தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு திராவிட இயக்கம் உள்ளிட்ட வரலாறுகள் புரியாத – தெரியாத காரணத்தால், சில பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசியமும், கடமையும் நமக்கு இருப்பதால்தான் இந்த விளக்க அறிக்கை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் ‘நீட்’ தேர்வு குறித்து கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
‘‘கடந்த 2021 தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம்’’ என்ற பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால், தற்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வை ஒழித்தவர் முதலமைச்சர் கலைஞர்
இதுகுறித்து…
அரசியலுக்குப் புதிதாகக் காலடி எடுத்து வைத்துள்ள நடிகருக்குச் சில பால பாடங்களைச் சொல்லித் தருவது நமது கடமையாகும்.
(1) தி.மு.க.வைப் பொறுத்தவரை சமூக நீதியில் கொள்கை ரீதியாகவே அக்கறை கொண்ட கட்சியாகும்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். (தமிழ்நாடு செய்தி சுற்றுலா மற்றும் தமிழர் பண்பாட்டு செய்தி வெளியீட்டுப் பிரிவு செய்தி வெளியீடு எண்: 322. 30.5.1984)
திராவிடர் கழகமும், தி.மு.க.வும் கடுமையாக அதனை எதிர்த்தன.
திராவிடர் கழகம் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, போர்ச் சங்கு ஊதியது.
மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்களால் நுழைவுத் தேர்வு அரசாணை கொளுத்தப்பட்டது.
(2) முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, திராவிடர் கழகத் தலைவர் ஆலோசனைப்படி, கல்வி யாளர் ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் ஆலோசனையை ஏற்று, சட்டத் திருத்தம் செய்து நுழைவுத் தேர்வை ரத்து செய்தார்.
அதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றபோது, கல்வி நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டதால், நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதற்கு மேலும் உச்சநீதிமன்றம் சென்றனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
‘நீட்’டை எதிர்த்து வழக்கைத் தொடுத்ததும்
கலைஞர் அரசுதான்!
(3) 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில், அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது (21.10.2010).
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.தான் வழக்குத் தொடுத்தது!
நீதிபதி திரு.ஜோதிமணி, ‘நீட்’ தேர்வுக்குத் தடை விதித்தார் (18.7.2013).
(4) நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் ‘நீட்’டை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்குகளையும் சேர்த்து உச்சநீதிமன்றமே விசாரித்தது.
‘நீட்’ செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்கிரஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவு களின்படி ‘நீட்’ செல்லாது என்ற நீதிபதி ஏ.ஆர்.தவேயைத் தவிர, மற்ற இரு நீதிபதிகளும் பெரும்பான்மை தீர்ப்பளித்தனர் (18.7.2013). அதற்குமேல் ஒன்றிய காங்கிரஸ் அரசு மேல்முறையீடும் செய்யவில்லை.
மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்குத் தேர்வு நடத்தும் உரிமையில்லை என்று தீர்ப்பில் ஓங்கி அடித்துக் கூறப்பட்டது.
(5) இந்தத் தீர்ப்பில் மாற்றம் வந்தது எப்பொழுது என்பதுதான் முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, அதிகாரத்துக்கு வந்த பி.ஜே.பி. அரசு என்ன செய்தது என்பது தான் கவனத்திற்குரியது. ‘நீட்’ செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பி.ஜே.பி. அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் உள்ள சூழ்ச்சியும், தந்திரமும் கவ னிக்கத்தக்கது. எந்த நீதிபதி ஏ.ஆர்.தவே, ‘நீட்’ செல்லும் என்று மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்தாரோ, அந்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வு வழக்கை விசாரித்தது. (நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைதான். ஓய்வுக்குப் பின் இந்த நீதிபதி ஏ.ஆர்.தவே என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு அதிகாரம் இருந்தால், கீதையைக் கட்டாயப் பாடமாக்குவேன் என்றார். அப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவர் தலைமையில்தான் நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது).
நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் அமைந்த அமர்வு ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பளித்தது.
(குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, இந்த ‘நீட்’டை எதிர்த்தார் என்பதையும் மறந்து விடாதீர்கள்).
‘நீட்’ தேர்வைக் கட்டாயம் நடத்தவேண்டும் என்று கருத்துத் தெரிவித்த ஒரு நீதிபதியே, சீராய்வு மனுமீதான வழக்கில் தலைமை நீதிபதியாக அமர்ந்தது, நீதிமன்ற மரபுக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதை எல்லாம் பொருட்படுத்தவில்லை என்பது தலைக்குனிவுதான்!
மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது பி.ஜே.பி. அரசே!
(6) சமூகநீதிக்கு எதிரான பி.ஜே.பி. ஆட்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ‘நீட்’ தேர்வை நிரந்தரப்படுத்தும் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.
இதில் அ.தி.மு.க. எம்.பி.,க்கள் செய்த துரோகத்தை சமூகநீதி யாளர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்த 53 அ.தி.மு.க. எம்.பி.,க்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தார்கள் என்பதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது; மாநிலங்களில் மூன்றே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. எம்.பி.,க்கள் சட்டத் திருத்தத்துக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
(7) அதே அ.இ.அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமை யில் ஆட்சி அமைந்த நிலையில், தமிழ் மண்ணின் உணர்வைப் புரிந்துகொண்ட காரணத்தால், ‘நீட்’ விலக்கு மசோதாவை நிறை வேற்றியது. தி.மு.க. உள்பட முக்கிய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 21 மாதங்கள் உருண்டோடின. குடியரசுத் தலைவரிடமிருந்து எந்தவிதப் பதிலும் இல்லை. அ.தி.மு.க. அரசும் மவுனம் சாதித்தே வந்தது.
அந்த மவுனத்தின் பின்னணியில் அ.தி.மு.க. அரசின் துரோகம் குடிகொண்டு இருந்தது என்பதை இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும். 2019 ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றத்தில்தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது; 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியே ‘நீட்’ விலக்கு மசோதாக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது என்பது அம்பலமாகிவிட்டது. (இவர்கள்தான் தி.மு.க. ஆட்சி ‘நீட்’டை ஏன் ஒழிக்கவில்லை என்று கூச்சல் போடும் அரசியலை நடத்திக் கொண்டுள்ளனர்).
தி.மு.க. தன் வாக்கைக் காப்பாற்றவில்லையா?
(8) ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. என்ன செய்தது? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவேண்டும் என்ற கடமை உணர்வில், முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே ‘நீட்’ விலக்கு மசோதாவை நிறைவேற்றியது. அதோடு நிற்கவில்லை – சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
‘நீட்’ தேர்வு என்பது முழுக்க முழுக்க கிராமப்புற இருபால் மாணவர்களுக்கு எதிராக உள்ளது எனவும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை ‘நீட்’ தேர்வு உறுதி செய்வதாகத் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
(9) தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.இரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உரிய முறையில் குடியரசத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல், ஊறுகாய் ஜாடியில் ஊற வைத்திருந்தார். கடும் எதிர்ப்புக்கும், அழுத்தத்திற்கும் பிறகு, இப்பொழுது அது ஒன்றிய அரசின் உள்துறையில் குறைட்டை விட்டுத் தூங்குகிறது.
(10) ‘நீட்’ என்பது ஆண்டாண்டுக்காலமாக கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட இருபால் மாணவர்கள் வெற்றி பெறப் பெருந்தடையாக உள்ளது.
அரியலூர் அனிதாக்கள் தற்கொலை!
பல லட்சம் ரூபாய் செலவு செய்து, கோச்சிங் சென்டரில் ஓராண்டு, ஈராண்டு பயிற்சி பெற்றவர்தான் ‘நீட்’ வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
கிராமப் பள்ளியில் படித்த மூட்டைத் தூக்கும் ஒரு தொழி லாளியின் மகள் – முதல் தலைமுறையாகப் படித்த அரியலூர் குழுமூர் அனிதா, பிளஸ் டூ தேர்வில் 1200–க்கு 1176 மதிப்பெண் பெற்றது என்பது சாதாரணமானதா?
ஆனால், நீட் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் வெறும் 86. விளைவு, மருத்துவக் கனவு கலைந்து, தற்கொலையில் முடிந்ததுதான் மிச்சம்! இதேபோல, எண்ணற்ற இருபால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகும்கூட, சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டும் கொள்கையைக் கொண்ட ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கண்கள் கசியவில்லை.
நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு என்ன கூறுகிறது?
71 விழுக்காட்டினர் ஒருமுறைக்கு மேல் ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள்தாம் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 8 லட்சம், ரூ.7 லட்சம்வரை கட்டணம் கட்டிப் படிப்பவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று அந்தக் குழு ஆதாரப்பூர்வமாகக் கூறியுள்ளதே!
(இந்த நிலையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி யினருக்கு –பார்ப்பனர்களுக்கு EWS 10 விழுக்காடு இட ஒதுக்கீடாம்! Socially and Politically Disadvantaged Group என்று தேசிய கல்விக் கொள்கையில் நுழைக்கப்பட்டு இருக்கும் தந்திர வலையையும் கவனிக்கத் தவறக்கூடாது).
