தந்தை பெரியாரின் தேவை….

2 Min Read

15.07.2023 அன்று விடுதலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள வாழ்வியல் சிந்தனைகள் படித்தேன். ”ஜாதி அழுக்கை வெளுத்து விரட்டிய ஒரு புரட்சிப் பெண் – இதோ!”

“ஊருக்கு ஒரு குடி” நூலின் ஆசிரியரான ஜுலியஸ் என்ற அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி இருந்தீர்கள். தமிழ் நாட்டில் திராவிடநெருப்பில் பல ஊர்களில் அந்த கொடுங்காரியங்கள் பொசுங்கிப் போனாலும் – இன்னும் சில ஊர்களின் நிலையை அறிந்து வேதனை யாகவுள்ளது. 

ஆனால், வட இந்தியாவின் நிலைமையோ வேறு –  2017 ஆம் ஆண்டு வாரணாசிக்கு நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், 

6 நாட்கள் அங்கு தங்கி இருந்த போது நான் பார்த்த ஒரு  மரண நிகழ்வில் இறந்தவரைக் கட்டிலில் வைத்து தூக்கிக் கொண்டு போனார்கள், எரியூட்டும் இடத்தில் சிலர் அமர்ந்திருந்தனர். உடலைக் கொண்டு வந்த அந்தக் கட்டிலை அவர்களுக்குள் ஏலம் போட்டுக் கொண்டு எடுத்தனர். அவர்களோடு வந்த சிறுவர்கள் மகிழ்ச்சியோடு கட்டிலை தூக்கிக் கொண்டு போய் அருகில் ஓடிய வாய்க்கால்  நீரால் கழுவிக் கொண்டு இருந்தனர். 

எனக்கு வியப்பாக இருந்தது – அப்போது எனது நண்பர் கூறியது – அவர்கள் இங்குள்ள சலவைத் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர். இன்றும் அவர்கள் கடைகளில் சென்று துணி வாங்கக் கூடாது. பிணங் களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகளைத்தான் அவர்கள் அணிய வேண்டும். அதே போல் பிணங் களை எடுத்துச் செல்லும் கட்டில்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றார். 

நான் வியந்து போய் மறுநாள் அவர்களின் குடி யிருப்பைச் சென்று பார்த்தேன், ஆங்காங்கே பழைய கட்டில்கள் கிடந்தன. அதை அவர்களாகவே சிறியதாக மாற்றி சமையலறையில் உட்காரப் பயன்படுத்து கின்றனர். முதியவர்கள் படுக்க சாய்வுக் கட்டிலாக, குடும்பத்தினர் இரண்டு பேர் படுக்க கொஞ்சம் பெரிய கட்டிலாக இப்படி இடுகாட்டில் இருந்து கொண்டுவரும் கட்டில்களை மாற்றியமைத்து பயன்படுத்துகின்றனர்.

செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய  குட்டிச்சுவர்களின் மேலே பழைய கட்டில்களைப் போட்டு அதன் மேல் தார்ப்பாயால் மூடி விடுகிறார்கள். அதுதான் அவர்களின் வீடு. கதவு என்ற பெயரில் சிலரது முன் பக்க வீட்டை பழைய தகரம் மறைக்கும், சிலரது வீட்டில் காய்ந்த கடுகுச்செடிகளால் செய்த தடுப்புகள் தான் கதவுகள். அவர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான உடைமைகள் அனைத்துமே இறந்த உடல்களுக்கு அணிவித்திருந்த  அல்லது போர்த்தி யிருந்த உடைகள் மற்றும் இறுதி நிகழ்வுக்குப் பயன் படுத்திய  பொருட்கள்தான்  – இன்றும் பள்ளிப்படிப்பு என்பது அவர்களுக்கு கிடையாது.  

ஆனால், ஒரு விநோதம் என்னவென்றால் அனைவரது வீடுகள் போன்ற கட்டிடங்களின்மீதும் காவிக்கொடிகளை பழைய மூங்கில் கம்பில் கட்டி பறக்கவிட்டுள்ளனர். 

அவர்களில் சிலர்  மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்றால் திரும்ப ஊருக்கு வருவதே கிடையாது. செருப்புப் போட்டாலோ அல்லது  மேல் சட்டை போட் டாலோ உயர் ஜாதியினர் கட்டி வைத்து அடிக்கும் ஊரில் மும்பையிலிருந்து பேண்ட் – சட்டை போட்டு வந்தால் சும்மா விடுவார்களா என்ன? வடக்கிற்கு அவசியம் தேவை பெரியார்.

– பாணன், மும்பை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *