புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப் புள்ளான் விடுதியில் கருப்பையா பிள்ளையார் என்கிற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகைத் தீபம் முடிந்த 21 நாள்களுக்கு விரதமிருந்து விநாயகருக்குப் பிடித்ததாகக் கூறப்படும் கொழுக்கட்டை, பொங்கல், எள்ளுருண்டை, அப்பம், சுண்டல் போன்ற 21 வகையான பதார்த்தங்களை நாள்தோறும் ஒவ்வொன்றாகப் படைத்து வழிபாடு செய்வார்கள்.
பின்னர் 22 ஆம் நாள், சதய நட்சத்திரம் சஷ்டி திதி ஒன்று கூடிய நாளில், 21 நாள்கள் படைத்த பதார்த்தங்களையும் சமையல் செய்து விநாயகருக்குப் படைத்து வழிபாடு செய்வர்; அப்போது பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடல்களைப் பாடியும், விநாயகர் நோன்பு கொண்டாடப்படுவதற்கான கதைகளைக் கூறியும் வழிபாடு செய்வர். இதனைத் தொடர்ந்து மாவிளக்கில் தீயை ஏற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தீயை விழுங்கும் வழிபாடு செய்வர். இவ்வாறு தீயை விழுங்கி வழிபடுவதால், நோய் தீரும், தீய சக்திகள் தொடாது என்பதோடு, பிள்ளைப் பேறும் கிடைக்குமாம்.
‘‘பக்தி வந்தால் புத்திபோகும்’’ என்று தந்தை பெரியார் சொன்னால் ‘ரோஷம்‘ பொத்துக்கொண்டு கிளம்புகிறது.
ஆலங்குடியில் விநாயகர் வழிபாடு என்ற பெயரால் நடக்கும் இந்த விபரீதத்தை என்னவென்று சொல்லுவது!
சிறுவர், சிறுமியர்கூட தீயை விழுங்க ஆரம்பித்தால், விபரீதம் ஏற்படாதா? இதனை அனுமதிக்கலாமா?
பக்தியின் பெயரால் தலையில் தேங்காய் உடைப்பதும் எத்தகைய ஆபத்து! நரம்பியல் மருத்துவர்கள் இது ஆபத்தான செயல் என்று எச்சரித்தும், இந்த அபாயகரமான செயல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மண்டை நரம்புகள் பாதிக்கப்பட்டால், மூளையின் செயல்பாடே முற்றிலும் முடங்கிவிடாதா?
மதம், பக்தி என்றால், அரசு தலையிடக்கூடாதா?
– மயிலாடன்