‘நீட்’ தேர்வில் நடைபெற்ற ஊழல்கள்!
(11) சரி, இவ்வளவும் செய்கிறார்களே, இந்த ‘நீட்’ தேர்வு ஊழலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதா?
கேள்வித் தாள்கள் கசிந்து பெரும் விலைக்கு விற்கப்பட்ட செய்தி வெளிவரவில்லையா?
ஆள் மாறாட்டங்கள் நடைபெறவில்லையா?
மத்திய பிரதேசத்தில் ‘வியாபம்’ ஊழல் பிரசித்திப் பெற்ற ஒன்றாயிற்றே! அம்மாநிலத்தில் ஆளுநர் உள்பட 40 பேருக்குமேல் தற்கொலை செய்துகொண்டது ஏன்? எல்லாம் ஊழலின் காரணங்கள்தானே!
‘நீட்’ தேர்வில் நடைபெற்ற ஊழல்கள்பற்றி ‘இந்துஸ்தான்‘ நாளேடு பட்டியல் போட்டு வெளியிட்டதே!
இந்த ‘நீட்’தான் தகுதி திறமைக்கு அளவுகோலாம்.
‘நீட்’ தேர்வுக்கான கேள்வித்தாள்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. அப்படி என்றால், இதன் பயன் சி.பி.எஸ்.இ. வழி படிப்பவர்களுக்குத்தானே போகும்.
எடுத்துக்காட்டுக்காக 2016–2017 ஆம் ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்கு ‘நீட்’ இல்லாத போது பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் கிடைத்த இடங்கள் 62.
2017–2018 இல் ‘நீட்’ தேர்வு வந்த பிறகு சி.பி.எஸ்.இ. வழி படித்த இருபால் மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. 1158 இடங்கள் அதிகம் பெற்றுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட வர்களுக்கும்தான் இழப்புகள்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ‘நீட்’ இல்லாதபோது கிடைத்த இடங்கள் 30; நீட்டிற்குப் பின் வெறும் 5.
‘நீட்’ என்பது நீட்டாக ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற மாணவர்களையும் தலையெடுக்காமல் தடுப்பதற்கே!
த.வெ.க. தலைவர் நடிகர் அன்று பேசியது என்ன?
(13) இதுதான் முத்தாய்ப்பான பகுதி!
3.7.2024 அன்று கட்சியைத் தொடங்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசியது என்ன?
‘நீட்’டைப் பொறுத்தவரை மக்கள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டனர். தமிழ்நாடு அரசு ‘நீட்’டை எதிர்த்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வு களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்று பேசினாரா, இல்லையா?
அப்படி என்றால், ‘நீட்’ விலக்குச் சட்டத்திற்குத் தடை எங்கே இருக்கிறது? ஒன்றிய அரசிடம்தானே அந்தத் தடை இருக்கிறது என்கிற போது, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சாடவேண்டியதாக இருந்தாலும், விமர்சிக்கவேண்டியிருந்தாலும், ஏன் கண்டிக்க வேண்டியிருந்தாலும் அது ஒன்றிய அரசைத்தானே! பின் ஏன் இப்போது தடுமாற்றம்?
அந்த அதிகாரம் அதனிடம்தானே இருக்கிறது? மாநில அரசு கடமை தவறி இருந்தால், கண்டிக்கலாம்; மாநில சட்டப்பேரவை ‘நீட்’ விலக்குக்கோரி தீர்மானம் நிறைவேற்றியதை மனதார பாராட்டிய பிறகு, மாநில அரசைக் குறைகூறுவது தடுமாற்றமா? நிர்ப்பந்தமா?
கண்டிக்கவேண்டியது – ‘நீட்’டை ரத்து செய்யாத ஒன்றிய அரசைத்தானே! அதனை செய்ய விஜய் ஏன் தயங்குகிறார்? ஏன் அச்சப்படுகிறார்?
பாடம் கற்றுக் கொள்க!
சினிமாவில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசுவது போல பேசுவது அரசியலில், பொதுவாழ்க்கையில் எடுபடாது என்பதை புதிதாக அரசியலில் கால்பதிக்கும் நடிகருக்குப் பாலபாடமாக சொல்லிக் கொடுக்கிறோம், சிந்தியுங்கள்!
அரசியல் வரலாற்றுப் பாடங்களைப் படித்தால்தான் புரியும்! அது பாயாசம் குடிக்கும் வேலையல்ல!
சென்னை தலைவர்,
13.1.2025 திராவிடர் கழகம்.