அடித்துச்சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்
சென்னை, ஜன. 13- ‘மதுரை – துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு, தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை’ என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு, புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும், அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி.
தமிழ்நாடு அரசு ஒருபோதும், எந்த விதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஆணையிட்டது
இந்த புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, ரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி, 926 எக்டேர் நிலம் எடுப்பு செய்து, ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. மேலும், இந்த திட்டம் உள்ளிட்ட பிற ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு, கடந்த ஆண்டு ஆக., 19ஆம் தேதி முதலமைச்சர், ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டார்.
பொறுப்பற்ற முறையில் பேசலாமா?
அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில்-, தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என, ஒன்றிய அமைச்சரே
பொறுப்பற்ற முறையில் பேசலாமா?
இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, விருதுநகர், மதுரை மற்றும் துாத்துக்குடி ஆகிய ஆட்சியாளர்களால், ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் பெறப்படவில்லை. அந்த கடித விவரங்களாவது ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு தெரியுமா?
பணி முடிக்கப்பட்டு விட்டது
தமிழ்நாடு ரயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கை கேட்கப்பட்டது. அதன்படி, மதுரை – துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தில், மீளவிட்டான் – மேலமருதுார் வரை, 18 கி.மீ., அளவில் பணி முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பிரிவுகளுக்கான பணி, குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
துரிதப்படுத்தவே கோரி வருகிறோம்
எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி எந்தவித கடிதமும் எழுதவில்லை; வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு எதுவும் சொல்லப்படவில்லை; மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே, தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை, ஒன்றிய அமைச்சரே வெளியிடலாமா? முதலமைச்சரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.