பினாங்கு, ஜன. 24- மறைவுற்ற (20.1.2025) மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை இறுதி நிகழ்வும் – ஊர்வலமும் கடந்த 22-01-2025 அன்று காலை 10.30 மணியளவில்; எண். 4-19 புளொக் பி. விடூரி அடுக்ககம், செம்பா சாலை, பட்டர் வோர்த் — கீழ் தளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் நடைபெற்றது.
ம.தி.க. பினாங்கு மாநிலத் தலைவர் கவிஞர் செ.குணாளன், இரங்கல் முன்னுரையாற்றி நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.
அனைவரையும் அரவணைத்தவர்
மறைந்த தலைவருக்கு ஒரு மணித்துளி அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் துணைத்தலைவர் சா. பாரதி நிகழ்வுக்குத் தலைமையேற்று இரங்கல் உரையாற்றினார். அவரது உரையில்,
கழகத் தேசியத் தலைவராக ச.த. அண்ணாமலை கடந்த 2019இல் பொறுப்பேற்ற காலமுதலாக இயக்க நலனில் மிகுந்த அக்கறையோடு, அனைவ ரையும் அரவணைத்து கழகத்தை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பிரிவு பேரிழப்பாகும். அவர் இல்லாத இந்நிலையில், அவர் விட்டுச் சென்றப் பணியை செவ்வனே செய்ய உறுதியேற்போம் என்றார்.
தொடர்ந்து, மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவரும், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக மதியுரைஞருமான இரெ.சு.முத்தையா இரங்கலுரையாற்றினார். அவர் தமதுரையில்;
மறைவுற்ற அண்ணாமலை என்னோடு, அரை நூற்றாண்டு காலம் கழகப் பணியில் உற்ற தோழராகப் பயணித்தவர். மறைந்த தலைவர் திருச்சுடர் கே. ஆர். இராமசாமி முதல், பி.எஸ். மணியம், எப். கந்தராஜ் ஆகியோரது தலைமைத்துவக் காலத்திலும் இயக்கப் பணியில் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டவர். என்னுடைய தலைமைத்துவக் காலத்திலும் கழகத் தேசிய உதவித் தலைவராகவும், பினாங்கு மாநிலத் தலைவராகவும் திறம்பட செயல்பட்டார்.
தமிழர் தலைவரது வலியுறுத்தல்
இன்று டத்தோ அண்ணாமலையை இழந்து விட்டோம். அவர் விட்டுச் சென்ற பணிகளைமுறையாக செயல்படுத்தும் கடப்பாட்டில் நாம் இருக்கிறாம். தமிழர் தலைவர், ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள் வலியுறுத்திடுவது போன்று கழகத்தோழர்கள் பெரியார் இயக்கத்தில் பல்வேறு அமைப்புகளில் இருந்தாலும் நடவடிக்கைகளில் கழக நலன் கருதி ஒன்றிணைந்து செயல்படுவதே பாதுகாப்பாகும். நமக்கு கொள்கை எதிரிகள் அதிகமாகியுள்ள இவ்வேளையில் நாம் ஒன்றிணைந்து தந்தை பெரியார் அணியாக செயல்படுவோம் என தமது இரங்கலுரையில் இரெ.சு.முத்தையா கேட்டுக்கொண்டார்.
இந்த இரங்கல் நிகழ்வில், மக்கள் சக்தி இயக்கத் தலைவர் டத்தோ சிறீ ஆர்.எஸ். தனேந்திரன், கழகத்தின் தேசியப் பொதுச்செயலாளர் பொன். பொன்வாசகம் இரங்கலுரை யாற்றினர்.
அடுத்து அன்னாரின் உடலுக்கு கலந்து கொண்ட அனைவரும் மலர் தூவி தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.
அணி அணியாக வந்து மரியாதை
குறிப்பாக, பினாங்கு மாநில மேனாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி, டத்தோ புலவேந்திரன், தொழிலதிபர் அருணாசலம், அறநிலையத்துறை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், பேரா மாநில பெரியார் பாசறையின் பொறுப்பாளர்கள், தமிழர் தன்மான இயக்கப் பொறுப்பாளர்கள், கருஞ்சட்டை இளைஞர் படைத் தோழர்கள், தமிழ் முசுலிம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்பாடுக் கழகம், பெரியார் நற்பணிக்கழகம், பினாங்கு மாநிலத்திலுள்ள சமூக இயக்கப் பொறுப்பாளர்கள், அரசியல் இயக்கப் பிரமுகர்கள், திரளாகக் கலந்து கொண்டு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தியப் பின்னர்; இறிதியாக, ம.தி.க. பினாங்கு மாநிலச்செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
அதன் பின்னர் டத்தோ ச.த. அண்ணாமலை அவர்களின் உடல் ம.தி.க.கம்போங் ராஜா கிளைத் தலை வரும், சூரியன் எண்டர்பிரைசின் நிறுவனருமான வ.கதிரவனுக்குப் சொந்தமான இறுதிப் பயண ஊர்தியில், மத்திய செபராங் பிறை, புக்கிட் மெர்தாஜாம் – பிராப்பிட் மின் சுடலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின் எரியூட்டப்பட்டது. அங்கு, நிறைவாக இரா.ப. தங்கமணி இரங்கல் உரையுடன் அனைவருக்கும் நன்றி கூறினார்.