கி.வீரமணி
நேற்றைய (18.1.2025) தொடர்ச்சி…
சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியது.
திருச்சி கருணாநிதி பார்க் என்ற பூங்காவில் 1934ல்தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று நடத்திய சுயமரியாதைத் திருமணம்தான் செல்லாது என்று அத்தீர்ப்பின் மூல
ம் – திருமணமாகி அவர்களுக்கு 2 ஆண்கள், 2 பெண்கள் – பிறந்த பிறகு 20 ஆண்டுகள் கழித்து இத்தீர்ப்பு வெளி வந்தது!
செட்டி நாடு கோட்டையூரைச் சேர்ந்த திரு. ராம. அழ. சிதம்பரம் (இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஜாதி) திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தினைச் சேர்ந்த ரங்கம்மாள் என்ற (ரெட்டியார் ஜாதி) இளம் விதவையை – (ஏற்கனவே ‘விதவன்’ ஆனவர் மணமகன்) வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இது தந்தை பெரியாரால் நடத்தி வைக்கப்பட்ட – ஏற்பாடு செய்யப்பட்ட (Arranged Marriage) ஜாதி மறுப்பு, விதவை மறுமண, சுயமரியாதைத் திருமணம் ஆகும்! (15-4-1934)
சிதம்பரம் அவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் மனைவி காலமாகி விட்டார்; அவருக்கு ஒரு மகன் உண்டு. அவருக்குத் திருமணம் (செட்டியார் வகுப்பு) செய்து வைக்கப்பட்டவர் மருமகள் தெய்வானை ஆச்சி என்பவர். இவர்தான் வழக்குத் தொடுத்தவர்.
பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பு
இவர்களுக்கு மலேயாவிலும் கோட்டையூரிலும் சொத்து உண்டு. அதன் பாகப் பிரிவினை சம்பந்தமாக பிரிவினை (Partition Suit) தேவக்கோட்டை சப்-கோர்ட்டில் போட்டு வந்த வழக்கில் பிறகு அய்க்கோட்டு அப்பீலில் தான் ‘சுயமரியாதைத் திருமணமே செல்லாது’ என்று தீர்ப்பு ஜஸ்டிஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயணராவ் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்பட்டது. (05.05.1915 & 1947)
சிதம்பரத்தின் மருமகள் தெய்வானை ஆச்சி மாமன் அழ.சிதம்பரம் ஆகிய இருவரும்தான் எள இவ்வழக்காடிகள்! (இவ்வழக்கு 1955 (1) M.L.J. 128 – தெய்வானை ஆச்சி, சிதம்பரம் செட்டியார் என்ற பெயரில் பதிவான பிரபல வழக்கு ஆகும்.
இத்தீர்ப்பு 26.8.1953 அன்று வழங்கப்பட்டதாகும்.
“குறிப்பிட்ட இத்திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங்கள்படி நடைபெறவில்லை. ‘சப்தபதி” என்ற ஏழு அடி எடுத்து வைத்தல், ஓமம் வளர்த்தல் போன்ற எந்த சடங்கும் நடத்தப் பெறாமல் நடைபெற்றுள்ளது. இப்படி நடப்பது (Customary Marriage) வழமையான வகை திருமணமா என்றால் அதுவும் இல்லை! எனவே இது இந்து சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல.
“யாரோ சிலர் கூடி, தங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் இத்திருமணம் நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை!
இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும் அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும், அப்பிள்ளைகளுக்கு தகப்பன் சொத்தில் பங்கும் பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு உண்டு; ஆனால், இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டியாள் பிள்ளைகளாகவே கருதப் படுவார்கள்!” என்று தீர்ப்புக் கூறினார்கள்.!
இதைக் கண்டு இயக்கத்தினர் கொதித்தனர் என்றாலும் சுய மரியாதைத் திருமணங்கள் பெருகினவே தவிர, குறையவே இல்லை!
சிதம்பரம் – (ரங்கம்மாள்) சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரபல பார்ப்பனர் ‘திருப்புகழ்மணி’ டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர் என்ற ஓய்வு பெற்ற திருவிதாங்கூர் இராஜ்ய முன்னாள் தலைமை நீதிபதி என்றாலும் இத்தகைய தீர்ப்பு தான் !
சாஸ்திரங்களில் இருந்து…
இத்தீர்ப்புக்கு அடிப்படையாக – ஆதார சுருதிகளாக, நாரதர், யக்ஞவல்கியர், பராசர் ஸ்மிருதிகள் – இந்து சாஸ்திரங்களை எல்லாம் ஏராளமாக அந்த பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்!
அந்த 4 பிள்ளைகளில் (இரு ஆண்கள் இரு பெண்கள்) ஒருவர் தான் திருமதி மோகனா வீரமணி ஆவார்!
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்பதால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைக் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று என்றாலும், அதற்கு பரிகாரம் எமது காலத்தில் – கண்ணெதிரில் தேடப்பட்டு – அவமானம் – “வைப்பாட்டி மக்கள்” என்ற அவமானம் துடைத் தெறியப்பட்டது.
1954-இல் தனி திருமணச் சட்டத்தினை (இதுபோன்ற சடங்கு சம்பிரதாயம் ஒழிந்த முறை விரும்புவோருக்கு வாய்ப்பாக) Special Marriage Act 1954-இல் மத்திய அரசாங்கம் (ஊநவேசயட ஹஉவ) ஆகக் கொண்டு வரப்பட்டது.
திரு. ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் (அப்போது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறவில்லை) முதலமைச்சராக ஆண்டபோதுதான் சீர்திருத்தத் திருமணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா ஒன்று 1953-இல் அரசு தரப்பில் முன்மொழியப்பட்டது.
‘The Hindu Non-Confirming Marriage Registration Bill 1953’ என்ற அந்த சட்ட வரைவில் இயற்கையான தமது சூழ்ச்சியை நுழைத்தார் ஆச்சாரியார். அதாவது இதுகாறும் நடந்த சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாக மாட்டா என்றும் இனி நடக்கும் திருமணங்கள் சட்டப்படி செல்லுமென்றும் மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இதைத் தந்தை பெரியார் கண்டித்து எழுதினார்.
சென்னை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியிலிருந்த தஞ்சை வழக்கறிஞர் சுயம்பிரகாசம் எம்.எல்ஏ தலைமையில் இயங்கிய ‘திராவிடப் பார்லிமெண்டரி கட்சியினர்’ இத்திருமணம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டுமென்று வாதாடினர். அக்கட்சியைச் சேர்ந்த துறையூர் பி. ரெங்கசாமி (ரெட்டியார்) எம்.எல்.ஏ., அவர்கள் இதற்காக மிகவும் முயற்சி எடுத்து, ஒரு மசோதாவையே தயாரித்தார். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியாக்க வேண்டியது அவசியம்தான் என்று முதலமைச்சர் ஆச்சாரியார் ஒப்புக்கொண்டார். அதற்கான முயற்சி எடுக்கப்பட்ட நேரத்தில் அவரது அமைச்சரவை பதவி விலக நேரிட்டது. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து பிடிவாதம் காட்டியதன் காரணமாக ஆச்சாரியாரின் ஆட்சியை தந்தை பெரியார் அவர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். அவரது கட்சிக்குள் மிகவும் கடுமையான எதிர்ப்புத் தோன்றியது. அதன் காரணமாக அவர் பதவி விலகினார்.
தடை ஏற்பட்டது
சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவமாக்கப்படும் முயற்சி இதன் காரணமாகத் தடைப்பட்டது.
திரு. காமராசர் அவர்கள் ஆச்சாரியாருக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடைய ஆட்சிக் காலத்தில் 1957-இல்தான் முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிட முடிவெடித்து, போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சி அணியில் அமர்ந்தது.
அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் அதன் கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அக்கட்சி சட்ட மன்ற உறுப்பினராகிய திரு. களம்பூர் அண்ணாமலை அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட வடிவமாக்கவேண்டுமென்று தீவிரமாகப் பேசினார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கையிலும் வற்புறுத்தியது.
ஆனால், அன்று ஆளுங்கட்சியின் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு இணங்கவே இல்லை.
தந்தை பெரியார் அவர்களது ஆதரவினையும், திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பையும் பெற்ற நிலையில் அவருக்கு உகந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட பூர்வமாக்கச் செய்ய ஏன் காமராசர் அரசு தயங்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் குத்திக் காட்டியும் பேசினார்கள் என்ற போதிலும், காமராசர் ஆட்சி இதற்குச் சட்ட வடிவம் கொடுத்திட முன் வரவில்லை. ஏதேதோ சாக்குப் போக்குகள் கூறி இதனைத் தவிர்த்திடவே அவர்கள் முயற்சிகள் செய்தனர்.
அதன் பிறகு வழக்குரைஞர் திரு. எஸ்.மாதவன் (பத்து ஆண்டுக்குப்பின் தி.மு.க. ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆனவர்) ஒரு தனியார் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றும்படி வற்புறுத்தினார். அதனை எதிர்த்த அப்போதைய காங்கிரஸ் சட்ட அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் (பின்னால் இவர் குடியரசு தலைவராக ஆனவர்) மிகவும் ஆணவமாக பதில் கூறி, இதனைத் தோற்கடிப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார். பெரும்பான்மை இருந்த காரணத்தால் அத்தீர்மானம் அன்றைய ஆளுங்கட்சியினராகிய காங்கிரஸ் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டது!
சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டம் தொடர்பாக எழுப்பிய வினாவுக்கு விடையளித்த அமைச்சர் பக்தவத்சலம், “சம்பிரதாயமான சடங்குகள் இல்லாத முறையில் நடத்தப்படுகின்ற சுயமரியாதைத் திருமணங்களை சட்ட பூர்வமாக்கும் வகையில் மசோதா கொண்டு வரும் எண்ணம் சர்க்காருக்கு இல்லை” என்று கூறினார்.
“ஏன் இல்லை, என்பதே நம் கேள்வி” என்று தந்தை பெரியார் ‘விடுதலை’ தலையங்கத்தில் ஆத்திரம் பொங்க வினா எழுப்பி சுயமரியாதைத் திருமணத்தின் தன்மையினை விளக்குகிறார்.- ‘விடுதலை’, 02.09.1959
வாழ்க்கை ஒப்பந்தங்களைக் கணக்குப்பிள்ளை மணியக்காரரிடம் பதிவு செய்து கொண்டால் அதுவே போதும் என்ற நிலை வர வேண்டும். என்று 02.09.1964 அன்று திருச்சி தங்கவேலு – பாக்கியம் திருமணத்தில் உரையாற்றினர் (‘விடுதலை’ 07.10.1964)
நாடு தழுவிய மணம் என்றாலும், நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் ஏராளம் வழக்கம்போல் நடைபெற்ற வண்ணம் இருந்தன. புரோகித, வைதிக முறைத் திருமணங்கள் வெகுவாகக் குறைந்து வரவே செய்தன.
தந்தை பெரியார் அவர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி தமது சுயமரியாதைச் சூறாவளிப் பிரச்சாரத்தை நாட்டின் மூலை முடுக்கெங்கும் செய்துகொண்டு வந்த காரணத்தால், தன்மான உணர்வு பெருகிய நிலையில், தமிழரின் சுயமரியாதைத் திருமண முறையையே பெரிதும் விரும்பினர். அரசியலில் மாற்றுக் கருத்துள்ள தமிழர்கள்கூட, இம்முறையைப் பெரிதும் பாராட்டி வரவேற்றனர். எனவே, இது நாடு தழுவிய, சமுதாயம் பெரிதும் ஏற்ற ஒரு திருமண முறையாகவே ஆகிவிட்டது.
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற சட்டத் தீர்ப்பே, ஒரு தலைமுறைக்குப் பின்னர்தான் வந்தது. ஒரு தம்பதியர்க்கு மண முடித்து, அவர்களது பிள்ளைகளுக்கும் சுயமரியாதைத் திருமணம் முடிந்து, அந்த தம்பதியர்க்கு குழந்தைகள் பிறந்த நிலையில்தான் (சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று) தீர்ப்பு வெளிவந்தது!
லட்சியம் செய்யவில்லை
ஆனால், அத்தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள, சட்ட விளைவுகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் – லட்சியம் செய்யாமல் – நாட்டில் பல்லாயிரக்கணக்கில் நடைபெற்ற இத்திருமண முறையின் மூலம் பெருகிய குடும்பங்களும் பல்லாயிரக் கணக்கில் இருந்தன. பெரியார் சட்டமே அவர்களுக்கு முக்கியம்.
1964-ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு சட்டக் கருத்தரங்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எம்.ஆனந்த நாராயணன் அய்.சி.எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. ஜஸ்டிஸ் ஆர். சதாசிவம் அவர்கள், சுயமரியாதைத் திருமணங்களை சட்ட பூர்வமாக ஆக்குவது மிகவும் அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.
சட்டப்படி, சுயமரியாதைத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளை சட்ட பூர்வமற்ற குழந்தைகள் (Illegitimate children) என்று ஆக்கிவிட்ட நிலையில், அதனை லட்சியம் செய்யாது பல்லாயிரக்கணக்கில் திருமணங்கள் நடைபெற்று, அவர்களின் வம்சாவழியினர் பெருகியுள்ள நிலையில், இது ஒரு சட்டச்சிக்கலை எதிர்காலத்தில் நிச்சயம் உண்டாக்கும்.
இவர்களது சட்ட பூர்வமான அந்தஸ்தை நிர்ணயிக்க பல சட்டக் கற்பனைகளை (Legal fiction) நாடவேண்டியிருக்கும். எனவே, இந்த விளைவுகளையெல்லாம் எண்ணி, சுயமரியாதைத் திருமணங்களை எவ்வளவு விரைவில் சட்ட பூர்வமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் இதனைச் சட்ட பூர்வமாக்க வேண்டும் என்று கருத்தரங்கில் கூறினார் அவர்!
வைதிக உணர்வும், ஆழ்ந்த மதப்பற்றும் கொண்டு, எப்போதும் பழுத்த சைவத்திருமேனியராகக் காட்சியளித்த போதிலும், சட்ட ரீதியான பிரச்சினைகளை தெளிவாகச் சிந்தித்து, தமக்குச் சரியென்று பட்ட கருத்தினை ஒளிவு மறைவின்றி எடுத்து முன் வைத்தார் ஜஸ்டிஸ் திரு. சதாசிவம் அவர்கள்!
சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட வடிவமாக்க வேண்டும் என்பது திராவிட இயக்கத்தினரின் ஏதோ ஒரு வகையான கொள்கைப் பற்றின் அடிப்படையில் எழுந்த கூச்சல் என்ற நிலையிலிருந்து நாட்டின் நீதிபதிகளும் சட்ட மேதைகளும்கூட இதனை வற்புறுத்தவே செய்கிறார்கள்; சட்ட நிபுணர்களின் கருத்துகளும் இதற்கு உடன்பாடானவைகளே என்பதை நாட்டில் தெளிவாக ஆட்சியாளருக்கும் விளக்கும் வண்ணம் ‘விடுதலை’ ஏடு தந்தை பெரியார் அவர்களது 84-ஆவது பிறந்த நாள் விழா மலர் வெளியிட்டபோது, அம்மலரில் ஜஸ்டிஸ் திரு.சதாசிவம், அன்றைய பிரபல வழக்கறிஞர்களான திரு. மோகன் குமாரமங்கலம், திரு. எஸ். மோகன் (இன்று உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று உள்ளார்) ஆகியோரது கட்டுரைகளும், சென்னை சட்டமன்றத்தில் திராவிடப் பார்லிமெண்டரி கட்சியில் பணியாற்றி சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட வடிவமாக்கிட முனைந்த துறையூர் வழக்கறிஞர் திரு.ரெங்கசாமி ரெட்டியார் அவர்களது கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. (மேலும் அவர்களின் விவரமான கருத்துகளை அறிய சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும் நூலைப் படிக்க…)
சட்ட வடிவம்
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்போம் என்பதை மீண்டும் அவர்கள் வலியுறுத்தினார்கள். 1957 முதல் 1962, 1967 ஆகிய மூன்று தேர்தல்களின்போதும் தி.மு.க. இதனை வலியுறுத்தியே வந்தது!
“சுயமரியாதைக் கொள்கை சுயமரியாதை மணமுறை பல தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அடிப்படையில் இதுவரை நடை பெற்றுள்ள திருமணங்களும் இனி நடைபெறவிருக்கும் திருமணங்களையும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் தக்க திருத்தம் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.”
