நாட்டின் அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது வெளியிட வற்புறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதாவது கும்பமேளாவில் 14 ஜனவரியன்று எத்தனை பேர் நீராட வந்தார்கள்? ஊடக அறிக்கையில் ஒரு நாளில் 3.5 கோடி பேர் குளித்தார்களாம். ஒரே நாளில் 3.5 கோடி பேர் எப்படி வந்தார்கள் என்று சந்தேகமாக இருக்கிறதா?
மூன்றரைக் கோடியா?
3.5 கோடி மக்கள் வந்தனர் என்று எப்படி கணக்கிட்டார்கள், ரயில் நிலையங்களில் பாதையில் ஒரு மின்னணு கணக்கீடு கருவி இருக்கும் – ஒரு நபர் கடக்கும் போது அது கணக்கிடும் – இப்படியாக ரயில் நிலையங்களில் இவ்வளவு பேர் வந்தனர். இதனை அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைத்த புள்ளி விபரங்களை சேர்த்து ரயிலில் பயணித்தவர்கள் என வெளியிடுவார்கள். இதில் பயணிகளும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் அடங்குவர்.
பயணிகளை எப்படி கணக்கிடுவார்கள் என்றால் விற்பனையான பயணச்சீட்டுகளை வைத்துத்தான்.
அதிகாரப்பூர்வமானதா?
ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் தைனிக் பாஸ்கர், அமர் உஜாலா, தைனிக் ஜாகரண் என ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் என அனைத்து நாளிதழ்களும் 14 ஜனவரியன்று கும்ப மேளாவில் 3.5 கோடி பேர் முழுக்கு போட்டதாக எழுதியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமானது என்றால், பத்திரிகைகள் அவர்கள் சொன்னதை மட்டுமே வெளியிட்டுவிட்டன.
ஒரு நாளில் இத்தனை கோடி பேர் என்பது வரலாற்றுச் சாதனையாகும். உலகளவில் மக்கள் கூட்டம் சேரும் கணக்கீடுகளை ஒப்பிட்டால் இது சாதனைக் கோட்டை தாண்டிவிடுமே, பன்னாட்டு அமைப்புகளின் கண்களுக்கு எட்டவில்லையா – என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியும் இது போலியான கணக்கீடு என்று.
எங்கிருந்து வந்தது?
மக்கள் வருவது மற்றும் இவ்வளவு பேரின் எண்ணிக்கையை கணக்கிடுவது ஒரு சாதாரண செய்தியா என்று நாட்டில் இது பற்றி பேசப்படவில்லையா? இவ்வளவு பேர் கூடுகிறார்கள் என்றால் புள்ளிவிவரம் சேகரிக்கும் அமைப்பு எங்கே – யார் அது, எந்த அமைச்சரவையின் கீழ் அந்த புள்ளி விவரப்புலிகள் வருகிறார்கள் என்று கேள்வி எழுவதும் பொதுவானது. ஆனால், மதத்தின் போதையில் மூழ்கிப் போனவர்களுக்கு இதைக் கேள்வி கேட்டால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்ற அச்சம்.
2019இல் கும்பமேளாவில் எத்தனை பேர் நீராடினார்கள் என்று பார்க்கும்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முதல் நாள் அதாவது மகர சங்க்ராந்தி அன்று 1 கோடியே 40 லட்சம் பேர் நீராடியதாக எழுதப்பட்டிருந்தது.
அன்றும் குத்துமதிப்பாகத்தான் எழுதியிருந்தது. காரணம், அன்றும் எந்த ஒரு புள்ளிவிவர அமைப்புகளும் இதில் ஈடுபடவில்லை. இன்றும் இல்லை. போவோர் வருவோர் கூறுகிறார்கள். அதை அப்படியே எழுதிவிடுவது – சமூக ஊடகங்களில் வேண்டுமென்றால் எழுதலாம். ஆனால், முன்னணி நாளிதழ்கள் இப்படி எழுதலாமா?
புள்ளி விவரம்
2024 ஜனவரி 16இல் ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. சங்கமத்தில் சுமார் 21 லட்சம் பேர் நீராட வந்திருந்தார்கள். தனியார் அமைப்பு ஒன்று இதை வெளியிட்டிருந்தது. அது கொஞ்சம் உண்மையும் கூட – காரணம் பண்டால் எனப்படும் மக்கள் கூடும் கூடாரங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அதில் உள்ள மக்களை வகைப்படுத்தி புள்ளிவிபரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது.
மும்பை நகரத்தின் மக்கள் தொகையே 2.5 கோடி, இந்த பெரிய மக்கள் தொகை பிரயாக்ராஜுக்கு எப்படி வந்து நீராடி திரும்பியது? அதாவது மும்பை மற்றும் புனே இரண்டு நகரங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் சென்று வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்,
மிகைப்படுத்தல்
பொதுவாக கோடை விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் மும்பையில் இருந்து பல லட்சக்கணக்கானோர் ரயிலில் புறப்படுவார்கள். சிறப்பு ரயில் என்று பார்த்தால் 10 அல்லது 20 ரயில்கள் விடப்படும், அப்படி இருந்தும் 10 லட்சம் வரை மக்கள் சொந்த ஊருக்கு சென்றதாகத்தான் ரயில்வே துறை செய்தி வெளியிடும்.
