செய்திச் சுருக்கம்

viduthalai
3 Min Read

மெட்ரோ ஒத்துழைப்பால்
13 நிமிடத்தில் சென்றடைந்த இதயம்

சமீப காலமாக உடல் உறுப்புக் கொடை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். உடல் உறுப்புக் கொடை செய்தாலும் அதனை சரியான நேரத்தில் கொண்டு சென்று பொருத்துவதில் மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அதுபோன்று ஒரு நிகழ்வுதான் அய்தராபாத்தில் நடைபெற்றது.

13 கி.மீ. தொலைவை 13 நிமிடங்களில் கொண்டு சென்று இதயத்தை உரிய நேரத்தில் பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர் மருத்துவப் பணியாளர்கள். அவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.

அய்தராபாத் எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் உள்ள கினவுனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சென்று இதய நோயாளிக்கு பொருத்தி வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அய்தராபாத் மெட்ரோ நிர்வாகம் சரியான நேரத்தில் உதவி உள்ளது.

பாகிஸ்தான் செயற்கைக் கோளை
விண்ணில் செலுத்திய சீனா

பாகிஸ்தான் நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்குச் சொந்தமான எலக்ட்ரோ ஆப்டிகல் (EO1) என்ற செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக் கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில்
தொழிற்சாலை அமைக்க அனுமதி

திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை டாபர் நிறுவனம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,36,585 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் தேன், ஓடோடெல், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட்ட பொருள்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலை மூலம் 250 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த ஆலையை நிறுவுவதற்கு கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் நாய்க்கடியால் 2024ஆம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சேலத்தில் 37,011 பேரும், தஞ்சாவூரில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும், புதுக்கோட்டையில் 21,490 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னையில் 11,704 பேரும், கோவையில் 14,453 பேரும், மதுரையில் 12,024 பேரும், செங்கல்பட்டில் 17,076 பேரும், திருவள்ளூரில் 15,191 பேரும், காஞ்சிபுரத்தில் 4,612 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். “நாய்க்கடிகள் அதிகரித்து வந்தாலும், அதற்கான தடுப்பூசிகள் ஆரம்ப சகாதார நிலையங்களில் தயார் நிலையில் உள்ளன என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில்
சிறார் திரைப்படம் ஒளிபரப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த மாதம் ‘மரங்களின் கனவு’ எனும் தமிழ் மொழிபெயர்பு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான ‘லிங்க்’, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

டிஜிட்டல் கையொப்பம்: கல்வித் துறை முடிவு

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதிய பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளி நிர்வாகிகளின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *