தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தை – தர்க்கரீதியான வாதத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள். அய்யா அவர்கள் சொல்லாததை – எழுதாததை எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில், தந்தை பெரியாரை களங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு. தங்கள் மேதாவித்தனத்தை காட்ட முயல்வது அவர்களின் அறியாமையின் உச்சம்!
அண்மையில் சென்னை பெரியார் திடலில். 16, 17 நவம்பர் 2024இல், திராவிடர் கழக சொற்பொழி வாளர்களுக்கு நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சொன்னார் – ‘பேச்சாளர்கள் கூட்டங்களில் இரட்டை அர்த்தமுள்ள சொற்களை நகைச்சுவைக்காகக் கூட பயன்படுத்தக் கூடாது’ என்று கட்டளையிட்டு வகுப்பு நடத்தினார். அப்படிப்பட்ட கட்டமைப்பை உருவாக்கித் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
எதிர்காலத்தில் தமது கருத்துகளை – அரைகுறைகள் தொல்லை செய்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டே நல்வாய்ப்பாக தந்தை பெரியாரின் பேச்சும் எழுத்தும் ‘குடிஅரசு’ ‘விடுதலை’ போன்ற ஏடுகளின் வாயிலாக, கால வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது எத்தனைச் சிறப்புக்குரியது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
எங்கே தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகள் வெற்றி பெற்றுவிட்டால். நாம் ஏர் பிடிக்கவும், நடவு செய்யவும், களை பறிக்கவும் நேரிடலாம். முடிதிருத்தும் கடை நடத்திப் பிழைக்கின்ற சூழல் வரும். பிணங்களை எரித்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய நிலைவந்து நேர்ந்துவிடுமே என பார்ப்பனர்கள் அஞ்சுகின்றார்கள், பதறுகிறார்கள் சரி!
சிலர் புலி வேடத்தில் தங்களுக்குத் தாங்களே இரத்தப் பரிசோதனை செய்துகொள்வதுடன். ‘எங்களுடையது புலி இரத்தம். நாங்கள் தான் உண்மையான புலிகள்’ என்று தம்பட்டம் அடிக்கின்றனர், அடிக்கலாம் அது அவர்கள் உரிமை. அதே மனோபாவத்தில் மற்றவர்களை பிராண்டி சேதப்படுத்த நினைத்தால். அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் தமிழர்கள் – அதுவும் தந்தை பெரியாரின் தொண்டர்கள். தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்னும் மக்கள் மனதில் கொள்கையாக வாழ்ந்துவருகிறார். இந்தச் சிறப்பு உலகில் மிகச்சிலருக்கே உண்டு. ‘மானமும் – அறிவும் தான் மனிதர்க்கு அழகு’ என்று உலக மக்களுக்குச் சொன்னவர் தந்தை பெரியார். சிறு குழந்தைகளைக் கூட, வாங்க, போங்க என்று மரியாதையுடன் வழிநடத்தியவர் என்பது அறிவு நாணயம் உள்ள எவரும் அறிந்ததே.
ஒழுக்கமுடைய மனிதன் பேசக்கூசும் சொற்களை நஞ்சாக நீங்கள் கக்கிவிட்டு. தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக- எழுதியதாகச் சொன்னால். அது ஒட்டு மொத்தத் தமிழர்களின் உணர்வோடு விளையாடும் செயல் அல்லவா?
இப்போது புரிந்திருக்கும். தந்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் என்றதும். பேதம் கடந்து நாடு முழுவதும் தன்னெழுச்சியாக ஆர்ப்பரித்து எழுந்த தமிழர்கள். ஆர்ப்பாட்டம். போராட்டம் என்று வீதியில் இறங்கியது கண்டு இப்போது புரிந்திருப்பார்கள்! அடிமைகளின் எஜமானர்களான பார்ப்பன சங்கிகள் கூட்டமும் இப்போது உணர்ந்திருக்கும்.
“பார்ப்பான் எப்போதுமே பாஞ்சாலியைப் பத்தினி என்று சொல்லியே பழக்கப்பட்டவன். உண்மையைப் பொய் என்று சொல்லுவான். பொய்யை உண்மை என்று சொல்வான்” ஆசிரியர் அவர்கள் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ” பெரியாரியல்” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. அதே தலைப்புடன் 1992இல் நூலாக வெளிவந்தது. இந்த நூலில் இருக்கும் பதிவுகள் நேற்றைய – இன்றைய – நாளையக் காலச் சூழலுக்கும் பொருத்தமானது!
நூல் முழுமையும் ஆசிரியரின் குரலில் தந்தை பெரியாரைக் காணலாம்.
“பெரியார் என்று சொல்வது- தன்னுடைய அறிவை உலகத்தார் மெச்சவேண்டும் என்று சொல்வதற்காகவோ அல்லது உலக அறிவாளிகளில் ஒருவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவோ தன்னுடைய பணிக்கு அவர் வந்தவர் அல்ல,
மானிடப்பற்றுதான் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது. மானிடப்பற்று தான் தந்தை பெரியாரின் மய்யம். எதை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அவர்கள் யாரை எதிர்த்திருந்தாலும் – யாரோடு போராடியிருந்தாலும், யாரை ஆதரித்து இருந்தாலும் அதற்கெல்லாம் காரணமே மனிதாபிமானம்தான்.’’ (நூல்: பெரியாரியல் பக்கம் 109)
“நாம் யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டியவர்கள் அல்ல. உண்மையான மனிதத் தன்மையை அறிய வேண்டும்.
‘மனிதனுக்கு பிறப்புரிமை தன்மானம் தான்” என்றார் அய்யா தந்தை பெரியார்.
கடைசி வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து உள்வாங்கிக் கொண்டால் தந்தை பெரியாரையும் புரிந்து கொள்ளலாம். அவரை விமர்சனம் செய்பவர்களையும் புரிந்து கொள்ளலாம்.