திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு கடந்த 10.1.2025 அன்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 19ஆம் தேதி வரை இது நீடிக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஏழு மய்யங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை முதலே பக்தர்கள் குவிந்தனர்; 3000 காவல்துறையினர் பாதுகாப்பிற்குப் போடப்பட்டு இருந்தனர். பக்தர்கள் ஒரே நேரத்தில் இலவச டிக்கெட்டைப் பெற தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் நான்கு பேர் உயிரி ழந்தனர்; 41 பேர் காயம் அடைந்தனர் திருப்பதி தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்தனர். மருத்துவமனையில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனி வாகனம் மூலம் திருப்பதி வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். நிகழ்வு நடந்த இடத்தையும் பார்வையிட்டார். இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இனி இது போன்ற நிகழ்வு நடக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.
இதில் ஒன்றை சிந்திக்க வேண்டும்; ‘சொர்க்கம்’ என்ற ஒன்று இருக்கிறதா? அது எங்கு இருக்கிறது? அங்கு செல்வதற்கு ஏதாவது சாலை வசதி இருக்கிறதா? அல்லது சொர்க்கத்திற்கு வேறு மார்க்கம் உண்டா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் உண்டா?
‘சொர்க்கம்’ என்றால் அங்கே செல்; சொகுசாக அங்கே வாழலாம்; ரம்பை, ஊர்வசி இருப்பாள்; காராம் பசு இருக்கும்; கற்பகத் தருக்கள் இருக்கும்; எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் என்பதெல்லாம் ஏற்கக் கூடியதுதானா? இந்த அறிவியல் யுகத்திலும் இப்படி அப்பட்டமான பொய்யான கதைகளைச் சொல்லி, மக்களை நம்ப வைத்து, ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பு என்பதும், அதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டு போவதும், எவ்வளவு பெரிய விபரீதம்!
செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லாம் பேசு கின்றோம்; அவற்றின் மூலம் சொர்க்க லோகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் நல்லது. அதைச் செய்யாமல் சொர்க்கவாசல் திறப்பதும், மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவதும் கேலி கூத்துதானே!
ஒரு பழமொழி உண்டு, ‘‘கேட்பவன் கேனையனாக இருந்தால், எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டியது’’ என்பார்களாம். இந்திய அரசமைப்புச் சட்டம் 51 ஏஎச் விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்துகிறது. ஆனால், அரசாங்கமே சொர்க்கவாசல் போன்ற மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கிறது; கேட்டால், மத விடயத்தில் தலையிட முடியாது என்று பொறுப்பு இல்லாமல் தப்பிக்க பார்க்கிறார்கள். அப்படி என்றால் இதற்கு பெயர்தான் மக்கள் நல அரசா? மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும், மதம் என்று வந்துவிட்டால், பக்தி என்று வந்துவிட்டால், அனைத்தையும் துறந்து, மூடநம்பிக்கையில் விழுந்து உயிரையும் இழக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள். ‘சொர்க்கம்’ என்று ஒன்று இருப்பதாகக் கூறுபவர்கள், ‘நரகம்’ என்ற ஒன்றும் இருப்பதாகக் கதை கட்டியுள்ளார்கள். ‘பாவம்’ செய்பவர்கள் அந்த நரகத்திற்குச் செல்வார்களாம் அங்கு ஆயிரம் தலை உள்ள பாம்பு இருக்குமாம்; நரகத்தில் சென்றவர்களை அது விழுங்குமாம்; கொப்ப ரைச் சட்டியில் எண்ணெய் கொதிக்குமாம்; அதில் தூக்கிப் போடுவார்களாம்; இப்படியாக மனிதனை மத மோசடியில் தள்ளி, வாழ வேண்டிய வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியலைப் பற்றி எல்லாம் ஆகாயம் வரை அலசி ஆராய்ந்து வாய் கிழிய பேசும் மனிதர்கள், ஊடகங்கள் இந்த மூடத்தனத்தை பற்றி எல்லாம் ஒரே ஒரு வரிகூட கருத்து தெரிவிக்க முன் வராதது ஏன்? ‘‘ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர் லோகம், மறுபிறப்பு ஆகியவற்றை கற்பித்தவன் அயோக்கியன்’’ என்று தந்தை பெரியார் சொன்னால் ஆத்திரப்படுபவர்கள் இப்பொழுதாவது சிந்திப்பார்களா?