மதுரை, ஜன.18 16.1.2025 அன்று மாலை
6 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடத்த அன்று காலை 10.30 மணிக்கு முடிவு எடுத்து உடனே அழைப்பு தயார் செய்து அனைத்துத் தோழர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கைபேசியிலும் நிகழ்ச்சிகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேநீர், சிற்றுண்டி, இரவு உணவு உள்பட அனைத்து ஏற்பாடு களும் உடனே நடந்தன.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு, காரம், தேநீர் வழங்கி வரவேற்று கலந்துறவாடி நலம் அறிந்தனர். பொறுப்பாளர்களும், தோழர்களும் ஒவ்வொரு குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பேசி அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.
பெரியாரின் புகழை அழிக்க பார்ப்பனர்களோடு கைகோர்த்து வலம் வருகின்றனர்
பெரியார் வீரமணி அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியது. மாணவர் கழக அமைப்பாளர் சீ.தேவராஜபாண்டியன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமையுரையில், தமிழர் திருநாளின் மகத்துவத்தையும், இன்று கருத்தைக் கருத்தால் மோத வலுவில்லாதவர்கள் பெரியாரின் புகழை அழிக்க பார்ப்ப னர்களோடு கைகோர்த்து வலம் வரு கின்றனர். இது போன்ற எத்தனையோ எதிர்ப்புகளை களமாடி சந்தித்த இயக்கம் திராவிடர் கழகம். பெரியாரை எதிர்த்த போலிகள் தோல்வி அடைவார்கள். எங்கள் தலைவர் ஆசிரியர் அவரை வழி நடத்தும் தத்துவமும் இன எதிரிகளை இருந்த இடம் தெரியாமல் போகச்செய்யும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட கழக தலைவர் ச.இராஜேந்திரனும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது எல்லையில்லா கொள்கைப் பாசம் கொண்ட அவரது துணைவியார் பானுமதியும், செல்வி விஜியும் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் சால்வை அணிவித்தும், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் நினைவுப்பரிசு வழங்கியும் பாராட்டினர்.
எண்ணற்ற கணக்காயர்களை உருவாக்கும் கல்லூரியை உருவாக்குவேன்!
அவர்களின் பேத்தி அன்பரசி பட்டயக்கணக்காளர் தேர்வெழுத பயிற்சி பெற்று, தேர்வெழுதும் மய்யம் மதுரை என்பதால், வந்திருந்த தோடு, ‘‘எதிர்காலத்தில் பட்டயக்கணக்காயராகி யாரிடமும் வேலைக்குச் செல்ல மாட்டேன்; எண்ணற்ற கணக்காயர்களை உருவாக்கும் கல்லூரியை உருவாக்கி பணியாற்றுவேன்’’ எனக்கூறியதை எடுத்துச்சொல்லி, விஜிக்கு, சுமதிசெல்வம் சால்வை அணிவித்து, நினைவுப்பரிசும் வழங்கினர்.
பேராசிரியர் சுப.பெரியார்பித்தனின் நீண்ட கால நண்பரான இராஜேந்திரன், இணையருக்குப் பயனாடை அணி வித்து மகிழ்ச்சி அடைந்தார்.பகுத்தறி வாளர்கழகப் பொறுப்பாளர் சடகோபன் மலைபூண்டு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
பெரியார் கொள்கையை
ஏற்றுக் கொண்டதால்…
தொடக்கவுரையில் வே.செல்வம் பேசும் போது இராஜேந்திரன் குடும்பத்தின் கடந்த கால வாழ்வின் நிலை, அவர்களின் கடும் உழைப்பு, பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதால், தம் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டதோடு, அவரால் தான் அடைந்த நன்மைகளை எடுத்துச் சொல்லி நன்றி கூறினார்.
பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் 30 ஆண்டு்களுக்கு முன்னாள் அவருக்கும், இராஜேந்திரனுக்கும் உள்ள உறவு குறித்து எடுத்துக்கூறியதோடு, அவர் இயக்கத்திற்கு வந்ததற்கான காரணங்களை விளக்கிப்பாராட்டினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன், பொங்கல்விழா நம்மை எப்படி பெருமைப் படுத்துகிறது என எடுத்துக் கூறினார்.
மூடத்தனங்களைத் தகர்ப்பதுதான் நமது வேலை!
அ.வேங்கைமாறன் பேசும்போது, பொதுக்குழு உறுப்பினர் ராக்குதங்கம் போராட்டக்களங்களில் காவல்துறை எங்களை மண்டபங்களில் அடைக்காதீர், சிறைக்குக் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்து வார் என்பதை நினைவு கூர்ந்தார். மேலும் உலக நாடுகள் எங்கிலும் இந்த ஜல்லிக்கட்டு போன்ற உயிரைப்பறிக்கும், உடலுறுப்புகளை செயலிழக்கச் செய்யும் விளையாட்டுகள் நடைபெறவில்லை என்பதை விளக்கியும், மூடத்தனங்களைத் தகர்ப்பதுதான் நமது வேலையென்றும் உரையாற்றினார்.
வழக்குரைஞர் நா.கணேசன் நெல்லை செல்லும்போது, எங்கள் உறவு பலப்பட்டது. அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்தது கருஞ்சட்டை என்பது கட்சி மட்டுமல்ல அது கொள்கைப் பாசம் மிக்க குடும்ப உறவு எனக்கூறினார்.
பெரியார் கொள்கை வழி ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வந்தேன்!
நிறைவாக இராஜேந்திரன் தமதுரையில், இயக்கத்திற்கு வருவதற்கு முன் மிகுந்த பக்தி மிக்கவனாகவும், சபரிமலை, பழனி கோவில்களுக்கும் தொடர்ந்து செல்லும் மூடநம்பிக்கைக்காரனாகவும் இருந்தேன். பெரியார் பித்தன் அவர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதற்கு தலைவராகவும் என்னை போட்டு, பாராட்டி புகழ்ந்து பேசினார். ஆனால், அப்புகழ்ச்சிக்குத் தகுதியானவன் நான் இல்லையே என்று வெட்கித்தலை குனிந்தேன்.அன்றிலிருந்தும் சில மாதங்களில் ஆசிரியர் பேசும் கூட்டத்தையும் கண்டு, பெரியார் கொள்கை வழி ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வந்தேன். என்னை ஆசிரியரிடம் அடையா ளப்படுத்தி, அறிமுகப்படுத்தியது அண்ணன் செல்வம்தான். நான் இங்கு சிறப்பு விருந்தினராக வர வில்லை. பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் எனக்குக் கிடைத்த அரசு அலுவலகங்களில் கிடைத்த நன்மைகள், பெருமைகள் ஏராளம்.அதன் காரணமாக எனக்குப் பெரியாரை அடை யாளம் காட்டியஅனைவருக்கும் நன்றி சொல்லத்தான் இங்கு வந்தேன் எனக் கூறினார்.
பெரியார் தத்துவத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டால்…
எனக்கு நல்ல மருமகனை அடை யாளம் காட்டியவர்கள் அண்ணன் செல்வம், தம்பி முருகேசன் ஆகியோர். அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மருமகனான வடக்கு மாசி வீதி முத்தமிழ், என் மகளோடு நல்ல வண்ணம் வாழ்கின்றனர். அவர்கள் இருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் பெரியார் தத்துவத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு அதைச்சரியாக கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் வெற்றியடைவார்கள்.
மகிழ்வான வாழ்க்கையாக அமையும் என்பதற்கு நானே உதாரணம் என்றும், இது எனக்குத் தமிழர் தலைவர் தந்த புத்தி என்பதோடு, எந்நிலையிலும் இயக்கத்திற்கும், தமிழர் தலைவருக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் எனக்கூறி னார்.
நிறைவாக குடும்பத்தோடு வருகை தந்த பி.ஆர்.பி. சந்திரனின் மகன் கமல் சந்திரன் நன்றி கூறினார்.
அனைவருக்கும் இரவு உணவு!
வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் இரா.திருப்பதி, நா.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் க.சிவா தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பா.காசி, துணைத் தலைவர் ஆ.இராஜா, மசு.மோதிலால், ராக்கு தங்கம், ஜேஎஸ்.மோதிலால், மு.மாரிமுத்து, பெத்தானியாபுரம் பாண்டி, செல்லத்துரை, இரமேஷ், பெரியார் பிஞ்சுகள் உதயாராசா, மகாமதிசுரேஷ், இனியாசிவா,. சர்மிளா மாரிமுத்து, கமல்சந்திரன் குடும்பத்தினர், சோ.சுப்பையா, அழகு பாண்டி, பெரியார் பிஞ்சு நன்னன், ஓட்டுநர் தியாகராஜன், ஆட்டோ செல்வம் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.