பசுமூத்திரத்தில் மாம்பழச்சுவை, அன்னாசி சுவை கொண்ட கவுகா கோலா (பசுமூத்திரக் குளிர்பானம்) வியாபாரம் கும்பமேளாவில் ஜோராக நடக்கிறது.
இதுவரை பசுமாட்டு மூத்திரத்தை விற் பனைக்கு வைக்கவோ அதனை மனிதர்கள் வாங்கிப் பருகவோ உணவு பாதுகாப்பு ஆணையம் எந்த ஒரு சான்றிதழும் தரவில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசின் உணவுப் பொருள் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவும், கால்நடை ஆய்வகப் பிரிவுகளும் பசு மூத்திரத்தை தூய்மைப்படுத்துவதற்காக வேண்டுமானால் பயன்படுத்தலாம், அதுவும் அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டது என்று தங்களது தரப்பு மழுப்பலான விளக்கத்தைக் கொடுத்து ஒதுங்கி விட்டன.
ஆங்கில மருத்துவத்துறை குறைந்த பட்சம் பசுமூத்திரத்தை உள்ளுக்குள் உட் கொண்டால் எந்த அளவு பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாளிதழ்களில் விளம் பரமாகவே கொடுக்க வேண்டும்.
ஆனால், அனைத்துத் துறைகளும் மவுனமாக இருக்க, பசுமுத்திரம் பல்வேறு வடிவங்களில் மக்களின் நம்பிக்கையை வைத்து விற்பனைக்கு வந்துவிட்டது. மாம்பழம், அன்னாசிப்பழம், இதர பழங்களின் சுவைகலந்த பசுமூத்திரக் குளிர்பானம்
கும்பமேளாவில் அமோகமாக விற்பனை ஆகிறதாம்!
மதுராவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த கவு கா கோலா (பசு மூத்திரக் குளிர் பானம்) பாட்டிலில் தமிழிலும் பெயர் அச்சிடப் பட்டுள்ளது.
இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது! இதைக் கலப்படக் குற்றத்தின் பேரில் தண்டிக்க வேண்டாமா?
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்யென்று அய்ந்து பொருள்களையும் ஒரு கலக்குக் கலக்கி திதியின்போதும், புதுமனைப் புகு விழாவின் போதும் (கிரகப் பிரவேஷம்) பஞ்சகவ்யம் என்று சொல்லி, பார்ப்பனப் புரோகிதர்கள் குடிக்க வைப்பதுண்டு. எந்தப் பார்ப்பானும் குடிக்க மாட்டான். பரிதாபத்துக்குரிய நமது பார்ப்பனரல்லாத மக்கள்தான் கண்களை மூடிக் ெகாண்டு, புரோகிதப் பார்ப்பானுக்கு அதற்காகத் தட்சணையும் கொடுத்து பக்திப் பரவசமாகி, கடகட எனக் குடிப்பதுண்டு.
அதுபற்றி தந்தை பெரியார் பேசும்போது ‘நம் மக்களின் முட்டாள்தனத்தை அளக்கும் தர்மா மீட்டர்’’ என்று இதைக் குறிப்பிடுவார்.
எந்தப் பார்ப்பானோ, சங்கராச்சாரியாரோ இவற்றைக் குடிப்பார்களா?
காலால் மிதித்தால் சாணி – பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று நம்பும் ஏமாறும் மக்கள் உள்ளவரை இதைப் போன்ற உழைப் பில்லாத சுரண்டல் கும்பலுக்கு குஷிதானே!
மக்கள் நல அரசாங்கமாக இருந்தால் இவற்றிற்குத் தடை விதிக்க வேண்டாமா?