சுயஉதவிக்குழு மகளிருக்கு
வாடகையில் கருவிகள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண் விவசாயிகளுக்கு வெளிச் சந்தை வாடகையைவிட குறைவான வாடகை தொகையில் வேளாண்மையில் பயன்படுத்தும் இயந்திரங்கள், துணைக் கருவிகள், குறிப்பாக டிராக்டர்கள், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல்களை அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஓர் அறிவிப்பும் இன்றி முடக்கி வைக்கப்படும் (சஸ்பெண்ட்) அல்லது திரும்பப் பெறப்படும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு இயக்கம்
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு ரூ.10 கோடி செலவில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் வரும் 26ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடங்கப்படவுள்ளது. இதில், நகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கவும், அவற்றால் ஏற்படும் தீமைகளைக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உள்ளனர்.
மேட்டூர் அணை உறுதியாக உள்ளது
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில், அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்ட மேற்பார்வை பொறியாளர் வீரலட்சுமி, செயற்பொறியாளர் வடிவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அணையின் வலது கரையில் உள்ள நில அதிர்வு கண்காணிப்பு அறையில், சுமார் 30 நிமிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பிறகு அதிகாரிகள் கூறுகையில், ‘மேட்டூர் அணை நல்ல உறுதியுடன் உள்ளது. அணை நிரம்பிய நிலையில் இருந்த போதும், நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியபோதும் எவ்வித அதிர்வுகளும் பதிவாகவில்லை என தெரிவித்தனர்.