இவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

viduthalai
2 Min Read

 சென்னை, ஜன 24 பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களைச் செய்வதும் சொல்வதும்கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அம்பத்தூரில் உள்ள HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் குறித்து விசாரித்த அந்த நிறுவனத்தின் விசாகா குழு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக் கூடாது என பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை எதிர்த்து மார்க்கெட்டிங் அதிகாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை தொழிலாளர் நல நீதிமன்றம், அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி, அந்த அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணை இதனை எதிர்த்து HCL நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, HCL நிறுவனம் தரப்பில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்கள் வேலை பார்க்கும் மேஜைகளுக்கு பின்னால் நின்று கொண்டு அவர்களை தொட்டு, கை குலுக்கக் கூறி உடை அளவைக் கேட்டு தவறாக நடந்து கொண்டார். விசாகா குழு இயற்கை நீதி கொள்கையின்படி தான் விசாரித்தது என்றும், மூன்று பெண்களும் சம்பந்தப்பட்ட நபரின் செயல் மற்றும் வார்த்தைகள் தங்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விசாரணை குழு முன்பாக தெளிவாக கூறியுள்ளனர்” என்றும் வாதிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில், “பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், உயர் அதிகாரி என்ற முறையில், அப்பெண்களின் இருக்கைக்கு பின் நின்று கண்காணித்ததாகவும்” வாதிடப்பட்டது. பாலியல் துன்புறுத்துதல் அதிகாரி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி மஞ்சுளா, பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத் தும் செயல் அல்லது வார்த்தைகள் கூட, சட்டப்படி பாலியல் துன்புறுத்தல் தான் என்று தெளிவுபடுத்தினார். தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி மஞ்சுளா, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என்றும் தீர்ப்பளித்தார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண்கள், ஒரு செயலை எப்படி உணர்கிறார் என்பது தான் முக்கியமே தவிர, துன்புறுத்துபவரின் நோக்கங்கள் என்ன? என்பதை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற தெளிவை நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *