இன்றைக்கு ஸ்மார்ட் வாட்ச் மிகப் பிரபலமாகி வருகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு துாரம் நடக்கிறோம், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு என்ன என்பன போன்ற விவரங்களை இது கண்காணிக்கிறது.
ஆரோக்கியம் கருதி இவற்றை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த கடிகாரத்தை அணிய நாம் பயன்படுத்தும் பட்டைகளால் (ஸ்ட்ராப்) உடல்நல கோளாறுகள் ஏற்படும் என்று கூறுகிறது.
பாலி ப்ளுரோ அல்கைல் சப்ஸ்டன்ஸ் – பி.எப்.ஏ.எஸ்., (Poly fluoroalkyl substances – PFAS) என்பவை, பல்வேறு துறைகளில் பயன்படக்கூடிய ஒரு வேதிப் பொருள். தண்ணீர், எண்ணெய் ஆகியவை ஒட்டாது என்பதால், இது துணிகள், குடை ஆகிய பொருட்கள் மீது பூச்சாகப் பயன்படுகிறது. இது சாதாரணமாக மட்குவது இல்லை. அதனால் தான் இவற்றை, ‘நிரந்தர இரசாயணங்கள்’ (Forever chemicals) என்று கூறுகின்றனர். இவை நம் உடலுக்குள் ஊடுருவினால், நீரிழிவு முதல் புற்று நோய் வரை ஏற்படும்.
நாம் நம் தோலை ஒட்டி அணிகிற கடிகாரப் பட்டையில் இருந்து, இந்த ஆபத்தான வேதிப் பொருட்கள் நம் உடலுக்குள் நுழைகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலை, 22 வெவ்வேறு கடிகார நிறுவனங்களின் கடிகாரப் பட்டையை சோதித்துப் பார்த்தது. அவற்றில், ஒன்பது தயாரிப்புகளில் இந்த ஆபத்தான வேதிப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரணமாக அழகு சாதன பொருட்களில் பயன்படும் நிரந்தர வேதிகளின் அளவை விட, இவற்றில் நான்கிலிருந்து எட்டு மடங்கு அதிகமாக இருந்தன.
இதனால், கைக்கடிகாரம் வாங்குபவர்கள் அதன் பட்டையை அணிவதற்கு முன், அதில் உள்ள இரசாயணப் பொருட்கள் என்னென்ன என்பதை உரிய நிறுவனங்களிடம் இருந்து தெரிந்து அணிவது நல்லது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.