண்டில் 948 ஆக இருந்தது. இது இப்போது 954 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத் தேர்தல்
அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்
ஈரோடு, ஜன.24 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தி.மு.க. வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அஞ்சல் வாக்கு
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் அஞ்சல் வாக்களிக்கின்றனர். வாக்கு சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று அஞ்சல் வாக்குகளை பதிவு செய்கின்றனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி அஞ்சல் வாக்கு பெறப்படுகிறது. அஞ்சல் வாக்குகளை பெற 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் அஞ்சல் வாக்குகளை பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 27-ஆம் தேதி வரை அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.