– தி.மு.க. மாநில மாநாட்டில் திருச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், (27.5.1956)
அன்றைய காங்கிரஸ் கட்சியினரோ சட்ட மேதைகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்கள் வலியுறுத்தியும்கூட சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்திட முன்வராது, பழைய பிடிவாதத்தைத் தளர்த்தவே முடியாது என்று மறுத்துரைக்கவே செய்தனர்.
1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. கைப்பற்றியவுடனேயே அதன் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியின்போதே சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக்கும் முயற்சிகளை, செய்து அதனைத் தந்தை பெரியார் அவர்களது காலடியில் வைப்போம் என்று முழங்கினார்! சொன்னபடியே செய்தும் காட்டினார்!
1967-இல் அய்யாவுடன் அண்ணா (முதல் அமைச்சரான நிலையில்) குடந்தையில் நண்பர் திரு. ஏ.ஆர். இராமசாமி அவர்கள் இல்லத்து மணவிழாவில் கலந்து கொள்ள வந்தார்; அய்யாவுக்கு உடல் நலக் குறைவு – 104 டிகிரி காய்ச்சல் – எனவே மருத்துவர் கட்டளைப்படி வர இயலாத நிலை என்பதை அறிந்த அண்ணா, ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு தவறாமல் வரும் அய்யாவின் முதுமைக் காலத்தில் அவர் இப்படி திடீரென்று நோய் வாய்ப்பட்டது அறிய சங்கடப்பட்டு, நேரே திருச்சி சென்று பார்த்தார்; அய்யாவை சென்னை பொது மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறும்படியும் கேட்டுக் கொண்டார். அய்யாவும் அடுத்து வந்து சென்னை பொது மருத்துவமனையில் வந்து சேர்ந்தார்கள்.
அங்கேயும் வந்து பார்த்தார் அண்ணா. அண்ணாவுக்கு சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை அய்யா காலத்தில் நிறைவேற்றி அவரை மகிழ்விக்க வேண்டுமென்ற பெரு விருப்பம். சட்டமன்றத் தொடரில் அச்சட்டத் திருத்தம் வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அய்யாவிடம் ‘என்னை (கி.வீரமணி) சட்ட அமைச்சர் திரு. மாதவனைப் பார்க்க அனுப்புமாறு சொன்னார். அய்யாவும் அனுப்பினார். சுயமரியாதைத் திருமண மசோதாவின் வரைவு (Draft) என்னிடம் தரப்பட்டது. அய்யாவிடம் காட்டி ஒப்புதல் பெறுவதற்கு.
பொது மருத்துவமனையில் நலமாகி வரும் அய்யாவிடம் காட்டினேன். மகிழ்ந்தார். அதனை இரண்டு படிகள் எடுத்து, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றொரு சட்ட வல்லுநர் இருவரிடம் தனித்தனியே கொண்டு காட்டி இதில் ஏதாவது ‘ஓட்டை’ உண்டா? நாளை கோர்ட்டுக்கு போனால் இச்சட்டம் செல்லாது என அடிபட வாய்ப்பு உண்டா? என்று கருத்து கேட்டு வருமாறு (அய்யாவின் பிரதிநிதியாக) என்னை அனுப்பினார் – இது ரகசியத் தூது – ஆட்சியாளரும் அறியாத ஒன்று!
தந்தை பெரியாரின் திருத்தம்
அவர்களும் ஒப்புதல் முத்திரை தந்து விட்டனர். வந்த பிறகு படிக்கச் சொன்னார். வரிவரியாக நானும் படித்தேன். ‘நிறுத்துங்கள்’ என்றார். மாலை மாற்றிக் கொண்டோ, மற்றபடி உறுதி மொழி கூறிக் கொண்டோ என்றெல்லாம் போட்டு விட்டு வரைவு மசோதாவில் ‘And tying of thali’ அதோடு தாலி கட்டியும் என்ற சொற்றொடர் இருந்ததை அய்யா சுட்டிக் காட்டி ‘And’ என்று இருப்பதற்கு பதில் ‘Or’ என்று மாற்றுங்கள். ‘Or’ என்றால் அது கட்டாய அம்சமாகி விடும்; ‘Or’ என்றால் ‘தாலி கட்டலாம்; தாலி கட்டாமலும் சுயமரியாதை திருமணம் இருக்கலாம் என்று ஆகும் – இல்லையா என்றார்!
