சென்னை, ஜன. 21- ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (20.1.2025) வெளியிட்ட அறிக்கை: அரசின் சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையிலிருந்து அரசின் சேவைகள் மக்களிடத்துக்கு கொண்டு சேர்க்கும் தொலை நோக்கு திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023ஆம் ஆண்டு டிச.18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படை பொதுசேவைகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற 30 நாள்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இச்சாதனை படைத்துள்ளது. திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு, மக்களின் அரசு, அவற்றையும் தாண்டி மக்களிடம் இறங்கி வந்து சேவையாற்றும் மாண்புடைய அரசு என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலில் தொடங்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மிகச்சிறந்த சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
புதிய முறை விடைத்தாள்
சென்னை,ஜன.21- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் என உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கான ஓஎம்ஆர் தாளில் சில புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வாணையம் ஓஎம்ஆர் விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in – “OMR Answer Sheet Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் (ballpoint pen) நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1இல் பகுதி-1ன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2இல் பகுதி- 1இன் கீழ்
மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த குரூப் 4 தேர்வு முதல் ஓஎம்ஆர் தாளில் இன்வேலிட் மதிப்பெண் முறையை டிஎன்பிஎஸ்சி அறிமுகம் செய்தது. இந்த முறைப்படி ஓ.எம்.ஆர் தாளில் A, B, C, D மற்றும் E என 5 கட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். கொள்குறி வகை (Objective Type) படி, வினாத்தாளில் 1 கேள்விக்கு 4 ஆப்ஷன்கள் இருக்கும், அதற்கு A, B, C, D என்பதில் சரியான விடை ஓ.எம்.ஆர் தாளில் நிரப்பப்பட வேண்டும். ஒருவேளை அந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், E என்ற வட்டத்தை நிரப்ப வேண்டும். அந்த கேள்விக்கான பதில் இன்வேலிட் என எடுத்துகொள்ளப்படும்.
இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இந்த புதிய ஓஎம்ஆர் தாள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் மாதிரி தாளை பார்த்து அறிந்துகொண்டு தேர்விற்கு தங்களை தயார்படுத்தி கொள்ளலாம்.
2025ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் 10.10.2024 அன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, இந்தாண்டு குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4 உட்பட மொத்தம் 7 போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும்போது, அதற்கான காலிப்பணியிடங்கள் விவரங்கள் தெரிவிக்கப்படும்.