கோ.கருணாநிதி
தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர் களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.
சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப் படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. Fort Hare-பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக் காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத் தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடி யேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கி லேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருகப் பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின் மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவ மனைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப் பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்த வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து எண்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடி யாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் – அவர்கள் மொழிகளின் பெயரால் கருப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.
இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட் டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் தென்னாப் பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத் தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.
மண்டேலாவை விடுவிக்கக்கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டூ ழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப் புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை.