தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
சென்னை,ஜன.13- தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 7ஆவது முறையாக திமுகவே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் உறுதியா இருக்கிறார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பொங்கல் வாழ்த்து மடல்.
தமிழரின் பண்பாடு
சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை உலகத்திற்கு உரக்கச் சொல்கின்ற வகையில் ஜாதி – மத – பாலின பேதமின்றி, இயற்கையைப் போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்குத் துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேயத் திருவிழாதான் பொங்கல் நன்னாள். அது ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதைத் திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது.
தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். இல்லத்தில், உள்ளத்தில், உணர்வினில், கலையில், இலக்கியத்தில், வீர விளையாட்டுகளில், வாழ்வியல் நடைமுறைகளில் தமிழர்களுக்கெனச் சிறந்த பண்பாடு உண்டு என்பதைக் காட்டுகின்ற வகையில் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் வாழ்கின்ற மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். வேளாண் உழைப்பின் விளைச்சலைப் போற்றும் வகையில் புதுப்பானையில் பொங்கலிட்டு, தங்கள் வாழ்க்கையில் விடியல் தந்த சூரியனுக்கு அதைப் படையலிடும் பழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள்.
அறுவடைத் திருநாள்
அறுவடைத் திருநாளாம் பொங்கலின் அடையாளம் என்பது, வாழ்க்கையில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதுதான். அதனால்தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் உண்மையான மகிழ்ச்சிப் பொங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் வாழ்விற்கு விடியல் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான உரையைக் காழ்ப்புணர்வுடன் ஆளுநர் படிக்காமலும், தமிழ்த்தாய் வாழ்த்தினை மதிக்காமலும் வெளியேறினாலும், பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட அதன் தமிழாக்க உரை, இந்தியாவில் தமிழ்நாடு எந்தெந்த இலக்குகளில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலே அமைந்திருந்தது.
மிகப் பெரிய முன்னேற்றம்
தொழில் வளர்ச்சியில் கடந்த மூன்றாண்டுகளாக மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு, உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, பரவலான அளவில் மாநிலமெங்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, இலட்சக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்குகிற கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 8 இலட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாட்களுடன் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 807 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாடு திகழ்கிறது.
பெண் பணியாளர்கள்
இந்தியாவில் உள்ள பெண் தொழிற் பணியாளர்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது என்பதையும் அண்மையில் வெளியான ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முதல் 20 நகரங்களில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாநகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன.
பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்வதை உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவதன் விளைவாகவே இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது தமிழ்நாடு.
பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கிடும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உங்களில் ஒருவனான என்னை அப்பாவாக, அண்ணனாக, மகனாக நினைக்கின்ற தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்து, சுதந்திர வெளியைப் பெருகச் செய்து, சுயமரியாதையுடன் சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு.
இந்த அரசு அமைந்த நாள் முதலே பெண்களின் நலனுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டு பெண்களின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சிய புரட்சிகரத் திட்டங்களாக, இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டங்களாக இருக்கின்றன. நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்களிலும் பெண் பயனாளிகள் அதிகளவில் உள்ளனர்.
சென்னை சங்கமம்
சமத்துவம் என்பதைச் சொல்லாக இல்லாமல், செயலாக நிறைவேற்றும் திருநாளாம் பொங்கல் நன்னாளைப் பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் சென்னையில் நாட்டுப்புறக் கலைகளை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 2025 ஜனவரி 13 முதல் 17 வரை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. தமிழர்கள் அனைவரும் அவரவர் ஊர்களில் நம் பண்பாட்டுப் பெருமை மிக்க நிகழ்வுகளை நடத்தி மகிழ்ந்திட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் திமுக உடன்பிறப்புகள் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – பகுதி – வட்டக் கிளைகள் வாரியாகத் தமிழர் பெருவிழாவான பொங்கல் திருநாளைக் கொண்டாடி திமுக நிர்வாகிகளுக்கும் மூத்த முன்னோடிகளுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கி வரும் மகிழ்வான செய்திகளை முரசொலி வாயிலாகவும், கலைஞர் செய்திகள் வாயிலாகவும் நான் கவனித்து வருகிறேன். உடன்பிறப்புகள் இத்தனை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பொங்கலைக் கொண்டாடும்போது, உங்களில் ஒருவனான எனக்குள்ளும் அந்த உத்வேகமும் உற்சாகமும் ஊற்றெடுக்காமல் இருக்குமா?
என்னை ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற வைத்து, அடுத்த வெற்றிக்கும் உறுதியளித்திருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுடன் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடி, திமுக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் பரிசுகளையும் பொங்கல் வாழ்த்துகளையும் வழங்கி மகிழ்ந்தேன். துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி அவர்களும், அமைச்சர் பெருமக்களும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் திமுகவின் சார்பில் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
தை முதல் நாள்
திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளைத் தமிழர் பண் பாட்டு விழாவாகக் கொண்டாடுவோம் என்பது முக்கியமான தாகும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், இனமானப் பேராசிரியர் என எண்ணற்ற திராவிட இயக்க முன்னோடிகள் தை முதல் நாளின் சிறப்பை முன்னிறுத்தி, பொங்கல் திருநாளைத் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக முன்னெடுத்த பெருமைமிகு வரலாறு நமக்கு உண்டு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கலை – இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து, மகிழ்ந்திட வேண்டும் என உங்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்பிட முனையும் அரசியல் எதிரிகள் இவற்றை எதிர்கொண்டபடியே, தெளிவான திட்டங்களுடனும், துணிவான செயல்பாடுகளுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்வாகத் திறனுடனும் கடமையாற்றும் திராவிட மாடல் அரசின் ஆட்சியில் அன்றாடம் நிறைவேறும் சாதனைகளால், ஏழாவது முறையாக தி.மு.க.வே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம்.
‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்.
திமுக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என கூறப்பட்டுள்ளது.