13ஆம் தேதி 1 கோடியே 50 லட்சம் – 14ஆம் தேதி 3.5 கோடி என்று அவர்களாகவே எழுதினார்களா? அலகாபாத் சங்கமத்தில் இரண்டு கரைகளின் மொத்த நீளம் 24 கிலோமீட்டர், 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த பகுதியில் அதிகபட்சம் 20 லட்சம் பேர் வரையும் குறைந்த பட்சம் 8 முதல் 10 லட்சம் பேர் வரையிலும் மக்கள் கூடலாம்.
சரி, ஒரு கணக்கிற்கே வருவோம். ஒரு ரயிலில் சுமார் 2000 பேர் பிரயாக்ராஜ் வந்துவிட்டால், 1 கோடி பேருக்கு எத்தனை ரயில்கள் தேவைப்படும் என்பதை நினைத்துப் பாருங்கள் அதாவது – 5000 ரயில்கள் . இத்தனை பேருக்கு எத்தனை பேருந்துகள் என்று கணக்கிட்டால் அதுவே 5 முதல் 8 லட்சம் வரை தேவை.
போலித் தகவல்கள்
3 கோடியே 50 லட்சம் பேர் ஒரு நாளில் வருவது, தங்குவது, உணவு சாப்பிடுவது, முழுக்கு போடுவது, பூஜை செய்வது, பின்னர் போய்விடுவது என்பது எந்த வகையிலும் அறிவுக்குப் பொருந்தாத ஒன்று. அலகாபாத் மக்கள் தொகை 23 .லட்சம் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.
அறிவுள்ள அனைவருக்கும் இந்த புள்ளிவிவரங்கள் என்பது போலியான ஒன்று என்று நன்றாகவே தெரியும்.
பிறகு ஏன் முன்னணி நாளிதழ்கள் செய்தி வெளியிடுகின்றன என்றால் ஒன்றை சிறியதாக்க அதைவிடப் பெரிய கோடு போடவேண்டும் என்ற சாதாரண ஏமாற்று வேலைதான்.
விலைவாசி உயர்வு
அடிப்படைப் பொருட்களின் விலை ஓராண்டில் 14 மடங்கு உயர்ந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விற்ற சமையல் எண்ணெய் இன்று 300 ரூபாயைத் தாண்டி விட்டது. முறைப்படி பார்த்தால் பொருளாதார நெருக்கடி – இதர சரிவுகளைச் சேர்த்துப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்திருக்கும் – ஆனால் இங்கே என்ன நடக்கிறது. தடாலடியாக 300 ரூபாய் உயர்வு.
ஊதியச் சரிவு
ஆனால், மக்களின் வருவாயோ முதலில் இருந்ததை விட சரிவுதான்.. நொய்டாவில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 600 பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளனர். இவ்வாறு நீக்கப்பட்ட சிலரை ஒப்பந்த முறையில் மீண்டும் வேலைக்கு எடுத்துள்ளனர். அதாவது ரூ 40,000 ஊதியம் வாங்கிய ஒரு நபர் இன்று 12 மணி நேரம் வேலைபார்த்தும் ரூ. 11 ஆயிரம் மட்டுமே வாங்குகிறார். அதுவும் நிரந்தர வேலை இல்லை, ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று மேலே கூறிய இரண்டு நெருக்கடிகள் தான் இந்தியா முழுமைக்கும் நடுத்தர வர்க்க மக்களை பாடாய்ப்படுத்துகிறது.
இதை மறைக்கத் தேடும் காரணங்கள்தான் – மசூதிக்கு கீழே லிங்கத்தை தேடு, மசூதிக்கு மேலே ஒலிபெருக்கியை தேடு, முஸ்லீம் பெயரில் ஊரா? நாம் பாகிஸ்தானிலா இருக்கிறோம் என்று மக்களை வெறியேற்றுவது – ஒன்றிய அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை மக்களுக்கு நேரடியாகவே கத்தியைக் கொடுத்து அதை எப்படி சுழற்ற வேண்டும் என்று தொலைக்காட்சி நேரலையில் வித்தைக்காரர்களைப் போல சுழற்றிக் காட்டுவது என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியில் பாமர மக்களைத் திசைதிருப்பும் வேலை ஓயாமல் நடக்கிறது.
பார்ப்பனர் பிடியிலிருந்து தப்பிய “ஆப்பிள்” நிறுவனர் மனைவி
ஆப்பிள் நிறுவனத்தை துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் கிறிஸ்தவராக இருந்து பின்னர் மயன்மார் சென்று விபாசனா போன்ற தியானக்கலைகளை கற்ற பிறகு தானும் பவுத்த சமயத்திற்கு மாறினார். அவரது குடும்பத்தினரும் அவரைப் பின்பற்றி பவுத்த சமயத்தை தழுவினார்கள்.
காவி உடை
அவர்கள் பவுத்த சமயத்தை தழுவிய நாள் முதல் எங்கு சென்றாலும் காவி ஆடை அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டனர். இந்த நிலையில் அமெரிக்காவில் வைசானந்து என்பவர் யோகா மற்றும் தியானம் கற்றுகொடுக்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவர் தியானம் கற்றுக்கொடுப்பதால் பவுத்த சமயத்தவர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். இந்த நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி ஏற்கெனவே பவுத்தத்தில் உள்ள மகாதான பூமியில் செல்வங்களை வறியவர்களுக்கு கொடுக்கும் கொடையானது தற்போது கும்பமேளாவாக கொண்டாடப்படுவது தெரிந்து அது தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவிக்கு ஸநாதனத்திற்கும் பவுத்தத்திற்கும் வேறுபாடு தெரியாமல் பவுத்தமே ஸநாதனம் ஸநாதனமே பவுத்தம் என்று கதைவிட்டு இங்கு அழைத்துவர திட்டமிட்டார்கள். அதன்படி வைஷானந்திற்கு மகா மண்டேல்ஷ்வர் என்ற பதவியைக் கொடுக்கவும், அவரோடு பெரும் செல்வத்தைக் கொண்டுவரும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவிக்கும் ஏதாவது ஒரு பதவி கொடுக்கலாம் என்றும் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் இந்தியா வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பவ்லினுக்கு 20 நாள் தீட்சை கொடுக்க வேண்டும் – பிறகு நீங்கள் முழுமையான துறவி நிலையை அடைவீர்கள் என்று கதைவிட்டுள்ளனர். இதனை நம்பி 13.1.2025 அன்று கடுங்குளிரிலும் சாமியார் கூட்டங்களோடு தண்ணீரில் மூழ்கி எழுந்தவரின் உடல் நிலை மோசமடையத்தொடங்கியது.
உண்மை முகம்
இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கும் போது சாமியார் கூட்டங்களின் உண்மை முகத்தை அறியும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தாங்கள் தேடும் பவுத்தம் வேறு ஸநாதனம் என்பது வேறு என்பதைத் தெரிந்துகொண்ட அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொண்டு பூடான் சென்றுவிட்டார்.
சப்பைக்கட்டு
இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் நிரஞ்சனி அகாடா சாமியார் மடத்தினர் கூறியதாவது: லாரன் பவ்லின் மகா கும்பமேளாவில் 17 நாள்கள் கல்பவாசம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல் நாள் மகர சங்கராந்தி அன்று ராஜகுளியல் முடித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரால் மறுநாள் அம்ரித் எனும் 2ஆவது ராஜகுளியலை எடுக்க முடியவில்லை. இருப்பினும் தலையில் தண்ணீரைத் தெளித்து விட்டு அகாடா தலைவர் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்த் கிரி வழிகாட்டுதலின்படி, மகா காளியின் மந்திரங்களை ஓதக்கூறினோம். பெரும் செல்வந்தராக இருந்தும் எங்களுடன் மிக எளிமையாகவே இருந்தார்.
அகாடாவில் பல்வேறு மூத்த துறவிகளிடம் ஸநாதனம் குறித்து கேட்டறிந்தார். ஹிந்து மதத்தில் இணைவார் அல்லது துறவியாவார் எனக் கருதினோம். உடல்நலம் சரியான பிறகு அவர் மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அகாடாவினர் தெரிவித்தனர்.
ஆனால், அவர் எனக்கு உங்கள் சகவாசம் ஒன்றுமே வேண்டாம் என்று கூறிவிட்டு பூடானில் உள்ள பவுத்த பகோடாவிற்குச் சென்றுவிட்டார். .
புத்த மதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ், 1970-களில் இந்தியா வந்த பிறகு, புத்த மதத்தை பின்பற்றத் தொடங்கினார். கிறிஸ்தவரான ஸ்டீவ் பின்னர் புத்த மத முறைப்படி லாரன் பவ்லினை திருமணம் செய்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு இறந்த ஸ்டீவ் உடலுக்கு அவரது குடும்பத்தினர் புத்த மதத்தின் வழியில் இறுதி நிகழ்வை செய்தனர்.
கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் கனவாக இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதிய ஒரு கடிதம், ரூ.4.2 கோடிக்கு ஏலம் போனது. இந்நிலையில், கணவர் ஸ்டீவின் ஆசைப்படி மகாதான பூமியில் கொடையளிக்க, மகா கும்பமேளாவுக்கு செல்லப்போவதாக லாரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது.