சிவகங்கை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

viduthalai
3 Min Read

ஒன்றிய அரசின் திட்டங்களையும்
மாநில அரசு நிதியில் தான் செயல் படுத்தும் நிலை

சிவகங்கை, ஜன.23 ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் நிதியைக் கொண்டுதான் செயல்படுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ஆஷாஅஜித் வரவேற்றார். ரூ.50 லட்சத்தில் நகரம்பட்டியில் வாளுக்குவேலி சிலை திறப்பு உள்பட ரூ.51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிவகங்கையில் ரூ.1.07 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலைகள், காரைக்குடியில் முடியரசனுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை உட்பட ரூ.164 கோடியில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

எண்ணற்ற திட்டங்கள்

பின்னர் 53,039 பயனாளிகளுக்கு ரூ.161.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த மூன்றரை ஆண்டுகளில் சங்கரபதிகோட்டை புனரமைப்பு, மினி விளையாட்டு அரங்கு, நியோ அய்டி பூங்கா, சட்டக்கல்லூரி, செட்டிநாடு வேளாண் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகள் இம்மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளன. சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம் கட்டப்படும். திருப்பத்தூரில் வாகன நெரிசலைத் தடுக்க, திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை, ரூ.30 கோடியில் காரைக்குடி மாநகராட்சிக்கு அலுவலகம் அமைக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எண்ணற்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவேதான், திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதத்தைக்கூட நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? 2021 தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 389-அய் நிறைவேற்றியுள்ளோம். மீதியுள்ள 116 வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவோம். இதைத் தெரிந்தும் எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்களைக் கூறி வருகிறார். மற்றொரு கட்சித் தலைவரின் அறிக்கையை ‘காப்பி-பேஸ்ட்’ செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 2011, 2016 தேர்தல்களில் அதிமுக அறிவித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன, அதற்கான அரசாணை எண், பயனாளிகளின் விவரங்களைப் பட்டியலிட்டு, புத்தகமாக வெளியிட எதிர்க்கட்சித் தலைவர் தயாரா?
பதவிக்காக மட்டுமே

2011-ல் உபரி வருவாய் மாநிலமாக தமிழ்நாட்டை திமுக விட்டுச் சென்றது. 2013 முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு. 2017-2019-ஆம் ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினர். நெருக்கடியில் இருந்த தமிழ்நாட்டை நாங்கள் மீட்டுள்ளோம்.

அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்த போதும், மாநிலத்துக்காக எதையும் கேட்டுப் பெறவில்லை. பதவிக்காக மட்டுமே டில்லிக்குச் சென்றனர்.

ஆனால், தற்போது ஒன்றிய அரசு எங்களை எதிரிகளாகப் பாவித்து, மக்கள் நலத் திட்டங்களை முடக்குகிறது. ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை மீறித்தான், தமிழ்நாட்டை முன்னேற்றி இருக்கிறோம்.

ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் நிதியைக் கொண்டுதான் செயல்படுத்தி வருகிறோம். இதையெல் லாம் கருத்தில் கொள்ளாத எதிர்க் கட்சித் தலைவர், தமிழ்நாடு திவாலாகி விட்டதாகக் கூறுகிறார். திவாலாக வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமா? அரசின் செலவுகளை வெட்டிச் செலவு என்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை வெட்டிச் செலவு என்று கூறி கொச்சைப்படுத்துகிறாரா? ஒவ்வொரு வீட்டுக்கும் திமுக அரசின் சாதனை சென்றடைந்து வருகிறது. அது தொடரும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செங்கோல் வழங்கினார். அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோவி.செழியன், சாமிநாதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *