திருச்சியில் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் நடைபெற்ற 13ஆவது இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய மாநாடானது வெற்றி மாநாடாக, மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது…
மாநாடுதான் முடிந்திருக்கிறதே தவிர அதன் அதிர்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் மாநாடு பற்றிய பதிவுகள் இன்னும் தொடர்கின்றன…
இது மகிழ்வையும், புத்துணர்வையும், உத்வேகத் தையும் தருவதாய் உணர்கிறேன்…
மாநாடு அறிவிப்பு வந்த நாள் முதல் உடல் நிலையை பொருட்படுத்தாமல் சுறு சுறுப்பாய் மாநிலம் முழுவதும் சுழன்றதோடு…
மாநாட்டில் புன்முறுவலோடு அனைத்தையும் கவனித்து வழிநடத்திய மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன்,
மாநாட்டுப் பணிகளையும், மேடை நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டு, வருகை தந்த தோழர்களோடும் அவ்வப்போது உரையாடியதோடு, உணவு, தேநீர் நேரங்களில் வளாகம் முழுவதும் சென்று சாப்பிட்டீங்களா?, டீ குடிச்சீங்களா? ஏதேனும் தேவையி ருக்கிறதா? என தன் கால்வலி மறந்து சுழன்ற மாநிலப் பொதுச் செயலாளர் வி. மோகன்,
ஒரு மாநாடு சிறப்பாக நடைபெற தோழர்கள் வருகை எவ்வளவு முக்கியமோ, அதனைப் போலவே நிதி ஆதாரமும் மிக முக்கியம். அது குறித்த சந் தேகங்களுக்கு அவ்வப்போது உதவிய பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன்,
ஆசிரியர் அணியினரை திரட்டும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை நடத்தியதோடு மாநாட்டுப் பணிகளையும் திறம்பட செய்து, நிகழ்வு சிறப்புற வேண்டும் என்ற சிரத்தையோடு வலம் வந்த பொதுச் செயலாளர்
வா. தமிழ்பிரபாகரன்,
பதிவு உட்பட தங்கும் அறைகளை ஒதுக்கும் பணிகளை கவனித்து அவ்வப்போது தொடர்பில் வந்து சந்தேகங்களை தீர்த்ததோடுமட்டுமல்லாமல், முதல் நாள் இரவு சுமார் 10.45 / 11.00 மணியளவில் அழைப்பில் வந்து தங்கும் வசதி எப்படி? மாற்று ஏற்பாடுகள் தேவையா? என அக்கறையோடு அழைத்துப் பேசி கவனித்துக் கொண்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்,
*இயக்கு சக்திகளாக மட்டுமல்லாமல், இயங்கும் சக்திகளாக”* செயல்பட்ட மாநிலப் பொறுப்பாளர்களின் அயராத கடினமான உழைப்பை பாடமாக ஏற்கிறேன்…
அமர்வுகளில் ஆங்கிலம் அதிகம் என்றாலும் ஆர்வமாய் அமர்ந்திருந்து கவனித்து, உற்சாகம் குறையாமல் வேண்டிய இடங்களில் கைதட்டி மகிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கைதட்டலும்,
பொதுக்கூட்டத்தின் இடையே அவசரத் தேவைக் காக சிறிதுநேரம் வெளியேறிய போது பொதுக்கூட்ட உரைகளை தானாகவே நேரலையில் கவனமாய் கேட்ட கல்லூரி மாணவரின் செய்கையும்,
எம் பெரியார் பிஞ்சுகளின் சோர்வில்லா அவ்வப் போதைய கேள்விகளும் மாநாட்டின் மகிமை பேசும்…
92 வயதில், சிறிதும் சோர்வின்றி, வாக்கத்தானில் ஆசிரியரின் வீரநடையை பின்தொடர முடியாமல் பின்தங்கிய பின்சென்ற தோழர்களின் வியப்போ வியப்பு…
எவ்விடத்தில் பேசினாலும் அவ்விடத்தில் இருப்பதை உதாரணம் காட்டி யாவருக்கும் எளிதில் அதே நேரம் ஆதாரங்களோடும், நகைச்சுவையோடும் பேசி, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து கருத்தை கடத்துவதோடு, அனைவருக்கும் முன்னுதாரணமாக முன்நிற்கும் ஆசிரியரின் பாணி சிறப்போ சிறப்பு…
இரண்டு நாள்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஏற்பாடுகள் அனைத்தும் அருமை…
எவ்வித சலனமோ, சங்கடமோ இன்றி, கலந்து கொண்ட தோழர்கள் இளையோர் முதல் பெரியோர் வரை மாநாட்டில் ஒன்றிப் பயணித்ததே மாநாட்டின் வெற்றி…
அருமையான வாய்ப்பை அமைத்துக் கொடுத்த ஆசிரியருக்கும், அவ்வாய்ப்பை நல்வாய்ப்பாய் ஏற்று, செம்மையாய் செய்திட அதற்காக மெனக்கெட்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நன்றியோடு உரித்தாக்குகிறேன்…
– ஒ. முத்துக்குமார்
மாநில அமைப்பாளர்
பகுத்தறிவாளர் கழகம்