ஒருவருக்கு ஒரு கனவும், அதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், அதை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார் டில்லியை சேர்ந்த ஆர்த்தி ராவத். சமூக வலைத்தளங்களில் ‘பேப்பர் கேர்ள்’ என்று வர்ணிக்கும் அளவிற்கு காகிதங்களில் பல கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். ‘ராவ் அண்ட் கிராப்ட்’ என்ற பெயரில் காகிதங்களில் பலவிதமான பொருட்களை செய்து விற்பனை செய்து வருவதோடு மட்டுமில்லாமல் பல பெண்களுக்கு இந்தக் கலையை சொல்லிக் கொடுத்தும் வருகிறார் ஆர்த்தி ராவத்.
‘‘நான் டில்லியில் வசிக்கிறேன். என்னோட சின்ன வயசுல நான் பேப்பர்ல நிறைய பொருட்களை செய் வேன். எல்லோரும் முதல்ல பேப்பர்ல கப்பல் செஞ்சு தான் பழகுவாங்க. அதே மாதிரிதான் நானும் காகிதத்தில் கப்பல் செய்யத் தொடங்கி அதனைத் தொடர்ந்து பல பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். சின்ன வயசுல எனக்கு அதுதான் பொழுதுபோக்கா இருந்தது. காலப் போக்கில் இதை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பி.காம் படிச்சி முடிச்சிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.
கொஞ்சக் காலம் போனதும் எனக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை செய்ய பிடிக்கல. என்னோட கணினி முன்னாடி உட்கார்ந்துட்டு நம்மோட பெயர் சொல்ற மாதிரி ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதோட விளைவு நான் வேலையை விட்டுட்டு யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினேன். இந்த மாதிரியான மனநிலை எப்படி வந்துச்சின்னு எனக்கு இன்னமும் தெரியல. ஆனாலும் ஒரு வித நம்பிக்கையில போட்டித் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினேன்.
திருமணத்திற்குப் பிறகும் படிச்சிட்டுதான் இருந் தேன். போட்டி தேர்வில் இறுதி வரை போய் வேலை கிடைக்கவில்லை. தளராமல் நான் படிச்சிட்டு இருந் தாலும் எனக்கான செலவுகளை பார்த்துக் கொள்வதற் காக வாவது, ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது கரோனா பாதிப்பால், எங்கேயும் போக முடியல. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்துலதான் நான் பொழுதுபோக்கிற்காக பேப்பரில் பொருட்கள் செய்யத் தொடங்கினேன்’’ என்றவர் எப்படி இந்த வேலையில் சாதனை படைத்தார் என்பதை சொல்லத் தொடங்கினார்.
‘1970 மற்றும் 1980களில் அய்ரோப்பாவில் குயிலிங் ஆர்ட் மிகவும் பிரபலமாக இருந்தது. இடையில் படிப் படியாக செல்வாக்கு குறைந்து தற்போது மீண்டும் இந்த கலை மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்தபடியே இந்த குயிலிங் ஆர்ட்களை செய்கின்றனர். நானும் படிக்கும் போது சமூக வலைத்தளங்களில் இந்த குயிலிங் ஆர்ட்டை பார்த்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டு செய்து பார்த்தேன். நான் செய்தவற்றையெல்லாம் என்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். பலர் என்னுடைய வேலைகளை பாராட்டினர். அதில் சிலர் நான் செய்த குயிலிங் ஆர்ட்களை வாங்கவும் தொடங்கினர். எனக்கு ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதோடு நிறைய ஆர்டர்களும் வந்தது.
அதனாலேயே முழு நேர வேலையாக இந்த தொழிலை செய்யத் தொடங்கினேன். பிறந்தநாள் விழாக்களுக்காக ஒருவருக்கு கொடுக்கும் வாழ்த்து அட்டையில் இருந்து, சுவரில் மாட்டப்படும் பெரிய படங்கள் வரை நான் செய்து வருகிறேன். நான் செய்த பொருட்களை பார்த்தவர்கள் என்னை ‘பேப்பர் கேர்ள்’ என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர். நான் பொருட்கள் செய்ததோடு மட்டுமில்லாமல் இதை பல பெண்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சிகளும் அளிக்கிறேன்.
பெண்கள் இந்த மாதிரி கலைப்படைப்பு சம்பந்த மான வேலைகளை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு என தனிப்பட்ட வருமானத்திற்கு வழிவகுக்கும்’’ என்கிறார் ஆர்த்தி ராவத்.