எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டு வந்த நுழைவுத் தேர்வுகளைத் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் திமுக, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது, மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் இருந்த நுழைவுத் தேர்வுகளை நீக்கி, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களைத் தகுதியாக மாற்றி அறிவித்தது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்பு பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
2006 ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற கலைஞர், ஆளுநர் உரையிலேயே “நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும்” என அறிவித்தார். அத்துடன், அப்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனந்தகிருஷ்னன் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்தார். அனந்தகிருஷ்னன் கமிட்டி சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. முதல் கூட்டத் தொடரிலேயே பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 2007 ஆம் கல்வி ஆண்டிலிருந்த்து 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கொண்டு பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவந்தது.
2010 இல் இந்திய மருத்துவக் கழகம், மருத்துவப்படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு அவசியம் என்கிற விதிமுறைகளை வகுத்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அப்போதைய ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்துக்கும் கடிதம் எழுதினார். அதில், ‘‘2007-2008ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது. இது தொடரப்பட வேண்டும்’’ என வலியுறுத்தியிருந்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழ்நாடு அரசு இணைத்துக் கொண்டது.
தமிழ்நாடு அரசு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய மருத்துவக் கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு அறிவிப்புக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தேசம் முழுவதும் வெவ்வேறு முறையில் மருத்துவத் தேர்வு நடைபெறுவதாகவும் தேர்வில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறிய இந்திய மருத்துவக் கழகம், 2012 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனாலும் நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, நீட் தேர்வை ஓராண்டு ஒத்திப்போட்டது ஒன்றிய அரசு.