‘ஆம்’ என்று கூறி நான் திருத்தி – புதிதாக டைப் செய்து முதல்வர் அண்ணா இல்லத்தில் இரவு 12 மணி அளவில் – அப்போதுதான் எவருடைய ‘தொல்லையும்’ இல்லாமல் கோப்புகளை பார்க்கும் வழமையாகும். அங்கே என்னை அப்போதுதான் வரச் சொல்லி அனுமதிப்பார். – இப்படி பல முறை சென்றுள்ளேன்.
அவரது தனிச் செயலாளர் கே. சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., மற்றவர் மாடியிலிருந்து கீழே வந்து விடுவார். நான் அண்ணாவைப் பார்த்து இச்சட்ட மசோதா வரைவினைத் தந்தேன்.
‘அய்யா ஏதாவது திருத்தம் சொன்னாராப்பா?’ என்று ஒரு சிறு குழந்தை ஆர்வத்தோடு முந்திக் கேட்பது போல் அவசரமாக ஆர்வத்துடன் அண்ணா கேட்டார்.
நான், ‘And-அய் அகற்றி ‘Or’ போட்ட’ அய்யாவின் கருத்துப் பற்றி சொன்னபோது, அவர் வியப்புடன் “நீ எம்.ஏ., பி.எல்., நான் எம்.ஏ., அரசு, சட்ட இலாகா எல்லாம் இருந்தும்கூட அய்யாவின் பொது அறிவுக்கூர்மை எப்படிப்பட்டது பார்த்தாயா?” என்று வியந்து மகிழ்ந்து கூறி பாராட்டினார்!
மசோதாவை சட்டமன்றத்தில் முன்மொழிவதற்குமுன் தனது செயலாளர் கே.சொக்கலிங்கம் அவர்களை அழைத்து காதோடு காதாக அய்யா சொன்ன திருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டீர்களா? என்று கேட்டு விட்டுத்தான் முன் மொழிந்தார்! அன்று நான் அவையில் பத்திரிகையாளனாக ‘விடுதலை’ சார்பில் இருந்தேன். பிறகு காதோடு காதாகச் சொன்ன இதுபற்றி கே.சி. (கே.சொக்கலிங்கம்) என்னிடம் கூறினார்!
தந்தை பெரியாருக்குக் காணிக்கை
அப்போது தந்தை பெரியார் அவர்கள் சென்னை பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகையில், சென்னை சட்டமன்றத்தில் தியாகி மானியம்பற்றி ஒரு கேள்வி பதில் எழுந்த நிலையில், தாம்பரத்திலிருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான திரு. முனுஆதி எம்.எல்.ஏ., அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கும், இந்த அரசு தியாகி மானியம் அளிக்குமா என்று ஒரு துணைக் கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்ணா அவர்கள், ‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டுள்ள காணிக்கையாகும்’ என்று குறிப்பிட்டார்.
இச்செய்தியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையவர்களிடம் தெரிவித்தபோது, படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து மகிழ்ச்சியுடன், “இதனால் என் பாதி வலி குறைந்தது” என்று மனப்பூர்வ மகிழ்ச்சியையும் தெரிவித்ததன் மூலம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஒப்புதல் அளித்தார்!
இந்து திருமணச் சட்டத்தின் திருத்தமாக சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாகும் மசோதாவைச் சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தார். மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, யாரும் இதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
திரு.எச்.வி ஹண்டே சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர். இந்து மதத்தின்மீதுதான் எதற்கெடுத்தாலும் கை வைக்கிறீர்கள். ஏன் மற்ற மதத்தினரைப்பற்றி கவலைப்படவில்லை என்று தான் கேட்டாரே தவிர, அவரும்கூட சுயமரியாதைத் திருமண முறையைச் சட்ட பூர்வமாக்கும் முயற்சி கூடாது என்று வாதாடவில்லை!
1955-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய இந்து திருமணச் சட்டத்திற்கு இதை ஒரு திருத்தமாகக் கொண்டு வந்து நிறைவேற்றுவதே அம்மசோதாவாகும்!
