பார்ப்பன சங்க மாநாட்டில் பார்ப்பன நீதிபதிகள் பங்கேற்பதா?

2 Min Read

‘‘கருநாடக பிராமண மகாசபா’’வின் பொன்விழாவை முன்னிட்டு, கருநாடகாவின் பெங்களூருவில், ‘விஸ்வமித்ர’ என்ற பெயரில் பார்ப்பனர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் பேசியதாவது: ‘‘நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் ஏழு பேர் இடம் பெற்றிருந்தனர். அதில், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி அய்யங்கார், பி.என்.ராவ் ஆகிய மூவரும் ‘பிராமணர்’கள்.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அம்பேத்கர், ‘பி.என்.ராவ் மட்டும் வரைவை உருவாக்காவிட்டால், அரசமைப்புச் சட்டம் தயாராவதற்கு, இன்னும் 25 ஆண்டுகளாகியிருக்கும்’ என, குறிப்பிட்டார்.

பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு -ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; இராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக ‘‘பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்புச் சட்டத்திலும் இடம் பெற்றுள்ளன’’. இவ்வாறு ஒரு நீதிபதி பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காகப் போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், பிரச்சினைகள் குறித்தும் பேச வைக்கிறது,” என குறிப்பிட்டார்.
‘தினமலர்’ 22.01.2025
நீதிபதிகள் பார்ப்பனர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது என்பது பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய அரசின் அதிகாரத்தில் வந்தது முதல் சர்வ சாதாரணமாகி விட்டது.

மதச் சார்பற்ற தன்மையை இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தியிருந்தும், அதனை சட்டை செய்யாமல் உயர்நீதிமன்ற நீதிபதிகளே பார்ப்பனர் சங்கங்களில் கலந்து கொள்வதும், ஹிந்து மத வேத நூல்களைப்பற்றி உச்சிக் குளிரப் பேசுவதும் எந்த வகையைச் சார்ந்தது?
அர்ச்சகர் பிரச்சினை, இடஒதுக்கீடுப் பிரச்சினை கோயில் பிரச்சினை, பார்ப்பனர்களது பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சூழல் இந்த நீதிபதிகளிடம் வந்தால், அவர்களின் தீர்ப்பு நேர்மையாகவும், சட்டப் படியாகவும் இருக்குமா?

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும், இதற்குமுன் கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு உயர்நீதிமன்ற பெண் நீதிபதியும் கலந்து கொண்டதுண்டே!
‘பிராமணன்’ என்பதை ஒரு ஜாதியாகப் பார்க்காமல் வர்ண தர்மத்துடன் பார்க்க வேண்டும் என்று கருநாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பார்ப்பன சங்க மாநாட்டில் பேசியது எத்தகைய உணர்வு!
பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், இடுப்பில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன், சூத்திரன் என்றால் விபசாரி மகன் என்கிற வருண தர்மத்திற்கு வக்காலத்து வாங்கி ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி பார்ப்பன சங்க மாநாட்டில் பேசுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?
‘‘பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு’’ என்று இரு பார்ப்பன நீதிபதிகள் முன்னிலையிலேயே நீதிமன்றத்தில் அறிவித்தாரே தந்தை பெரியார்.
பார்ப்பன சங்க மாநாட்டில் பங்கேற்ற நீதிபதிகள் மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குரைஞர் சங்கத்தினரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் மனு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *