வால் நட்சத்திரம் நமக்கு தெரியும். அது என்ன வால் கோள் என்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் விஞ்ஞானிகள் நம் பூமியை விட 90 மடங்கு பெரிய கோள் ஒன்றை கண்டறிந்து உள்ளனர்.
நம் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கிற கோள்கள், வெளிக் கோள்கள், அதாவது ‘எக்ஸோ பிளானட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறான 5,000க்கும் மேற்பட்ட கோள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கோள் முற்றிலும் வித்தியாசமானது. இதற்கு ‘வாஸ்ப்69பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாலின் மொத்த நீளம் 5,80,000 கிலோ மீட்டர். இது பூமிக்கும் நிலவிற்குமான தொலைவில் பாதிக்குச் சமமானது.
இது தன்னுடைய நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் நட்சத்திரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சு கோளைச் சூடாக்குகிறது. இதன் காரணமாக இந்தக் கோள் தன்னுடைய வளிமண்டலத்தை இழந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்கள் நொடிக்கு 2 லட்சம் டன் என்கின்ற அளவில் வெளியேறிக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறு வாயுக்கள் வெளியேறுவதுதான் வால் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. இதை மேலும் ஆராய்ந்தால், பிரபஞ்சத்தின் அறியப்படாத விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்.