சட்டமன்றத்தில் இம்மசோதாவைத் தாக்கல் செய்தபோது அனைத்துக் கட்சியினரும் இதனை எதிர்க்காமல் வரவேற்கவே செய்தார்கள்! அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு.பி.ஜி.கருத்திருமன் அவர்களுக்கும், முதலமைச்சர் அறிஞர் அண்ணாவிற்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் மிகவும் சுவையாக இருந்ததோடு, ஒரு கலகலப்பையும் ஏற்படுத்தியது.
சட்டமன்றத்தின் விவாதத்திற்கு பிறகு 27.11.1967 அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டமன்ற அவையிலும், பிறகு மேலவையிலும் நிறைவேறிய பிறகு 17.1.1968-இல் ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று 20.1.1968-இல் சென்னை அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டவடிவமாகியது.
முந்தைய திருமணங்களும் செல்லும்
அப்போது நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்தின்படி, இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்கள் மட்டும் செல்லுபடியாகும் என்ற நிலையில்லை. இதற்குமுன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும் என்ற நிலையில் இச்சட்டத்தின் அமல் பின்னோக்கித் தள்ளப்பட்டு, சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சட்டமற்ற மனைவி சட்டபூர்வமற்ற குழந்தைகள் (Illegitimate Children and Illegitimate Wives) என்ற அவப்பெயர் நீங்கி, அனைவருக்கும் சட்ட அந்தஸ்து இதன்மூலம் கிடைத்தது. மானவாழ்வைப் பெற்றனர் மக்கள் !
பேரறிஞர் அண்ணா அவர்கள் இதனை தமது ஓராண்டு கால ஆட்சியின் வரலாற்றில் புகழ் ஓங்கிய முப்பெரும் சாதனைகளில் ஒன்று என்று வர்ணித்தார்.
சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றிய நாளைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பி ஓய்வுடன் இருந்த பிறகு அவர் பேசிய முதல் கூட்டம் அது!
“சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டவடிவம் கொடுத்தது,
இந்தியைப் பள்ளிகளிலிருந்து நீக்கியது,
சென்னையை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றியது
ஆகிய இம்மூன்றும் தி.மு.க. ஆட்சியின் வரலாற்றைப் புகழ்வாய்ந்த ஓராண்டுகால முப்பெரும் சாதனைகள் ஆகும் என்று குறிப்பிட்டார்.
தி.மு.க. ஆட்சியில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள்; சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கினார்கள் என்றால் அதன் கருத்து தங்களுக்குக் கடவுள் மதம் சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லை என்பதேயாகும்.
5.6.1970 அன்று கொட்டாம்பட்டியில் தி.க.
பொதுக்கூட்டத்தில் உரை ‘விடுதலை’ 25.6.1970 ப.3.
காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தோழரும் சுயமரியாதை இயக்கத்தில் ஆரம்பகாலத் தோழர்களில் ஒருவருமான தோழர் ப.ஜீவானந்தத்தின் மகள் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தமது பெரியார் மாளிகையில் தாமே முன்னின்று நடத்தி வைத்தார். முதலமைச்சர் அண்ணாவும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலந்து கொண்டார்கள்.
1953இல் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த அதே சென்னை உயர்நீதிமன்றம் 60 ஆண்டுகளுக்குப்பின் கீழ்கண்ட தீர்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தள்ளுபடி
“இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர், பர்மா நாடுகளில்கூட சட்ட சம்மதம் பெற்றுவிட்டது. இந்த நிலையில், சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்குரைஞர் ஒருவர் பொது நல வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது.
சுயமரியாதைத் திருமண முறையில் சடங்குகள் கிடையாது. மோதிரத்தை மாற்றிக் கொள்கிறார்கள் – இந்து மதத்தில் இந்த முறை கிடையாது. ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின்மீது திணிப்பது விதி மீறல் ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் இதைப் புகுத்தி இந்துத் திருமண திருத்த சட்டம் என்று கூறுவது சட்ட விரோதம் என்று மனுதாரர் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் (தலைமை நீதிபதி), டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நடைபெற்றது.
சீர்திருத்த சுயமரியாதைத் திருமணம் செய்யவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதில் ஒரு நீதிபதி வடக்கே டெல்லியிலிருந்து வந்து பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகிய பார்ப்பனர் மற்றொருவர் பார்ப்பனரல்லாத ‘முன்னேறிய ஜாதி’ தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.