மத்தியப் பிரதேசம் சாகர் நகர் பகுதியில் உள்ளது சர்பவேஸ்வர் ஜெயின் கோயில். பழைமை வாய்ந்த இந்தக் கோயில் ஜெயின் சமூகத்தினரால் பெரிதும் ‘புனிதமாக’ மதிக்கப்படும் மகாவீரர் வந்து சென்றதன் நினைவாக கட்டப்பட்டது என்று ஜெயின் சமூகத்தினர் நம்புகின்றனர்.
வரலாற்றில் அனைத்து மத மன்னர்கள் ஆண்ட போதும் இக்கோயிலுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
இக்கோவிலின் பின்புற சுவரில் திடீரென அனுமார் சிலை ஒன்றை வைத்து அதை அப் பகுதி ஹிந்து அமைப்பினர் கோயிலாக மாற்ற முயற்சித்தனர்.
இதற்கு ஜெயின் சமூக அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தங்கள் கோவில் சுவரில் இருந்த அனுமார் கோயிலை காவல்துறை அனுமதியோடு அகற்றினர்.
இதனை அடுத்து ஹிந்துத்துவ அமைப்பினர் ஜெயின் கோயிலுக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்ற கூச்சலுடன் நுழைந்தனர்.
கையில் இருந்த ஸ்பிரே பெயிண்டின் மூலம் ஜெயின் கோயிலின் சுவரில் ஜெய் சிறீராம் என்று எழுதினர். மேலும் கோயிலில் இருந்த மிகவும் பழைமையான ஈரானிய மன்னரால் வழங்கப்பட்ட அலங்கார விளக்கை உடைத்து வீசினர். மேலும் கோயிலின் மின் விளக்கு மற்றும் ஒலிவாங்கி போன்றவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனால் கோயி லின் கதவுகள் சேத மடைந்தன. இது தொடர் பான காணொலி சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.
ஹிந்துத்துவ அமைப்பினர் முதலில் பவுத்தர் களையும், பவுத்த ஸ்தூபங்களை யும் சிதைத்தனர். பின்னர் இஸ்லாமிய வழிப்பாட்டிடங்களை உடைத்தனர். கிறிஸ்தவர்களைத் தாக்கியவர்கள் தற்போது ஜெயின் மதத்தவரையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த ஆண்டு மகிசாசுரன் மற்றும் வனதேவதைகளை வழிபட்ட பழங்குடியின மக்களை ‘ராமனைக் கும்பிடாமல் ஏன் இவர்களைக் கும்பிடுகிறீர்கள்?’ என்று இதே மத்தியப் பிரதேசத்தின் விதிசா பகுதியில் மிரட்டல் விடுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடவுள்மீது நம்பிக்கை உண்டு; அதே நேரத்தில் இன்னொரு மதத்தின் கடவுள்மீது நம்பிக்கை கிடையாது; மத நம்பிக்கை உண்டு, அதே நேரத்தில் மற்ற மதத்தின்மீது நம்பிக்கை கிடையாது என்றால், எது கடவுள், எது மதம் என்று கேள்வி எழாதா?
அப்படியானால் ஆன்மிகம் பக்தி என்பதன் யோக்கியதை என்ன? ஒரு மதக்காரன் இன்னொரு மதக்காரனுக்கு நாத்திகன் ஆக மாட்டானா?
இந்த நிலையில் எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; எந்தக் கடவுளின்மீதும் நம்பிக்கை இல்லை என்று பகுத்தறிவின் அடிப்படையில் சொல்ல ஒரு மனிதனுக்கு உரிமை உண்டு என்று ஆகிடவில்லையா?
‘வைத்தியரே, வைத்தியரே, முதலில் உன் நோயை போக்கிக் கொள்!’ என்று சொல்வதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பவுத்த கோயில்களும், சமணப் பள்ளிகளும் இந்து மதவாதி களால் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு ஏராளமான தரவுகள் கிடைக்கின்றன.
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘‘பவுத்தமும், தமிழும்’’, ‘‘சமணமும் தமிழும்’’ ஆகிய நூல்களைப் படியுங்கள், விலா வாரியாக ஹிந்துத்துவ வாதிகளின் வன்முறையின் வண்டவாளம் புரியும்.