குறள் நெறி பரப்புவோம்!

2 Min Read

‘விடுதலை’ 31.12.2024 தேதியிட்ட இதழைப் படித்து, அதன் மூலம் பெற்ற உணர்வு, ஆர்வம் காரணமாக இதை எழுதுகிறேன்.
முக்கடல் சூழும் குமரி முனையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் முகவரி எனப்படும் வள்ளுவர் சிலையை, நம் ஆசிரியர் பேரறிவுச் சிலை (STATUE OF WISDOM) என்று சுட்டிக்காட்டியது என்றும் போற்றக்கூடிய முத்தான சொற்கள். மூளைக்குப் பூட்டப்பட்ட மூடநம்பிக்கை விலங்கை உடைக்கும் பொருள் பதிந்தசொற்கள்.

‘திராவிட மாடல்’ அரசின் சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருக்குறள் தலைவராகவே வாழ்ந்தார் என்று கூறியது வரலாற்றில் நிலைத்திருக்கும் உண்மை அறிஞர் அண்ணா, ‘குறள் உங்கள் இல்லங்களில் உள்ளங்களில் பரவ வேண்டும்’ என்று கூறியதை நினைவுபடுத்தினார். அவர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார். நாம் செய்ய வேண்டியது. திருக்குறளை இன்னும் இன்னும் அதிகமாக இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதாகும்.

இதையொட்டி விழுப்புரம் நகரில், குறள் மணம் வீசும் ஓரிருசெய்திகளைக் கூற விரும்புகிறேன். இந்த செய்தி மற்றவர்கள் பின்பற்ற தூண்டுகோலாகலாம்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பலரும் அறிந்த தெரு, நடராசர் தெரு, அந்த தெருவில் புதிதாகக்கட்டிய வீட்டின் அறிமுக விழா 29.08.2016-இல் சிறப்பாக நடைபெற்றது. அந்த வீட்டின் முகப்பில் நீளமான கருப்பு பளிங்குக் கல்லில்
‘அரம்போலும் கூர்மைய ரேணும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்” என்ற குறள் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தைத் திறந்து வைத்ததுடன், குறள் கல்வெட்டையும் திறந்து வைத்து மறைந்த கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதற்செல்வி, சிறப்பு உரையை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனும் உரையாற்றினார்.
புதிய வீட்டுக்குக் குடிவந்தவர், சமண மதத்தை சேர்ந்தவர், அவர் வீட்டின் குறள் கல்வெட்ைடப் பார்த்து அவரின் வர்த்தமான் ஜவுளி நிறுவனத்தில், புலால் மறுத்தல் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளை எழுதி வைத்தார்.

நகரத்தின் கிழக்கு சண்முகபுரம் குடியிருப்பில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குப் பக்கத்து வீட்டின் வாயிலில் ‘குறளகம்’ என்ற கல்வெட்டும். அதன் கீழ் தந்தை பெரியாரின் பொன் மொழியான ‘‘உன் நெறி எது என்று கேட்டால் குறள் நெறி என்றும், உன் மதம் எது என்று கேட்டால் குறள் மதம் என்றும் சொல்!’’ என்ற கல்வெட்டும் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீட்டில் உள்ளது. இந்த கல்வெட்டை அஞ்சல் நிலையம் வரும் மக்கள் படிக்காமல் செல்வதில்லை. இந்த இரண்டு வீட்டுக் கல்வெட்டுகளையும் வைத்தவர் தற்போது கோவையில் வசிக்கும் மு.வி. சோமசுந்தரம் ஆவார்.

– அ.சதீஷ்
விழுப்புரம் நகர திராவிடர் கழகச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *