உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சன்யாசம் என்ற பெயரில் சிறுமிகளை தேவ தாசியாக விட்டுவருவது தொடர்பாக செய்திகள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால் இன்று வரை மாநில அரசோ, இதர மகளிர் அமைப்புகளோ இவ்விவகாரம் தொடர்பாக ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. சமூகவலைதளத்தில் மட்டுமே பேசப்படும்; பொருளாகி வருகிறது.
முதலில் கும்பமேளா விற்கு வந்த ஒரு இணையர் தமது 13 வயது மகளை ‘தானம்’ கொடுக்கப் போவதாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிறகு இந்த விவகாரம் வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது.
தங்கள் பிள்ளைகளை தாசியாக்க வேண்டு மென்றால் நேராக பிரயாக் – அயோத்தியா உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று அங்குள்ள மடங்களில் வெளியே அமர்ந்திருக்கும் சாமியார்களிடம் சிறுமி கையைப் பிடித்து அவர்களின் கைகளில் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் சென்று விடவேண்டுமாம்.
அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் யார் என்று கூட கேட்க முடியாது, தங்கமும், பொருளும், சொத்துக்களைக் கொடுத்தாலும் இப்படித்தான் மடத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட எவற்றுக்கும் ரசீது அல்லது சான்று எதுவுமே கேட்க முடியாது, கேட்கவும் கூடாது.
இந்த 13 வயது சிறுமியை ‘தானமாக’ பெற்ற (தீக்ஷாவாம்) மகந்த் கைலாஷ்கிரிநாத் (சாமியார் கைலாஷ்கிரி) இந்தச்சிறுமிக்கு 7 ஆண்டு தீட்சை தருவாராம்.
இப்படி விடப்பட்ட சிறுமிகள் மடத்தில் உதவியாளர்களாகவும், சாமியார்களுக்கு கால் அமுக்கிவிடவும் செய்து பிச்சை எடுப்பதற்கும் அனுப்பிவைப்பார்களாம் (தானம் பெறுவதற்காம்). வயதுக்கு வந்த பிறகு அப்பெண்களுக்குத் தனி அறை ஒதுக்கப்படும், அதன் பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும் சாமியார்களுக்குப் பணிவிடை செய்தே காலத்தைக் கழிக்க வேண்டுமாம். இதுதான் தாசியாக்கப்பட்ட சிறுமிகளுக்கான விதிமுறைகளாம்.
நாடெங்கும் இப்படி சிறுவர் சிறுமிகளை யாரோ ஒருவரிடம் விட்டு விட்டு வருவது, அவர்கள் குழந்தைகளைப் பிச்சை எடுக்கவைப்பது கடுமையான குற்றம் என்று சட்டம் கூறுகிறது.
ஆனால் காவி உடை போட்டு விட்டால் எல்லாம் மதநம்பிக்கையின் கீழ் சென்றுவிடும்.
இந்தக் கேவலத்தை நினைத்தால் நெஞ்ச மெல்லாம் பதறுகிறது. ஹிந்து மதவாதம் மனிதனின் அறிவை எப்படி யெல்லாம் நாசப்படுத்துகிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?
பெண் என்றால் வெறும் ஜடப் பொருள்தானா? விற்பனைப் பண்டமா? பிச்சை எடுக்க வைக்கும் எடுபிடியா? சாமியாருக்குக் கை கால் பிடிப்பதோடு நின்று விடுமா?
பிஜேபியைச் சேர்ந்தவரான, ஓர் ஆசிரமத் தில் தலைவராக இருந்தவரான ஒருவர் முதல் அமைச்சரானால், அதன் விளைவு விபரீதமாகத் தானே இருக்க முடியும்!
தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களுக்குப் பாலியல் தொல்லை ஏற்பட்டால் (அதுகூட நடக்கக் கூடாது என்பதுதான் நம் நிலைப்பாடு!) எண்ணெய்க் கொப்பரைச் சட்டியில் போடும் பொருள் கொதிப்பதுபோல் குதியாட்டம் போடும் கூட்டங்களும், பார்ப்பன ஊடகங்களும், இப்படி வெளிப்படையாக சிறுமிகளை சாமியாரிடம் ஒப்படைப்பது என்பது சர்வ சாதாரணம் என்ற நிலை நாள்தோறும் நடப்பதைக் குறித்து மூச்சு விடுவதில்லையே, ஏன்?
தேவதாசி என்ற முறை சென்னை மாகாணத்தில் இருந்ததுண்டு; நீதிக்கட்சி ஆட்சியில் அதனை சட்டப்படியாக ஒழித்த
மாநிலம் தமிழ்நாடு – பெரியார் மண்!
பெரியார் மண் என்று சொன்னால் தீயில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடிக்கும் பார்ப்பனீய சக்திகள் – அவற்றின் எடுபிடிகள், புத்தியிருந்தால் சற்றுச் சிந்தித்துப் பார்க்கட்டும்!