மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை மறைந்தாரே! தமிழர் தலைவர் கி. வீரமணி இரங்கல் அறிக்கை

viduthalai
2 Min Read

மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினரும், மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவருமான
டத்தோ ச.த.அண்ணாமலை (வயது 78) அவர்கள் 20.01.2025 அன்று மாலை மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து பெரும் துயருற்றோம். பினாங்கு மாநிலத்தில் புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில் காலமானார் எனும் செய்தியையும் கிடைக்கப் பெற்றோம்.

மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினரான டத்தோ ச.த.அண்ணாமலை அவர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பின்னர் தேசிய தலைவர் ஆனவர். கடந்த சில மாதங்களாக மருத்துவச் சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வந்த நிலையில் அவரது மறைவு எங்களுக்கும், மலேசிய திராவிடர் கழகத் தோழர்களுக்கும் பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நேரங்களிலும், கோலாலம்பூருக்கு வந்து சந்தித்த வேளையிலும் அவரது உடல் நலத்தினைப் பற்றிக் கேட்டறிந்து தக்க மருத்துவ சிகிச்சை எடுத்திட வேண்டினோம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொலைப்பேசி வாயிலாகப் பேசிய பொழுது உடல்நலம் தேறி வருவதாக கூறியது கேட்டு ஆறுதல் பெற்றோம். உடல்நலம் குன்றிய நேரத்திலும், மலேசிய திராவிடர் கழகத்தின் வருங்காலச் செயல்பாடுகள் குறித்து எம்மோடு

அக்கறையுடன் அவர் உரையாடியதை எப்படி நாம் மறந்திட முடியும்?

மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவர்கள் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி, மானமிகு ரெ.சு.முத்தையா, மானமிகு பி.எஸ்.மணியம் மற்றும் மானமிகு எப்.காந்தராஜ் ஆகிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்; மலேசிய திராவிடர் கழகத்தின் வளர்ச்சியில் மானமிகு ச.த.அண்ணாமலை அவர்களது பொறுப்பான பங்களிப்பும், அவர் ஆற்றிய பணிகளும் அனைத்துத் தோழர்களும் அறிந்தவையே!

தோழர் ச.த.அண்ணாமலை அவர்களின் தொண்டறத்தினைப் பாராட்டி, பினாங்கு மாநில ஆளுநர் ‘டத்தோ’ என்னும் மலேசிய நாட்டு உயரிய தேசிய விருதை அளித்தார். மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ‘டத்தோ’ விருதைப் பெற்ற முதல் தலைவர் ச.த.அண்ணாமலை என்பது அவரது தொண்டறத்திற்குக் கிடைத்த மரியாதையாகும்.

டத்தோ அண்ணாமலை கட்டிக் காத்த மலேசிய திராவிடர் கழகத்தினை, ஒற்றுமையுடன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய கடமையாகும். அதுவே அவருக்கு செலுத்திடும் உகந்த மரியாதையும் ஆகும்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்விணையரை இழந்த நிலையில் உள்ள டத்தின் கோ.ஆங்காயி அம்மையார் அவர்களுக்கும், அவரது மகன் அ. குணசேகர் அவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், கழகத் தலைவரை இழந்து உள்ள கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த ச.த.அண்ணாமலை அவர்களுக்கு வீரவணக்கம்! அவர் ஆற்றி வந்த பணிகள் தொடரட்டும்! மலேசிய திராவிடர் கழகம் கட்டுப்பாடு காத்துக் கடமை ஆற்றிட விழைகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
 திராவிடர் கழகம்

21.1.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *