சென்னை. ஜன. 12- அனைத்து உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 வழங்க வேண்டும் எனக் கோரி பாஜ வழக்குரைஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி ஒரு பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், மனுதாரர் ஜி.எஸ்.மணி தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜராகி, பொங்கல் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வர இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து தகுந்த நிவாரணம் அளிக்குமாறு உத்தர வேண்டும்.
ஏற்கெனவே இந்த நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும், வழக்கு பட்டியலிப்படவில்லை என்று முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஏற்கெனவே நாங்கள் இந்த மனுவில் அவசர வழக்காக விசாரிக்க எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று நிராகரித்த பிறகு மீண்டும் நீங்கள் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கூறுவதை ஏற்க முடியாது. இது போன்று தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டால், மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார்.
மாநில கட்சியாக அங்கீகாரம்
வி.சி.க.வுக்கு பானைச் சின்னம்
சென்னை, ஜன. 12- விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் 10.1.2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை சின்னமும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் 10.1.2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.